Advertisement

பீளமேட்டின் பிரமாண்ட அடையாளம்... டைடல் பார்க்

பழமைக்கும், பாரம்பரியத்துக்கும் மட்டுமின்றி, புதுமைக்கும், தொழில்நுட்பத்துக்கும் புகலிடம், இந்த பூளைமேடு; இரு மருத்துவக் கல்லூரிகள், ஏராளமான தொழில் நுட்பக் கல்லூரிகள், ரயில் நிலையம், விமான நிலையம், கொடிசியா தொழிற்காட்சி அரங்கம் என பல வித சிறப்புகளைக் கொண்ட பூளைமேட்டின் புதிய அங்கம் இங்குள்ள "டைடல் பார்க்'.
பார்த்தவுடன் ஈர்க்கின்ற "பளிச்' கட்டடத்தில் படு கம்பீரமாக நிற்கும் இந்த தகவல் தொழில் நுட்பப் பூங்கா, பீளமேட்டின் மற்றொரு பிரமாண்டமான அடையாளமாக மாறியிருக்கிறது. கோயம்புத்தூர் அரசு மருத்துவக் கல்லூரியின் பின் புறத்தில் அமைந்துள்ள இந்த "டைடல் பார்க்', கடந்த தி.மு.க., ஆட்சியில் இந்நகருக்குக் கிடைத்த மாபெரும் திட்டமாகும்.
சிறப்புப் பொருளாதார மண்டலமாக அறிவிக்கப்பட்ட இப்பகுதியில், மொத்தம் 62 ஏக்கர் பரப்பில் இந்த தகவல் தொழில் நுட்பப் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. தனியார் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களுக்கும் இதில் இடம் ஒதுக்கப்பட்டாலும், அவை அரைகுறையாக நிற்கின்றன; முதலில் முடிக்கப்பட்டது, இந்த "டைடல் பார்க்' மட்டுமே; இதற்கான செலவு, 380 கோடி ரூபாய்.
இந்த கட்டடத்தின் முதல் சிறப்பு, சுற்றுச்சூழலுக்கு இணக்கமான முறையில் பசுமை கட்டிடமாக (கிரீன் பில்டிங்) அமைக்கப்பட்டிருப்பதுதான்; மொத்தம் 8 தளங்களைக் கொண்ட இந்த கட்டடத்தின் 3 தளங்கள், தரை தளத்துக்குக் கீழே அமைக்கப்பட்டுள்ளன. காரணம், மிக அருகிலேயே விமான நிலையம் இருப்பதுதான்.
இங்குள்ள "பார்க்கிங்'கில் 1,500 கார்களை நிறுத்த முடியும் என்ற தகவல், இதன் பிரமாண்டத்துக்கு இன்னொரு சாட்சி. தரை தளம் உட்பட ஒவ்வொரு தளமும் 2 லட்சத்துக்கும் அதிகமான சதுர அடி பரப்பு கொண்டவை. சென்னை "டைடல் பார்க்'கின் மொத்தப்பரப்பு, ஒரு மில்லியன் சதுர அடி மட்டுமே; கோவை "டைடல் பார்க்'கின் மொத்தப்பரப்பு 1.28 மில்லியன் சதுர அடி.
மொத்தம் 8 தளங்களுக்கும் சேர்த்து, 6 ஆயிரம் டன் ஏ.சி., வசதி செய்யப்பட்டு, எல்லாக்காலத்திலும் குளிர் தரும் கட்டடமாக இந்த பூங்கா மிளிர்கிறது. ஒவ்வொரு தளத்திலும் தலா 92 கழிப்பிடங்கள் உள்ளன; பணியாளர்கள் மற்றும் பொது மக்கள் வசதிக்காக 20 "லிப்ட்'களும், பொருட்கள் கொண்டு செல்ல 4 "லிப்ட்'களும் அமைக்கப்பட்டுள்ளன.
