வேடசந்துார்: திண்டுக்கல் கரூர் நெடுஞ்சாலையில் தம்மனம்பட்டி பிரிவு அருகே அடிக்கடி விபத்துக்கள் நடப்பதால் இப்பகுதியில் சுரங்கபாதை அமைக்க வேண்டும். இதன்மீது நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
திண்டுக்கல் கரூர் நெடுஞ்சாலை இருவழிச்சாலையாக இருந்த நிலையில் 15ஆண்டுகளுக்கு முன் நான்கு வழிச்சாலையாக தரம் உயர்த்தப்பட்டது. அப்போது வேடசந்துார் நகர்ப்பகுதியின் குறுக்கு சென்ற இந்த நெடுஞ்சாலையை, நகருக்கு வெளியே செல்லும் வகையில் பெரிய குளத்தின் மையப் பகுதியில் நான்கு வழி சாலை அமைக்கப்பட்டது.
இதனால் பெரிய குளம் தற்போது 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டது. நடுவில் பாலம் அமைக்கப்பட்டுள்ளதால் தண்ணீர் போக்குவரத்தில் சிக்கல் இல்லை.
அதேபோல் நான்கு வழி சாலை தம்மனம்பட்டி -கொன்னாம்பட்டி இடையே குறுக்காக செல்கிறது. இதனால் இங்கு 100க்கு மேற்பட்ட விபத்துக்கள் நடந்துள்ள நிலையில் 15க்கு மேற்பட்டோர் இறந்துள்ளனர். 60க்கு மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.
இன்னும் காலம் கடக்கும் நிலையில் விபத்துக்களின் எண்ணிக்கை குறைவதற்கு வாய்ப்பில்லை. இப்பகுதி மக்களின் ஒரே ஒரு கோரிக்கை இங்கு மேம்பாலம் அமைக்க வேண்டும் என்பதல்ல. மெயின் ரோட்டுக்கு அடியில் வாகனங்கள் செல்லும் வகையில் சுரங்கபாதை அமைக்க வேண்டும் என்பது முக்கிய கோரிக்கையாக உள்ளது.
இப்பகுதி மக்களின் நலன் கருதி நெடுஞ்சாலை துறை நிர்வாகம் இப்பிரச்னை மீது நடவடிக்கை எடுக்க முன் வர வேண்டும்.
விபத்தை தடுக்கலாம்
எஸ்.தங்கவேல், முன்னாள் ஊராட்சி தலைவர், நாகம்பட்டி ஊராட்சி: தம்மனம்பட்டி - கொன்னாம்பட்டிக்கு இடையே புதிதாக நான்கு வழி சாலை அமைத்ததால் இந்த ரோட்டை முறையாக கடக்க தெரியாமல் அடிக்கடி மக்கள் விபத்துக்கு ஆளாகினர்.
இதுவரை இங்கு 15-க்கு மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். இதனால் மெயின் ரோட்டில் தடுப்பு வைத்து குறுக்காக செல்ல முடியாதவாறு போக்குவரத்தை தடை செய்தனர். இருந்தாலும் சற்று தள்ளி டூவீர்களில் இன்னும் குறுக்காக செல்வது தொடர்கிறது.
சுரங்கப்பாதை அமைக்க கோரிக்கை வைக்கிறோம். ஊராட்சி சார்பிலும் 2 மாதங்களுக்கு முன் தீர்மானம் போட்டுள்ளனர். தொடர்ந்து நெடுஞ்சாலை துறை நிர்வாகம், கலெக்டரிடம் மனு கொடுத்து வருகிறோம். அதேபோல் திண்டுக்கல்லிலிருந்து ஒட்டன்சத்திரம் ஈரோட்டிற்கு செல்வதற்கான சர்வீஸ் ரோடு போடப்படாமலேயே உள்ளது.
கரூர் ரோட்டிலும் சர்வீஸ் ரோடு போடாமல் உள்ளது. இந்த இரண்டு சர்வீஸ் ரோடுகளையும் போட்டு தம்மனம்பட்டி பொன்னம்பட்டி இடையே சுரங்கபாதை பாலம் அமைக்க வேண்டும்.
விபத்தை தடுக்க முடியவில்லை
டி.கார்த்திகேயன், தொழிலதிபர், தம்மனம்பட்டி: இந்த இடத்தில் தொடர்ந்து விபத்துக்கள் நடைபெற்றதால் நெடுஞ்சாலையின் நடுவே முதல் கட்டமாக தடுப்பு வைத்தனர். டூவீலர்கள் செல்வதற்கு மட்டும் சிறு வழி விட்டனர்.
மீண்டும் விபத்துக்கள் தொடர்ந்து உயிர்ப்பலி ஏற்பட்டதால் தடுப்புகள் வைத்து அடைத்தனர். அந்த வழியில் செல்ல வேண்டிய மக்கள் சற்று துாரம் வடக்கே சென்று அங்குள்ள பாலத்துக்கு அடியில் சென்று தங்களது ஊருக்கு செல்லும் வகையில் வழி ஏற்படுத்தினர்.
இந்த வழித்தடத்தில் ரோடு அமைக்காததால் மக்கள் நேரடியாகவே குறுக்கு வழியில் வருகின்றனர். இதனால் விபத்து அபாயம் அதிகரித்த வண்ணமே உள்ளது.
என்னதான் எச்சரிக்கை பலகைகள் வைத்திருந்தாலும் இங்கு விபத்துக்கள் நடைபெறுவதை தடுக்க முடியவில்லை. இதற்கு தீர்வாக மெயின் ரோட்டுக்கு அடியில் வாகனங்கள் செல்லும் வகையில் சிறுபாலம் அமைக்க வேண்டும்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!