ADVERTISEMENT
கும்மிடிப்பூண்டி: சென்னை- - கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் பகுதியில், சுண்ணாம்புகுளம் மேம்பாலம் சந்திக்கும் இடம், விபத்து அபாய பகுதியாகும்.
அதனால் அப்பகுதியில் சென்னை நோக்கி செல்லும் சாலையில், வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த பேரிகாடுகள் வைக்கப்பட்டுள்ளன.
ஆனால் விபத்து அபாய பகுதி என வாகன ஓட்டிகளை எச்சரிக்கை செய்யும் ஒளிரும் அறிவிப்பு பலகைகள் ஏதும் வைக்கப்படவில்லை.
இரவு நேரத்தில் வேகமாக கடக்கும் வாகனங்கள், எதிர் திசை சாலையில் வரும் வாகனங்களின் முகப்பு விளக்கு வெளிச்சத்தில், பேரிகாடுகள் இருப்பது தெரியாமல், அதில் மோதி விபத்துக்குள்ளாகின்றன.
குறிப்பாக இருசக்கர வாகனங்கள், இலகு ரக வாகனங்கள் அப்பகுதியில் திக்கு முக்காடி போகின்றன. இதுவரை ஏராளமான வாகனங்கள் அந்த பேரிகாடுகளில் மோதி விபத்துக்குள்ளானதை உறுதி செய்யும் விதமாக அந்த பேரிகாடுகள் வளைந்து, நெளிந்து, உடைந்து கிடக்கின்றன.
வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தலாக இருந்து வரும் பேரிகாடு பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். அந்த சாலையில், 500 மீட்டர் துாரத்தில் இருந்து அந்த சந்திப்பு வரை, அபாய பகுதி மெதுவாக செல்லவும் என்பதை எச்சரிக்கை செய்யும் அறிவிப்பு பலகைகளை சீரான இடைவெளியில் வைக்க வேண்டும். பாதுகாப்பான பயணத்தை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உறுதி செய்ய வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்ப்பார்க்கின்றனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!