ADVERTISEMENT
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி பகுதியில் வைகை ஆற்றின் கரையோரங்களில் உள்ள விவசாய நிலங்களில் நெல், வாழை சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டியுள்ளனர்.
ஆண்டிபட்டி ஒன்றியம் குன்னூர், அரப்படித்தேவன்பட்டி, கரட்டுப்பட்டி, சீரங்காபுரம், அய்யணத்தேவன்பட்டி, வேகவதி ஆசிரமம், வெள்ளையத்தேவன்பட்டி, அணைக்கரைப்பட்டி, மூனாண்டிபட்டி, தர்மத்துப்பட்டி, குண்டலப்பட்டி, புள்ளிமான் கோம்பை உட்பட பல கிராமங்கள் வைகை ஆற்றின் கரைப்பகுதியில் உள்ளன.
வைகை ஆற்றில் நீர் வரத்து ஏற்பட்டால் இப்பகுதி விவசாய நிலங்கள் செழிப்படையும். வைகை அணை நீர்மட்டம் சமீபத்தில் முழு அளவை எட்டியதால் அணைக்கு வந்த உபரிநீர் சில நாட்கள் ஆற்றின் வழியாக சென்றது.
இதனால் கரையோர விவசாய கிணறுகளில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் நவம்பரில் விவசாயிகள் நெல், வாழை சாகுபடியை துவக்குவர். நடப்புப்பருவத்தில் இப்பகுதியில் மழையும் கை கொடுத்துள்ளது.
இந்நிலையில் ஆற்றின் வழியாக சென்ற நீரால் நிலத்தடி நீர்மட்டமும் திருப்திகரமாக உள்ளது. இதனால் இப்பகுதி விவசாயிகள் நெல் நடவுப் பணிகளில் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர்.
பல ஏக்கரில் வாழை சாகுபடியும் துவக்கி உள்ளனர். தற்போதுள்ள நீர் இருப்பு இன்னும் ஓராண்டு வரை தாக்கு பிடிக்கும் என்பதால் ஆர்வத்துடன் பணிகளை தொடர்கின்றனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!