மாநிலத்தின் பரப்பில் 40 சதவீதத்திற்கும் மேல் வனம் என்பதோடு, ஏராளமான கனிம வளங்களைக் கொண்டது. நாட்டிலேயே அதிகமான நிலக்கரி இருப்பைக் கொண்டுள்ள மாநிலங்களில் ஒன்று; எக்கு வளமும் அதிகம். நல்ல நீர் வளம்; வளமான நிலம். கேடு கெட்ட நிர்வாகம்தான் முதன்மைப் பிரச்னை. நெடுங்காலம் ஆட்சியாளர்களால் பாராமுகத்துடன் அணுகப்பட்டது இந்த பிராந்தியம். இன்னமும் நான்கில் மூவருக்கு வேளாண்மைதான் வாழ்வாதாரம்.
மாநிலத்தின் மத்திய பகுதியில் மகாநதி பாய்கிறது. ஷியோநாத், இந்திராவதி, அர்பா, ஹஸ்தியோ, கெலோ, சோன், ரேஹர், கன்ஹர் என்று சிறிதும் பெரிதுமாகப் பல ஆறுகள் இருக்கின்றன. போதுமான அளவுக்கு மழை பெய்கிறது. ஆனால், சில மாதங்களுக்கு அபரீத நீர்; பல மாதங்களுக்கு நீர்ப் பற்றாக்குறை எனும் பிரச்னையில் உழல்கின்றனர் விவசாயிகள். விரிவான நீர் மேலாண்மைக் கட்டமைப்புகள் தேவைப்படுகின்றன.
எவ்வளவு அலட்சியமாக சத்தீஸ்கரை, நம் அரசுகள் நிர்வகித்தன என்பதற்கு, இன்று மாவோயிஸ்ட்டுகளுடன் அடையாளம் காணப்படும் பஸ்தர் பிராந்தியத்தை ஓர் உதாரணமாகக் கூறலாம். வரலாற்று ரீதியாகவே தீவிரமான படையெடுப்புகளுக்கும், சுரண்டல்களுக்கும் உள்ளான பிராந்தியம் இது. நம்முடைய சோழர்கள்கூட, தம்முடைய ஆளுகைக்குக் கீழ் இதை வைத்திருந்திருக்கின்றனர்.
நீடிக்கவில்லை
இப்போது பல மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கும் பஸ்தர், இந்திய அரசால் ஒருகாலத்தில் ஒரே மாவட்டமாக நிர்வகிக்கப்பட்டபோது, அதன் பரப்பளவு, 39,114 ச.கி.மீ. அதாவது, கேரளத்தைக் காட்டிலும்; நாடுகளோடு ஒப்பிட வேண்டும் என்றால் பெல்ஜியம், இஸ்ரேலைக் காட்டிலும் பெரியதாக இருந்தது. சத்தீஸ்கரின் வளர்ச்சிக் கதையை, அது மத்திய பிரதேசத்திலிருந்து பிரிக்கப்பட்டு, தனி மாநிலமாக உருவெடுத்த 2000த்துக்குப் பின்னரே ஆரம்பிக்க வேண்டும். புதிய மாநிலத்தின் முதல் முதல்வராகப் பொறுப்பேற்ற காங்கிரசின் அஜித் ஜோகியின் ஆட்சி நெடுநாட்கள் நீடிக்கவில்லை.
கடந்த 2003 தேர்தலில் பா.ஜ., வென்றது; அடுத்த 15 ஆண்டுகளுக்கு அசைக்க முடியாத முதல்வராக ரமன் சிங் நிலைத்ததற்கு, முந்தையவரின் ஆட்சி உண்டாக்கிய ஆழமான அதிருப்தி முக்கியமான காரணம். பா.ஜ.,வுக்கு இங்கே ஒரு வலுவான துாணாக ரமன் சிங் இருந்தார். அரசியல் ஸ்திரத்தன்மை நீடித்ததால், அதே காலகட்டத்தில் சத்தீஸ்கரோடு புதிதாக உருவாக்கப்பட்ட அண்டை மாநிலமான ஜார்க்கண்ட் அல்லது தாய் மாநிலமான மத்திய பிரதேசத்தோடு ஒப்பிட, சத்தீஸ்கர் வளர்ச்சி மேம்பட்டதாக இருந்தது.
ஆனால், பிராந்தியங்கள் இடையிலான சமநிலையின்மை, சமூகங்களுக்கு இடையிலான சமநிலையின்மையை ரமன் சிங் அரசு சீரமைக்கத் தவறியது. நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் இடையே, சமூகங்களுக்கு இடையே பாரதுார வேறுபாடுகள்; ஊழல் புகார்களும் இருந்தன.
