தேவதானப்பட்டி: மேல்மங்கலம் ஊராட்சியில் குடியிருப்புகளுக்கு மத்தியில் பயன் இல்லாத திறந்த வெளி கிணற்றால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். சுகாதார சீர்கேடு அதிகரிப்பால் கொசுத்தொல்லை மக்கள் சிரமம் அடைகின்றனர்.
பெரியகுளம் ஒன்றியம், மேல்மங்கலம் ஊராட்சியில் 12 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். மூன்று அக்ரஹார தெருக்கள், அம்மாபட்டி தெரு, கீழத்தெரு, மேலத்தெரு, சௌராஷ்டிரா தெரு உட்பட பல தெருக்கள் உள்ளது.
மேல்மங்கலம் ஊராட்சியில் பல பகுதிகளில் சாக்கடை ரோடு, சுகாதாரவளாகம், தெருவிளக்கு உட்பட அடிப்படை வசதிகள் முழுமை பெறாததால் மக்கள் சிரமம் அடைகின்றனர்.
மேல்மங்கலம் ராஜாவாய்க்கால் முதல் அழகர் நாயக்கன்பட்டி பிரிவு வரை 3.5 கி.மீ., வரை ரோடு அமைப்பதற்கு பொதுப்பணித்துறை அலுவலகத்தில் தடை இல்லாத சான்று பெற வழங்கப்பட்ட விண்ணப்பம் பல மாதங்களாக கையெழுத்தாகவில்லை. இதனால் விவசாயிகள் விளை பொருட்கள் கொண்டு செல்வதற்கு அவதிக்குள்ளாகின்றனர்.
மேல்மங்லம் வராகநதியின் மறுபுறம் ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. ஆற்றை கடந்து செல்ல பாலம் அமைக்க நீண்ட காலமாக கோரினர். பாலம் அமைக்க பாதைக்காக தனிநபர் 400 அடி நீள நிலம் ஊராட்சிக்கு வழங்கினர்.
இதனை தொடர்ந்து மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை நபார்டு வங்கி திட்டத்தின் மூலம் ரூ.4.54 கோடியில் 60 மீட்டர் நீள பாலம், தெற்கு வடக்காக 50 மீட்டர் நீள அணுகு சாலை அமைக்கும் பணி சில மாதங்களுக்கு முன் துவங்கியது.
தற்போது பணியில் வேகமின்றி மந்தகதியில் நடக்கிறது. பாலம் பணியினை விரைந்து முடிக்க விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
தெருக்களில் சுகாதாரம் பாதிப்பு
வெங்கட்ராமன், ஆடிட்டர், மேல்மங்கலம்: மூன்று அக்ரஹாரம் தெருக்களுக்கு நுழைவுப் பாதை, வேதபாடசாலை, மாயா பாண்டீஸ்வரர் நடுநிலைப்பள்ளி, ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வி.ஏ.ஓ., அலுவலகம் செல்லும் ரோட்டின் முன்பு சேகரமாகும் குப்பை பல நாட்களாக அகற்றாததால் சுகாதாரக்கேடு நிலவுகிறது. குப்பை கொட்டும் பகுதியை மாற்ற வேண்டும்.
சுகாதாரம் மேம்படுத்த ஊராட்சி நிர்வாகம் தனிக்கவனம் செலுத்தி தூய்மைப் பணி மேற்கொள்ள வேண்டும். மேலும் அக்ரஹாரம் தெருக்களில் சிமென்ட் ரோடு சேதமடைந்துள்ளது. புதிதாக ரோடு அமைக்க வேண்டும்.
ஆபத் தா ன கிணறு
ராமலட்சுமி, மேல்மங்கலம்: முதல் வார்டு பிள்ளைமார் தெருவில் பயன்பாடின்றி திறந்த வெளி கிணறு உள்ளது. சிறுவர்கள் எட்டி பார்த்தால் தவறி விழும் அபாயம் உள்ளது. திறந்த வெளி கிணற்றிற்கு இரும்பு வலையில் மேல்மூடி அமைக்க பலமுறை கிராம சபை கூட்டத்தில் வலியுறுத்தியும் இதுவரை நடவடிக்கை இல்லை.
ஏதாவது அசம்பாவிதம் நடப்பதற்குள் கிணற்றிற்கு மேல்மூடி அமைக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
துாய்மை இல்லை
ராஜேஷ் வர்னேஷ், கண்டக்டர், மேல்மங்கலம்: கல்கட்டிலிருந்து, அங்கன்வாடி செல்லும் தெருக்களில் சாக்கடை முறையாக சுத்தம் செய்வது இல்லை. இதனால் கொசு தொல்லை அதிகம் உள்ளது. கொசுத்தொல்லையால் பொதுமக்கள் இரவில் நிம்மதியாக தூங்க முடியவில்லை. தூய்மை பணிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
ரூ.1.10 கோடியில் வளர்ச்சி பணிகள்
நாகராஜன், ஊராட்சி தலைவர், மேல்மங்கலம்: கிழக்கு முத்தையா கோயில் ரோட்டில் ரூ.9.50 லட்சம் மதிப்பீட்டில் வடிகால் அமைத்தல், 12 வது வார்டில் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் சாக்கடை, சிமென்ட் ரோடு கட்டப்பட்டது.
பஜனைமடம் அருகே ரூ.3.60 லட்சம் மதிப்பீட்டில் வடிகால் அமைத்தல்,15 வது நிதிக்குழு மானியம் சர்வோதயா சங்கம் முதல் கல்கட்டு வரை ரூ.6.35 லட்சம் மதிப்பீட்டில் வடிகால் அமைத்தல் உட்பட பல்வேறு பணிகள் ரூ.1.10 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தூய்மை பணிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்றார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!