சிறப்புப் பொருளாதார மண்டல அந்தஸ்து இருப்பதால், தடையற்ற மின்சாரம் வழங்க 10 மெகா வாட் (10 ஆயிரம் கிலோ வாட்) திறனுள்ள ஜெனரேட்டரும் இங்குள்ளது. ஒரு "ஷிப்ட்'டுக்கு 4 ஆயிரம் பேர் வீதமாக, ஒரு நாளுக்கு 3 முறைகளில் 12 ஆயிரம் பேருக்கு, வேலை வாய்ப்பு தருவதற்கு ஏற்ற வகையில், இந்த தொழில் நுட்பப் பூங்கா கட்டப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஆக.,2ம் தேதியன்று, இந்த தொழில் நுட்பப் பூங்காவை அப்போதைய முதல்வர் கருணாநிதி திறந்து வைத்தார். இந்த பூங்கா மூலமாக, ஆண்டுக்கு 1,200 கோடி ரூபாய் மதிப்பிலான மென்பொருளை ஏற்றுமதி செய்வதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது; ஆனால், திறக்கப்பட்டு ஓராண்டுக்கு மேலாகியும் இந்த "டைடல் பார்க்' இன்னும் சோபிக்கவில்லை.
மங்கா புகழ் சேர்த்த கங்கா நாயுடு: பீளமேடு என்ற ஊர் உருவாகவும், தொழில், கல்வி மற்றும் தொழில்கல்வியில் தழைத்து வளரவும் கங்கா நாயுடும் அவரது வழித்தோன்றல்களும்தான் காரணம் என்பதை யாரும் மறுக்க முடியாது. கங்கா நாயுடுவின் கொள்ளுப்பேரனின் பேரன்தான் பி.எஸ். கோவிந்தசாமி நாயுடு.
அவருக்கு வெங்கடசாமி நாயுடு, திவான் பகதூர் ரங்கசாமி நாயுடு, கங்கா நாயுடு, நாராயணசாமி நாயுடு என 4 மகன்கள். கோவிந்த சாமி நாயுடு தனது சொத்துக்களை 5 பாகமாக பிரித்து நான்கு பாகத்தை தன் மகன்களுக்கு கொடுத்து விட்டு, ஒரு பாகத்தை தர்மகாரியங்களுக்கு ஒதுக்கினார்; அதில் உருவாக்கப்படதூன் பி.எஸ். ஜி., அறக்கட்டளை.
சுதந்திரத்துக்கு முன்பே, 1924ல் பி.எஸ்.ஜி., குடும்பத்தினரும், அவர்களது உறவினர்களும் சேர்ந்து சர்வஜனா பள்ளியை துவங்கினர். பள்ளி துவக்கப்பட்ட பின்பே, 1926ல் பி. எஸ்.ஜி., அறக்கட்டளை துவங்கப்பட்டு, அதன் மூலமாக பல கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் மற்றும் சேவை அமைப்புக்கள் துவக்கப்பட்டன. அத்தனைக்கும் ஆணிவேர், கங்கா நாயுடுதான்.
"டீனேஜ் அறியாத ஹோப் காலேஜ்: "ஹோப் காலேஜ் இறங்குங்க!,'' கண்டக்டர் சொல்லி முடித்தபோது, இறங்கிய யாருமே காலேஜ் படிக்கும் டீனேஜ் காரர்களில்லை; அதென்ன வயசானவுங்க படிக்கிற காலேஜா?
இந்த ஊருக்குப் புதிதாய் வரும் பலரும் கேட்கிற கேள்விதான் இது. புதியவர்களுக்கு மட்டுமில்லை; இதே கோவையிலேயே இருந்து கொண்டு "ஹோப் காலேஜ்' ரகசியம் தெரியாதவர்களுக்காக...
மண்ணுக்கு பெருமை சேர்த்த மகத்தான விஞ்ஞானி ஜி.டி.நாயுடு, மேலை நாடுகளில் உள்ள பல்தொழில் நுட்பக் கல்லூரிகளைப் (பாலிடெக்னிக்) போல, கோவையிலும் ஒரு தொழில் நுட்ப கல்லூரியை துவங்கவேண்டும் என்பதில் மிகவும் ஆர்வமாக இருந்தார். தன் விருப்பத்தை அப்போதைய சென்னை மாகாண கவர்னராக இருந்த ஆர்தர் ஹோப்பிடம் அவர் கூறினார்.
