கள்ளக்குறிச்சியிலிருந்து சிதம்பரத்திற்கு நேரடி பஸ் வசதி ஏற்படுத்த நடவடிக்கை தேவை
கள்ளக்குறிச்சியிலிருந்து சிதம்பரத்திற்கு நேரடியாக அரசு பஸ் வசதி இல்லாததால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சியிலிருந்து 105 கி.மீ., தொலைவில் சிதம்பரம் உள்ளது. சிதம்பரம் நடராஜர் கோவில், தில்லைக் காளி கோவில், அண்ணாமலை பல்கலைக்கழகம், பிச்சாவரம் உள்ளிட்டவைகளை கொண்ட பெருநகரமாக உள்ளது. அத்துடன் சிதம்பரம் வழியாக கங்கை கொண்ட சோழபுரம், சீர்காழி, பூம்புகார், மயிலாடுதுறை உள்ளிட்ட புராதன நகர பகுதிகளுக்குச் செல்வதற்கும் வழி உள்ளது.
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்கள் மட்டுமின்றி கோவில்களுக்கு செல்லும் பக்தர்களும் கள்ளக்குறிச்சி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து தினமும் செல்கின்றனர்.
ஆனால், கள்ளக்குறிச்சியிலிருந்து அதிகாலை 4:00 மணி, காலை 6:20, 6:23, 11:15, பிற்பகல் 1:27, மாலை 4:15, இரவு 7:40 மணி என 7 சிங்கிள் மட்டுமே தனியார் பஸ்கள் சிதம்பரத்திற்கு இயக்கப்படுகின்றன.
இவைகளில் ஒரு சில பஸ்கள் வேப்பூர் வழியாகவும், ஒரு சில பஸ்கள் உளுந்துார்பேட்டை வழியாகவும் செல்கின்றன. ஆனால் இந்த வழித்தடத்தில் செல்லும் பல தனியார் பஸ்களும் மிக மிக தாமதமாகவும், உளுந்துார்பேட்டையில் 30 நிமிடத்திற்கு மேலாக நிறுத்திய பின்னர்தான் சிதம்பரம் செல்கின்றன.
அத்துடன் சில பஸ்கள் பாதி வழியிலேயே நிறுத்தி 'கட் சர்வீஸ்' செல்வதும் வாடிக்கையாக உள்ளது. இதனால் சிதம்பரம் மற்றும் அதன் வழியாக பிற ஊர்களுக்குச் செல்லும் கள்ளக்குறிச்சி பகுதி மக்கள் வெவ்வேறு பஸ்களைப் பிடித்துச் செல்ல வேண்டிய நிலை உள்ளது.
எனவே கள்ளக்குறிச்சியிலிருந்து சிதம்பரம் மற்றும் அதனைக் கடந்து வேறு பல பகுதிகளுக்கும் செல்லும் வகையில் அரசு பஸ் சர்வீசை துவக்கிட வேண்டும்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!