Load Image
Advertisement

பல ரகசியம் சொன்ன குகநாதன்..


Latest Tamil News

ஒரு ரகசியம் சொல்லட்டுமா?என்று கேட்டு கேட்டு பல ரகசியங்ளை சொன்னார் திரைப்பட இயக்குனர் வி.சி.குகநாதன்.

சென்னையில் காலங்களில் அவன் வசந்தம் என்ற கண்ணதாசன் புகழ்பாடும் நிகழ்வு மைலாப்பூர் பாரதீய வித்யாபவனில்,கிருஷ்ணா ஸ்வீட்ஸ் ஆதரவுடன் இசைக்கவி ரமணன் நடத்திவருகிறார்.

ஒவ்வொரு நிகழ்விலும் ஒரு விருந்தினர் பங்கேற்பது வழக்கம்,97 வது நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை(19/11/2023)நடைபெற்றது,சிறப்பு விருந்தினராக குகநாதன் கலந்து கொண்டார்.

17 வயதில் எம்.ஜி.ஆருடன் ஏற்பட்ட அறிமுகம் சினிமா கதாசிரியராக்கியது,அதன்பிறகு திரைத்துறையில் ஐம்பது வருடங்களாக திரைப்பட கதை,வசனகர்த்தா,தயாரிப்பாளர்,இயக்குனர் என 279 படங்களுக்கு மேல் வலம்வந்தார்.
Latest Tamil News
இவர் தனக்கும் கண்ணதாசனுக்கும் உண்டான தொடர்பு குறித்து பேசும்போது, அவ்வப்போது 'ஒரு ரகசியம் சொல்லட்டுமா?'என்று கேட்டுவிட்டு சில சம்பவங்களை சொன்னார்.

'புதிய பூமி' பாடல் ரிக்கார்டிங்கின் போது எனக்கு 17 வயது, அப்போதுதுான் கவிஞர் கண்ணதாசனை முதன் முதலாக பார்த்தேன், வேட்டியின் ஒரு முனையை கையில் துாக்கிப்பிடித்துக் கொண்டு சிரித்தபடி வந்தவரை எனக்கு ரொம்பவே பிடித்துப் போய்விட்டது.

கதாசிரியரே.. பாடலுக்கான 'சுச்சூவேஷனை' சொல்லுங்கள் என்றதும், நான் கனைத்துக் கொண்டு கவிஞர் முன் உட்கார்ந்தேன், அதுவரை என்னை ஆபிஸ் பையன் என்றே என்னை நினைத்திருந்தார் போலும் ,ஏற இறங்க பார்த்துவிட்டு ம் 'சொல்லு தம்பி' என்றார்.

நான் சொன்னதும், அருவி போல பாடல் வரிகளைச் சொன்னார், ஆனால் நான் அமைதியாக உட்கார்ந்திருந்தேன்,' என்ன?' என்றார் கவிஞர் ,எனக்கு வளையலை மையமாக வைத்து பாடல் வரிகள் வேண்டும் என்றேன், சபாஷ் நன்றாக வேலை வாங்குகிறாய் என்று சொல்லிவிட்டு 'சின்னவளை முகம் சிவந்தவளை' என்று ஏகப்பட்ட 'வளை' வார்த்தைகள் வருவது போல பாடல் வரிகளைத் தந்தார், அது அந்தப்படத்தில் மிகவும் ஹிட்டான பாடலாகும்.

21 வயதில் ஏவிஎம் நிறுவனத்தின் மாத சம்பளத்திற்கு வேலை பார்த்தேன், எனது மாத சம்பளம் 2ஆயிரத்து ஐநுாறு ரூபாய், அப்போது வளசராவக்கத்தில் ஒரு கிரவுண்ட் விலை வெறும் 500 ரூபாய், ஒவ்வொரு மாத சம்பளத்திலும் ஒரு ஐநுாறு ரூபாய் செலவழித்து இடம் வாங்கிப்போட்டிருந்தால் இன்று வளசராவாக்கத்தில் பாதி என்னுடையதாகத்தான் இருந்திருக்கும், ஆனால் சினிமாவில் சம்பாதித்ததை சினிமாவிலேயே போட்டு நிறைய லாபங்களையும் நிறைய நட்டங்களையும் சந்தித்தேன்.