மாவோயிஸ்ட்டுகளுக்கு எதிராக பழங்குடியின மக்களைக் கொண்டே, அவர் உருவாக்கிய 'சல்வாஜுடும்' எதிர்ப்படை நாடு முழுதும் மோசமான விமர்சனங்களை எதிர்கொண்டது.
சத்தீஸ்கரில் மாறி வரும் அரசியல் சூழலுக்கும் ரமன் சிங் பின்புலம் பொருத்தமானதாக இல்லை. காங்கிரசில் திக்விஜய் சிங் போன்ற ராஜபுத்திர சமூகத் தலைவர் கோலோச்சிய காலகட்டத்தில், பா.ஜ.,வும் அதே சமூகத்தைச் சேர்ந்த ரமன் சிங்கை வளர்த்தெடுத்தது. காங்கிரஸ் ஆட்டக்காரர்களை மாற்றும்போது, பா.ஜ.,வும் ஆட்டக்காரர்களை மாற்ற முற்படுகிறது.
கடந்த 2018ல் சட்டசபையின் 90 இடங்களில் 68 இடங்களை, காங்கிரஸ் வென்றபோதே ரமன் சிங் ஆட்டம் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்து விட்டது. 2023 தேர்தலில் பா.ஜ.,வின் முதல்வர் வேட்பாளர் அவர் இல்லை என்பதை. ஓராண்டுக்கு முன்பே தேசியத் தலைமை அறிவித்து விட்டது. மக்கள்தொகையில், 93 சதவீதம் இந்துக்கள், வெறும் 2.2 சதவீதம் முஸ்லிம்கள், 1.9 சதவீதம் கிறிஸ்தவர்கள் என்பதால், இங்கே வழக்கமான கதையாடல் செல்லுபடி ஆகவில்லை. தவிர, காங்கிரஸ் எல்லா வகைகளிலும் இங்கே பா.ஜ.,வோடு மல்லுக்கு நிற்கிறது.
கவுசல்யா கோவில்
பா.ஜ., தலைவர்கள் உத்தர பிரதேசத்தில். 2024ல் திறக்கப்படவுள்ள ராமர் கோவிலைப் பற்றிப் பேசினால், தங்களுடைய ஆட்சியில், 2020ல் சத்தீஸ்கரில் கட்டப்பட்டு பூஜைகள் நடந்து வரும் கவுசல்யா கோவிலைப் பற்றி காங்கிரசார் பேசுகின்றனர். சமூக ரீதியாக, பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரே அதிகம், 43 சதவீதம். ஜாதி சார்ந்து பார்த்தால், குர்மி, சாஹு இரண்டும் இங்கே பெரியவை. பிற்படுத்தப்பட்டோர் வரையறைக்குள் வரும் இந்த இரு ஜாதிகளும் மாநில மக்கள்தொகையில் 35 சதவீத அளவுக்கு உள்ளனர்.
காங்கிரசில் குர்மி சமூகத்தைச் சேர்ந்த புபேஷ் பெகல் முதல்வராக முன்னிறுத்தப்பட்டு இருக்கிறார் என்றால், பா.ஜ.,வில் சாவோ சமூகத்தைச் சேர்ந்த அருண் சாவோ முன்னிறுத்தப்பட்டு இருக்கிறார். இரு கட்சிகளுமே பிற்படுத்தப்பட்ட சமூகங்களைப் பிரதிநிதிப்படுத்துவதாகக் கூறுகின்றன. சத்தீஸ்கரில் 58 சதவீத இடஒதுக்கீடு அமலில் இருக்கிறது. பழங்குடிகளுக்கும், தலித்துகளுக்கும் கிட்டத்தட்ட அவர்களுடைய மக்கள் தொகைக்கு இணையாக, இந்த ஒதுக்கீடு உள்ளது.
அதே சமயம், பிற்படுத்தப்பட்டவர்களுக்குக் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு அளவுக்கு மட்டுமே, 14 சதவீதம் பிரதிநிதித்துவம் உள்ளது. பெகல் தன்னுடைய ஆட்சியில் இடஒதுக்கீட்டின் அளவை 76 சதவீதமாக உயர்த்த முயன்றார். பழங்குடியினர் 32; தலித்துகள் 13;, பிற்படுத்தப்பட்டோர் 27; முற்பட்ட ஜாதியினருக்கான பொருளாதார இடஒதுக்கீடு 4 சதவீதம் என்று, அவருடைய முன்மொழிவு இருந்தது. சத்தீஸ்கர் சட்டசபை நிறைவேற்றிய இதற்கான தீர்மானத்தை, கவர்னர் அனுசுயா கிடப்பில் போட்டார்.
