புதுமணப்பெண் தற்கொலையில் மாமியாரை விடுவித்த நீதிமன்றம்
மூணாறு: மூணாறு அருகே புதுமணப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட வழக்கில் மாமியாரை குற்றமற்றவர் என வழக்கில் இருந்து விடுவித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
மூணாறு அருகே லாக்காடு எஸ்டேட் புதுக்காடு டிவிஷனைச் சேர்ந்தவர் ராமலட்சுமி, 65. இவரது மகன் டிரைவர் விஜயகுமாருக்கும் தமிழகம் திருநெல்வேலியைச் சேர்ந்த சீதாலட்சுமிக்கும் 2014 ஜூலையில் திருமணம் நடந்தது. சட்ட கல்லூரி மாணவியான சீதாலட்சுமி திருமணத்திற்கு பிறகு படிப்பை கைவிட்டார்.
இந்நிலையில் திருமணம் முடிந்து மூன்று மாதங்களில் சீதாலட்சுமி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் போலீசில் புகார் அளித்தனர்.
தேவிகுளம் போலீசார் விஜயகுமார், அவரது தாயார் ராமலட்சுமி ஆகியோர் மீது வரதட்சணை கொடுமை, அதனால் மரணம், தற்கொலைக்கு தூண்டுதல் உள்பட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கு மாவட்ட கூடுதல் குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
வழக்கின் விசாரணைக்கு இடையே பெண்ணின் கணவர் விஜயகுமார் மாரடைப்பால் இறந்தார். இந்நிலையில் சாட்சிகள் இன்றி குற்றம் நிரூபிக்கப்படாததால் ராமலட்சுமியை குற்றமற்றவர் என கூறி வழக்கில் இருந்து விடுவித்து நீதிபதி மகேஷ் உத்தரவிட்டார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!