ராஜபார்ட் ரங்கதுரை படத்தில் வரும் 'அம்மம்மா தம்பி என்று நம்பி' என்ற பாடலும் அப்படித்தான், பாடலுக்குள் பாடல் என்று ராமாயணம்,மகாபாரதம் என்ற எல்லா கதையையும் கொண்டு வந்து விட்டார்.பெரும்பாலும் படத்தின் தலைப்பையும் கொண்டு வந்துவிடுவார். டேபிள் டென்னிஸ் பேட்டை வைத்து தான் அந்தப் பாடலுக்கான பிரதான இசை அமைக்கப்பட்டது என்றால் இப்போதும் கூட யாரும் நம்பமாட்டார்கள்.

'மதுரகீதம்' என்ற படத்திற்காக நடிகை ஸ்ரீவித்யாவை ஒப்பந்தம் செய்யப்போன போது, இந்தப் படத்திற்காக உங்களுக்கு விருது கிடைக்கவில்லை என்றால் நான் தொழிலையே விட்டுவிடுகிறேன் என்றேன் அதே போல அவருக்கு அந்த ஆண்டிற்கான சிறந்த நடிகை விருது கிடைத்தது.

ஒரு இசைக்கச்சேரிக்கு போயிருந்த போது நிறைவில் என்னைப் பேசச்சொன்னார்கள், நான் பேசும்போது இங்கே இசை அமைத்தவர் ஏற்கனவே உருவான சினிமா பாடல்களுக்குதான் இசை அமைத்துள்ளார்,இப்படி இருந்தால் முன்னேறுவது கடினம், சொந்தமாக இசை அமைத்து பாடவேண்டும் என்றேன். உடனே அந்த இசை அமைப்பாளர் பாடல் வரிகள் இல்லாமல் இரண்டு பாடல்களை வாசித்துக் காட்டினார் அந்த 'ட்யூன்கள்' 'மச்சானை பார்த்தீங்களா',மற்றொன்று 'அன்னக்கிளி உன்னைத்தேடுதே' என்பதாகும், உடனே எனது பைக்குள் கையைவிட்டேன், ஆயிரத்து ஐநுாறு ரூபாய் வந்தது, பிடியுங்கள் அட்வான்சை எனது அடுத்த படத்திற்கு நீங்கள்தான் இசை அமைப்பாளர் என்று கூறி கொடுத்தேன் அவர்தான் இளையராஜா

ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக அவரது முதல்படம் என்னுடைய படமாக இல்லாமல் போய்விட்டது, அந்த வேகத்தில் நான் அறிமுகப்படுத்திய இசை அமைப்பாளர்தான் சந்திரபோஸ்.


கனிமுத்துப் பாப்பா படத்தில் புதுமுகம் வேண்டும் என்று தேடிக்கண்டுபிடித்து ஜெயா என்பவரை அறிமுகம் செய்தேன், அந்த படத்தில் ஏற்பட்ட பழக்கம் காரணமாக அவரே என் மனைவியாகவும் அமைந்தார்,

கண்ணதாசன் வெறும் கவிஞர் மட்டுமல்ல அவர் முதல் அமைச்சாரகவே வருவதற்கு தகுதியானவர் என்று நான் சொல்லவில்லை, ஒரு நேரத்தில் எம்ஜிஆரே சொன்னார் ஆனால் அதற்கான முயற்சியில் அவரும் இறங்கவில்லை அதற்கான தேடுதலில் மக்களும் இல்லை .

ஆனால் அவர் முதல்வராகவே ஆகியிருந்தால் கூட, காலம் கடந்தும் இந்த அளவு கொண்டாடப்பட்டு இருப்பாரோ? என்பது சந்தேகமே,அவர் கவிஞராக தொடர்ந்து இருந்ததினால்தான் இப்போது நாம் அவரைப்பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம், இன்னும் இருபது வருடங்கள் கழித்து வரக்கூடிய நம் சந்ததிகளும் இதே போல உட்கார்ந்து அவரைப்பற்றி பேசுவர் என்று கூறிமுடித்தார்

-எல்.முருகராஜ்.

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement