விவசாயியிடம் ரூ.1.17 லட்சம் பறிப்பு சங்கராபுரத்தில் மர்ம நபர்களுக்கு வலை
சங்கராபுரம் : சங்கராபுரத்தில் பாங்க்கிலிருந்து பணம் எடுத்து வந்தவரிடம் 1.17 லட்சம் ரூபாயை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
சங்கராபுரம் அடுத்த பூட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கராஜ், 60; விவசாயி. இவரது மனைவி தங்கம், 55; இருவரும் நேற்று மதியம் 12:00 மணியளவில் சங்கராபுரத்தில் உள்ள ஒரு வங்கியில், நகையை அடகு வைத்து பணம், ஒரு லட்சத்து 17 ஆயிரம் ரூபாயை கைப்பையில் வைத்துக்கொண்டு பைக்கில் வந்தனர்.
கள்ளக்குறிச்சி சாலையில் உள்ள ஒரு பழக்கடையில் பழம் வாங்க சென்றபோது, பைக்கில் பின் தொடர்ந்து வந்த ெஹல்மெட் அணிந்த 2 வாலிபர்களில் ஒருவர் தங்கம் கையில் வைத்திருந்த கைப்பையை பிடுங்கிக் கொண்டு தப்பினர்.
ஆட்கள் நடமாட்டம் மிகுந்த சாலையில் பைக்கில் தப்பிய இருவரையும் பிடிக்க முடியவில்லை.
இது குறித்த புகாரின் பேரில், சங்கராபுரம் போலீசார் வழக்குப் பதிந்து 1.17 லட்சம் ரூபாயை பறித்துச் சென்ற நபர்களைத் தேடி வருகின்றனர்.
எஸ்.பி., நடவடிக்கை எடுப்பாரா
சங்கராபுரம், கள்ளக்குறிச்சி சாலையில் இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, மாவட்ட கூட்டுறவு வங்கி, கனரா வங்கி, ஸ்டேட் பாங்க் என அனைத்து வங்கிகளும் உள்ளது. இந்த வங்கிகளுக்கு தினசரி சங்கராபுரம் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து வங்கிக்கு ஏராளமானோர் வருகின்றனர்.
வங்கிகளில் மர்ம நபர்கள் நின்று கொண்டு நோட்டம் விட்டு வங்கியில் இருந்து பணம் எடுத்து வருவர்களிடம் கொள்ளையடித்துச் செல்வது தொடர்கிறது.
சங்கராபுரம் காவல் நிலையத்தில் 8 சப் இன்ஸ்பெக்டர்கள் உள்ளனர். இவர்களில் 2 பேர் தினமும் வங்கியுள்ள பகுதிகளில் ரோந்து சென்றாலே இது போன்ற குற்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க முடியும். இதற்கு எஸ்.பி., நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!