ADVERTISEMENT
பாகூர் : உரிய நேரத்தில் வராத 108 ஆம்புலன்சால், பாகூரில் நெஞ்சு வலியால் துடித்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
விருதாச்சலத்தை சேர்ந்தவர் சோபனா, 54; விவகரத்து ஆனவர். இவர் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக, பாகூர் பழைய காமராஜ் நகரில் வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்தார்.
இவருக்கு இருதயநோய் உள்ளது. வெளிநாட்டில் உள்ள அவரது சகோதரர், பாகூரில் உள்ள நண்பர்கள் மூலம் சோபானாவுக்கு தேவையான உதவிகளை செய்து வந்தார். சோபானா மாதத்திற்கு இரண்டு முறையாவது மருத்துவமனைக்கு சென்று மருத்துவ பரிசோதனைகள் செய்து கொள்வார்.
அதுபோல், நேற்று காலை அவர் மருத்துவமனைக்கு புறப்பட்டார். அப்போது, நெஞ்சு வலிப்பதாக கூறிய சோபனா மாடி படிக்கட்டிலேயே மயங்கிபடி அமர்ந்து விட்டார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள், பாகூர் அரசு மருத்துவமனையில் உள்ள ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர். நீண்ட நேரம் ஆகியும் ஆம்புலன்ஸ் வராததால், நேடியாக மருத்துவ மனைக்கு சென்று பார்த்தனர்.
அப்போது, 108 ஆம்புலன்ஸ் டயர் பஞ்சாரான நிலையில் நிற்பதை கண்டு ஆத்திரமடைந்து, மருத்துவமனை ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஏற்னேவே ஒரு ஆம்புலன்ஸ் நோயாளியை அழைத்து கொண்டு புதுச்சேரிக்கு சென்று விட்டதாகவும், மற்றொரு ஆம்புலன்ஸ் டயர் பஞ்சராக இருப்பதாகவும் கூறினர். இதையடுத்து, கரிக்கலாம்பாக்கத்திற்கு தகவல் தெரிவித்து வந்த 108 ஆம்புலன்ஸ் மூலம் சோபனாவை மீட்டு, பிள்ளையார்குப்பத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அங்கு, அவரை பரிசோதித்த டாக்டர்கள் சோபனா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். உரிய நேரத்திற்கு, 108 ஆம்புலன்ஸ் வராமல் போனதே சோபனா உயிரிழப்புக்கு காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர். தகவலறிந்த பாகூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!