ADVERTISEMENT
18க்கு விரைவில் விடிவு காலம்
திருவாலங்காடு: திருவள்ளூர் மாவட்டத்தில், 69 துணை சுகாதார நிலையங்கள் சேதமடைந்து உள்ளன. இதனால் கிராமங்களில் உரிய சிகிச்சை பெற முடியாமல் கர்ப்பிணியர் தவித்து வருகின்றனர். முதற்கட்டமாக, 18 துணை சுகாதார நிலையங்களை சீரமைக்க உள்ளதாக மாவட்ட சுகாதார துறை துணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டத்தில், 40 லட்சத்துக்கு அதிகமான மக்கள் வசிக்கின்றனர். இவர்களின் சுகாதாரத்தை கருத்தில் கொண்டும், நோய்த்தொற்றில் இருந்து பாதுகாக்கவும், நோயாளிகள் பாதிக்கப்பட்டவர்களை பராமரிக்க ஒரு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, 13 மருத்துவமனைகள், மற்றும் 39 ஆரம்ப சுகாதார நிலையங்கள் கீழ், 280 துணை சுகாதார நிலையங்கள் செயல்படுகின்றன.
கிராமங்களில் உள்ள துணை சுகாதார நிலையங்கள் வாயிலாக, நாள்தோறும், கர்ப்பிணியர், காய்ச்சல், விபத்தில் சிக்கி சிறு காயமடைந்தவர்களுக்கு முதலுதவி சிகிச்சை என, 30,000த்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர்.
குறிப்பாக, புறநோயாளிகள், சராசரியாக தினசரி, 5,000த்திற்கு மேற்பட்டோரும், குறைந்தது 10 பிரசவம் வரை சிகிச்சை அளிக்கப்படுகிறது. கிராம மக்களின் அடிப்படை சுகாதாரத்தை பேணி காப்பதில் இவை முக்கிய பங்காற்றுகின்றன.
இந்த துணை சுகாதார நிலையங்கள் கர்ப்பிணியருக்கு மூன்று முதல், 10ம் மாதம் வரை தவறாமல் சிகிச்சை அளிப்பதிலும், மகப்பேறு உதவித்தொகை என முக்கிய பங்காற்றி வருகின்றன.
இத்தகைய முக்கியம் வாய்ந்த சுகாதார நிலையங்களுக்கு மாவட்டத்தில், 70 சதவீத நிலையங்களுக்கு மட்டுமே கட்டடம் உள்ளது. 10 சதவீத நிலையம் வாடகை கட்டடத்திலும், 20 சதவீத நிலையம், இ - - சேவை மையம், கிளை நுாலகம், அரசு பள்ளி கட்டடம் உள்ளிட்டவைகளில் இயங்குகிறது.
இதனால் முழு நேரமாக, துணை சுகாதார நிலையத்தில் தங்கி சிகிச்சை அளிக்க வேண்டிய செவிலியர்கள் தங்கி சிகிச்சை அளிக்க முடியாத நிலை உள்ளது. இதனால் சிகிச்சைக்கு வருவோர் ஏமாற்றத்துடன் பல கி.மீ., துாரத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்கின்றனர்.
குறிப்பாக நிறைமாத கர்ப்பிணி அவசர சிகிச்சைக்கு வரும்போது முதலுதவி சிகிச்சை கிடைக்காமல் துாரத்தில் உள்ள மருத்துவமனைகளுக்கு செல்லும் போது உயிரிழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
எனவே கிராமங்களின் சுகாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் துணை சுகாதார நிலையத்தை பராமரிக்கவும், பாழடைந்துள்ள கட்டடத்தை சீரமைக்கவும் திருவள்ளூர் மாவட்ட சுகாதார துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
சீரமைக்க நடவடிக்கை
கிராம பகுதிகளில், 280 துணை சுகாதார நிலையங்களில், 69 துணை சுகாதார நிலையங்கள் மிகவும் சேதமடைந்து, பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன. இதில், மாவட்டத்தில் 27 துணை சுகாதார நிலையங்களை இடித்து அகற்றவும், 18 துணை சுகாதார நிலையங்களை 15 வது நிதிக்குழு மானியத்தில் சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மருத்துவர் ஜவகர்லால்
மாவட்ட சுகாதார துறை துணை இயக்குனர், திருவள்ளூர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!