ADVERTISEMENT
வாயலுார் : கர்நாடக மாநிலத்தில் உருவாகி, தமிழகம் வழியே கடக்கும் பாலாறு, கல்பாக்கம் அருகில் வங்க கடலில் கலக்கிறது.
அதன் முகத்துவாரமான வாயலுார் - கடலுார் பகுதி படுகையில், அணுசக்தி துறையின் 32 கோடி ரூபாய் நிதியுதவியுடன், கடந்த 2019 இறுதியில், நீர் செறிவூட்டல் தடுப்பணையை பொதுப்பணித்துறை அமைத்தது.
வடகிழக்கு பருவமழையின் போது, அப்பகுதியில் ஐந்தரை அடி ஆழம் நீர் நிரம்பி, சில கி.மீ.,க்கு பரவி தேங்குகிறது. தற்போதைய மழையிலும், ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து, உபரிநீர் கடலுக்கு பாய்கிறது.
இந்நிலையில், தடுப்பணை அருகில் உள்ள சுற்றுப்புற பகுதியினர், அணை பகுதியில் குளிக்கின்றனர்; துணி துவைக்கின்றனர்.
கடலோர சாலையில், தனி வாகனத்தில் செல்லும் பயணியர், நீர்த்தேக்கத்தை கண்டு, அவர்களும் ஆர்வத்துடன் தடுப்பணையில் இறங்கி குளிக்கின்றனர்.
அடிக்கடி ஏற்படும் வெள்ளப்பெருக்கால், அப்பகுதியில் நீர்ச்சுழல் ஏற்படுகிறது. அது மட்டுமின்றி, தடுப்பணை பகுதியில் அபாயகரமான பள்ளங்கள் உள்ளன.
இதற்கு முன், அபாயகரமான பள்ளத்தில் சிக்கி பலர் உயிரிழந்துள்ளனர். எனவே, தடுப்பணை பகுதியில் அதிகாரிகள் கண்காணித்து, பொதுமக்கள் குளிப்பதை தடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!