பகுதி நேர வேலை என 18.84 லட்சம் அபேஸ் சைபர் கிரைம் மோசடி கும்பல் அட்டகாசம்
புதுச்சேரி : வேலை தேடும் இளைஞர்களை குறி வைத்து, பகுதி நேர வேலை என ஆசை வார்த்தை கூறி, ஒரே நாளில் 3 பேரிடம் 18.84 லட்சம் மோசடி செய்த மர்ம நபர்கள் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரியை சேர்ந்த நித்யா, அருண்ராஜ் ஆகியோரை தொடர்பு கொண்ட மர்ம நபர்கள், பகுதி நேர வேலையாக,ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.
இதை நம்பிய இருவரும்,மர்ம நபர் கூறிய வங்கி கணக்கில் முதலீடு செய்தனர். நித்யா ரூ. 14.95 லட்சம், அருண்ராஜ் ரூ. 74 ஆயிரம் முதலீடு செய்தனர். இருவரின் ஆன்லைன் போர்ட்டல் பக்கத்தில் அதிக அளவிலான பணம் சம்பாதித்ததுபோல் காண்பித்தது.
ஆனால், அந்த பணத்தை இருவரும் எடுக்க முடியவில்லை. தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்த இருவரும் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தனர். இன்ஸ்பெக்டர்கள் கார்த்திகேயன், கீர்த்தி ஆகியோர் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதே போல், மாகி பகுதியை சேர்ந்த பொறியியல் பட்டதாரியான நிஷாத் மனைவி கபிலா 24; என்பவரிடமும், ரூ. 3.15 லட்சம் மர்ம நபர்கள் ஏமாற்றி உள்ளனர். இது குறித்து மாகி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலை தேடும் இளைஞர்களை குறி வைத்து சைபர் கிரைம் மோசடி அரங்கேற்றி வரும் சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!