இந்த விவகாரத்தை வைத்து பா.ஜ.,வை விளாசுகிறார் பெகல். தவிர, 'சத்தீஸ்கர் அரசியலை சத்தீஸ்கரிகளே தீர்மானிக்க வேண்டும்' என்பதும் உரக்கப் பேசப்படுகிறது. எல்லாப் பகுதிகளுக்கும் அரசின் சேவை சென்றடைய வேண்டும்; ஒவ்வொரு குடும்பமும் ஏதோ ஒரு திட்டத்தின் பயனாளியாக இருக்க வேண்டும் என்ற கணக்கில், பெகல் தெளிவாக இருக்கிறார். நிலமற்றவர்களுக்கு ஆண்டுக்கு 7,000 ரூபாய் வழங்கும் 'பூமிஹின் கிருஷி மஸ்துார் யோஜனா' பெகல் கொண்டு வந்திருக்கும் ஒரு முன்னோடி திட்டம் என்று சொல்லலாம்.
கிராமப் பகுதிகளில், வாரம் ஒரு பிரமாண்ட சந்தையைக் கூட்டுவதோடு, அங்கு நடமாடும் மருத்துவமனை உள்ளிட்ட அரசின் சேவைகளைக் கொண்டு செல்லும் 'முக்கிய மந்திரி ஹாட் பஜார் யோஜனா'வுக்கும் மக்களிடம் நல்ல பெயர் இருக்கிறது. ஆனால், மத்திய அரசின் திட்டங்களைக் கொண்டு சேர்ப்பதில், பெகல் அரசு சுணக்கம் காட்டியது, ஒரு பிரச்னையாகப் பார்க்கப்படுகிறது; பா.ஜ., இதை ஒரு பேசுபொருள் ஆக்கியிருக்கிறது. பா.ஜ.,வில் ரமன் சிங்குக்கு இணையாக ஒரு தலைவர் உருவெடுக்கவில்லை.
மாநிலத்தில் கட்சியின் பழங்குடி சமூக முகமாக இருந்த மூத்தத் தலைவர் நந்த்குமார் சாய், சில மாதங்களுக்கு முன் கட்சியிலிருந்து விலகி காங்கிரசில் சேர்ந்து விட்டார்.
கடும் போட்டிதான்
மூன்றாவது வரிசையில் உருவெடுத்திருக்கும் பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகள், தமது ஓட்டு வங்கியைப் பதம் பார்க்கலாம் என்ற அச்சமும், அதற்கு இருக்கிறது. இவ்வளவுக்கு மத்தியிலும், மிகத் தீவிரமாகத் தேர்தல் பணிகளை, பா.ஜ., கையாண்டது. மூன்று மாதங்களுக்கு முன், 'பெரும் வெற்றி பெறுவோம்' என்று சொன்ன காங்கிரஸ்காரர்கள், தேர்தலுக்கு முந்தைய நாள், 'கடுமையான போட்டிதான்' என்றனர்.
யார் வென்றாலும், பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் துணை முதல்வர் ஆக்கப்படுவார் என்று, உள்ளூர் பத்திரிகையாளர்கள் குறிப்பிடுகின்றனர். பழங்குடி சமூகப் பெண் ஒருவருடன் பேசியபோது, 'எந்தக் கட்சியாகவும் இருக்கட்டுமே; எங்களுக்கு ஏற்ப அது மாற வேண்டும்; அதிகாரம் இன்னும் பரவலாக வேண்டும்; பழங்குடி சமூகத்திலிருந்து ஒரு முதல்வர் வர வேண்டும்' என்றார். எனக்கு அவர் குரல் முக்கியமாகத் தோன்றியது!
அய்யா அவர்கள் ஒரு முக்கியமான தகவலை சொல்லவில்லை. ஆளும் கட்சி தங்கள் சாதித்தாக சொல்வதை எதற்க்கு பல பிறமாநிலங்களில், பிறபல மொழிகளில் கடந்த 6 மாதமாக செய்தி தாள்களில் விளம்பரம் செய்தது. இவர்கள் சாதனைகள் செய்திருந்தால் மாநில மக்களுக்கு தெரிந்திருக்கும். அவற்றை விளம்பர படுத்த அதுவும் பிறமாநிலங்களில் செய்ய என்ன தேவை? இப்படி ஊடகங்கள் வழியாக ஒரு சிறந்த ஆட்சி என்ற பிம்பத்தை ஏற்படுத்தவா? அல்லது அவர்கள் வெற்றிமீது அவர்களுக்கே நம்பிக்கையில்லயா?