ADVERTISEMENT
கடலுார், : இந்தியாவில் கூட்டுறவு சங்கங்களுக்கு முன்னோடி மாநிலமாக தமிழகம் உள்ளதாக அமைச்சர் கணேசன் பேசினார்.
கடலுார் சுப்ராயலு ரெட்டியார் திருமணமண்டபத்தில் மாவட்ட அளவிலான 70வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நடந்தது. கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கினார். கூட்டுறவு மண்டல இணைப் பதிவாளர் நந்தகுமார் வரவேற்றார்.
அமைச்சர் கணேசன், சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கு கேடயம், பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசு, 9,810 பயனாளிகளுக்கு 70 கோடி ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
அப்போது அவர், பேசுகையில், 'தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி கூட்டுறவுத் துறை மூலமாக விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன், 20 கிலோ இலவச ரேஷன் அரிசி வழங்கினார். தமிழக முதல்வர் ஸ்டாலின், கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன்களை தள்ளுபடி செய்தார்.
கூட்டுறவு வங்கிகளில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு அடமானம் பத்திரம் இன்றி கடன் வழங்கப்படுகிறது. இந்தியாவில் கூட்டுறவு சங்கங்களுக்கு முன்னோடி மாநிலமாக இருப்பது தமிழகம்' என்றார்.
எம்.எல்.ஏ.,க்கள் சபா ராஜேந்திரன், அய்யப்பன், மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன், மண்டல இணைப் பதிவாளர் அலுவலக துணைப் பதிவாளர் அன்பரசு, பொது விநியோக திட்ட துணைப் பதிவாளர் ராஜேந்திரன், மத்திய கூட்டுறவு வங்கி துணைப் பதிவாளர் எழில் பாரதி, டான்பெட் மேலாளர் வைரமணி, பால்வள துணைப் பதிவாளர் பார்த்தீபன், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குனர் தேவி, கூட்டுறவு அச்சக மேலாண்மை இயக்குனர் சங்கீதா, மத்திய கூட்டுறவு வங்கி பொது மேலாளர் (பொறுப்பு) இளங்கோ வாழ்த்தி பேசினர்.
சரக துணைப் பதிவாளர் துரைசாமி நன்றி கூறினார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!