தமிழகத்தில் சொத்து விற்பனை உள்ளிட்ட பத்திரங்கள் அந்தந்த பகுதியில் உள்ள சார் - பதிவாளர் அலுவலகங்கள் வாயிலாக பதிவு செய்யப்படுகின்றன. அந்த பத்திரங்களை அடுத்த சில மணி நேரங்கள் அல்லது ஓரிரு நாட்களுக்குள் உரியவர்களுக்கு அளிக்க வேண்டும்.
இதில் கட்டட கள ஆய்வு பணிகளுக்காக பத்திரங்களை தாமதப்படுத்த கூடாது என்று பதிவுத்துறை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இருப்பினும் இந்த உத்தரவை பெரும்பாலான சார் - பதிவாளர்கள் மதிப்பதில்லை.
சென்னை மதுரை திருச்சி கோவை மண்டலங்களில் பல சார் - பதிவாளர் அலுவலகங்களில் 'பதிவு முடிந்து விட்டது; நேரில் வந்து பத்திரத்தை வாங்கிச் செல்லுங்கள்...' என்று சம்பந்தப்பட்ட நபர்களுக்கு தகவல் வருகிறது.
இதையடுத்து அவர்கள் சென்றால் 'கட்டட கள ஆய்வு இன்னும் முடியவில்லை...' என்று கூறி திருப்பி அனுப்புகின்றனர். கட்டட கள ஆய்வு பணி நிலுவையில் இருக்கும் போது விண்ணப்பதாரருக்கு அலைபேசிக்கு தகவல் வந்தது எப்படி என்ற கேள்வி எழுகிறது.
சார் - பதிவாளர் அலுவலகங்களில் உரிய, 'கவனிப்பு' இன்றி பத்திரங்கள் பதிவாவது இல்லை. கட்டட கள ஆய்வு என்ற விஷயத்தை காரணமாக கூறி, சார் - பதிவாளர்கள் மக்களை அலைக்கழிக்கின்றனர்.
அனைத்து விஷயங்களும் சரியாக இருந்தால் மட்டுமே, ஒரு பத்திரம் பதிவு செய்யப்படும். கட்டட கள ஆய்வு தொடர்பாக பெரிய வேறுபாடு இருந்தால் சார் - பதிவாளர் சம்பந்தப்பட்ட நபரிடம் அதற்கான தொகையை வசூலிக்கவழிவகை உள்ளது.ஆனால், சார் - பதிவாளர்கள் வேண்டுமென்றே மக்களை அலைக்கழிக்கின்றனர். இந்த விஷயத்தில் பதிவுத்துறை உரிய நடவடிக்கை எடுக்கும் என்றுஎதிர்பார்க்கிறோம்.
- பி.பாலமுருகன், ரியல் எஸ்டேட் சொத்து மதிப்பீட்டாளர்
வாசகர் கருத்து (4)
சம்பந்தப்பட்ட நபர்களுக்கு தகவல் வந்தபின்னும் 'கட்டட கள ஆய்வு இன்னும் முடியவில்லை என சொன்னால் மேலும் ஒரு கட்டிங் தேவைப்படுகிறதென்று அர்த்தம். அதை கொடுத்து விட்டால் அரைமணி நேரத்தில் வேலை முடியும்.
கையூட்டு தரும் பல முக்கிய துறைகளில் பணியாற்றுபவர் மாத வருமானத்தை பிரதி மாதமும் தணிக்கை செய்யலாம்.
கேட்ட லஞ்ச துட்டில் கம்மியா குடுத்திருப்பானுவ.
பாகப்பிரிவினை வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், அது சமந்தமாக தடங்கல் மனு கொடுத்தும், எந்த ஒரு விசாரணையிம் இல்லாமல், மனு கொடுத்தவருக்கு தகவல் கொடுக்காமல். 1.2 கோடி மதிப்புடைய சொத்தினை 17.8 லட்சத்திற்கு முறைகேடாக பொள்ளாச்சி சார்பதிவாளர் அலுவலகத்தில் கிரையம் பதிவு செய்யப்பட்டுள்ளது.