நாட்டு வெற்றிலை கொடி: மானியத்தில் வழங்க வலியுறுத்தல்
சின்னமனூர்: நாட்டு வெற்றிலை கொடி மானிய விலையில் வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாவட்டத்தில் வெற்றிலை சாகுபடி சின்னமனூர், மார்க்கையன்கோட்டை, சீலையம்பட்டி, பெரியகுளம், மேல்மங்கலம், ஜெயமங்கலம், சில்வார்பட்டி, கம்பம், வடுகபட்டி பகுதிகளில் வெற்றிலை சாகுபடி நடைபெறுகிறது. 10 ஆண்டுகளுக்கு முன்பு சிறுமேனி என்ற ரகத்தை தோட்டக்கலைத்துறை அறிமுகம் செய்தது.
இந்த கொடியில் கிடைக்கும் வெற்றிலைகளை 3 நாட்களுக்கு மேல் இருப்பு வைக்க முடியாது. வாசனை திருப்திகரமாக இருக்காது.
நாட்டு கொடியில் இருந்து கிடைக்கும் வெற்றிலை மருத்துவ குணம் கொண்டது.
ஒரு வாரம் இருப்பு வைக்கலாம். 4 சென்ட் நிலத்தில் 20 கிலோ மகசூல் கிடைக்கும். ஆனால் சிறுமேனி 8 கிலோ மட்டுமே கிடைக்கும்.
சிறுமேனி ரகம் தற்போது பெரியகுளம், பரவை பகுதிகளில் சாகுபடியாகிறது.
சின்னமனூர் விவசாயிகள் திண்டுக்கல் அருகே உள்ள பஞ்சம்பட்டி மற்றும் திருப்புவனம் சென்று ஒரு கொடி ரூ.3 விலையில் வாங்கி வருகின்றனர். எனவே, தோட்டக்கலைத்துறை நாட்டு வெற்றிலை கொடிகளை மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்க முன்வர வேண்டும்.
பெரியகுளம் தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம், ஆனைமலையன்பட்டி திராட்சை ஆராய்ச்சி நிலையங்களில் நாட்டு வெற்றிலை கொடி உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்துள்ளனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!