ADVERTISEMENT
பொன்னேரி: மீஞ்சூர் ஒன்றியம், தடப்பெரும்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட சாஸ்திரி தெருவில், அரசு துவக்கப்பள்ளி, கிராம நிர்வாக அலுவலகம், ஊர்ப்புற நுாலகம், அங்கன்வாடி, நியாயவிலைக்கடை மற்றும், 100க்கும் அதிகமான குடியிருப்புகள் உள்ளன. இந்த தெருச்சாலை ஐந்து ஆண்டுகளாக சேதம் அடைந்த நிலையில் உள்ளது.
சாலையில் ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டு, தற்போது அதில் மழைநீர் குளம்போல் தேங்கி கிடக்கிறது.
பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், கிராம நிர்வாக அலுவலகத்திற்கு செல்லும் பொதுமக்கள், ரேஷன் பொருட்களை வாங்க செல்பவர்கள் இந்த சாலையில் சிரமத்துடன் சென்று வருகின்றனர்.
தெருச்சாலை சேதம் அடைந்து, மழைநீர் தேங்கி போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் இருப்பது குறித்து ஒன்றிய நிர்வாகத்திடம் பலமுறை மனு கொடுத்தும் பயனின்றி கிடப்பதால், குடியிருப்புவாசிகள் அதிருப்தியில் உள்ளனர்.
இது குறித்து குடியிருப்புவாசிகள் தெரிவித்ததாவது:
அதிகாரிகளிடம் பலமுறை மனுகொடுத்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. குறைந்தபட்சம் பள்ளங்களில் கிராவல்மண் கொட்டியாவது சமன் செய்திருக்கலாம். குடியிருப்புவாசிகள் ஒன்றிணைந்து, சொந்த செலவில் சாலையை புதுப்பிக்கவும் திட்டமிட்டு வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!