அதற்கு அவர், "கல்லூரி துவங்குவது என்றால், அதற்கான இடத்தைத் தேர்வு செய்து, கட்டிடம் கட்ட நாட்கள் ஆகும்; பொறுத்திருந்து செய்யலாம்,'' என்றார்.
தன் முயற்சியில் சற்றும் தளராத நாயுடு, "" பீளமேட்டில் ஆர்கஸ் நகரில் எனக்கு சொந்தமான கட்டிடம் இருக்கிறது;அதை எடுத்துக்கொள் ளுங்கள்; பின்னர் கட்டிடம் கட்டிக் கொள்ளலாம்,'' என்றார் ஜி.டி.நாயுடு.
தனது கட்டிடத்தை கொடுத்த தோடு, மாணவர்களின் பயிற்சிக்கான உபகரணங்கள் மற்றும் 67 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள புத்தகங்களையும் கொடுத்து உதவினார். கல்லூரி உருவாகக் காரணமாக இருந்த ஜி.டி. நாயுடுவின் பெயரை அக்கல்லூரிக்கு வைக்க ஆர்தர் ஹோப் விரும்பினார். அதை நாயுடு மறுத்ததால் ஆர்தர் ஹோப் பெயர் சூட்டப்பட்டு, 1945 ல் ஆர்தர் ஹோப் காலேஜ் துவங்கப் பட்டது.
ஹோப்ஸ் கேட்டுக்கொண்டதற் கிணங்க, கல்லூரியின் முதல்வர் பொறுப்பை ஜி.டி. நாயுடு ஏற்றார். பிறகு, மருத்துவ கல்லூரிக்கு எதிரில் அரசு பாலிடெக்னிக் கட்டிடம் கட்டப்பட்டு அங்கு அந்த கல்லூரி மாற்றப்பட்டது.
கல்லூரி இடம் பெயர்ந்து விட்டாலும், அப்பகுதிக்கான பெயராகவே மாறி, மக்கள் மனதில் நீங்காத இடம் பெற்று விட்டது ஹோப் காலேஜ்.
அப்புசாமி... ஓர் அறிமுகம்!: பீளமேட்டிலே பிறந்து எட்டுத் திக்கும் புகழ் எட்டியவர்கள் பலர்; ஆனால், வானூர் திகளை இயக்கி, வான் புகழ் எட்டிய ஒரு வரைப் பற்றி, இந்த நகரிலே இருப்பவர்கள் பலருக்குமே தெரியாது.
அவரது பெயர், கே.ஜி.அப்புசாமி. சுதந்திரத்துக்கு முன், கோவை பி.எஸ்.ஜி., பாலிடெக்னிக்கில் படித்த அவரது தொழில் நுட்ப அறிவு, ஆங்கிலேயர் களை பிரமிக்க வைத்தது.
மேல் படிப்புக்காக, இங்கிலாந்துக்கு அவரை அனுப்பி வைத்தனர் ஆங்கி லேயர்கள். அங்கு படித்து முடித்து, இந்தியா திரும்பிய அப்புசாமி, பிற்காலத்தில் "ஏர் இந்தியா' நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்து, அந்நிறுவனத்தின் தலைவர் என்கிற உயர் பொறுப்புக்கு வந்தார். அவரது காலத்தில்தான், முதன் முறையாக "ஏர் இந்தியா' நிறுவனம், லாபத்தை ஈட்டியது குறிப்பிடத்தக்கது.
தற்போது 85 வயதாகும் அப்புசாமிக்கு, இரு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்; இப்போது அவர் வசிப்பது, அமெரிக்காவில்.
பெயரை காக்கும் ஓர் அமைப்பு: கால ஓட்டத்திலே, பூளைமேடு மருவி பீளமேடு ஆக மாறி விட்டாலும், இன்றள வும் அந்தப் பெயரைத் தாங்கிப் பிடித்துக்கொண்டு, அந்த ஊரின் வளர்ச்சிக்காக பாடுபட்டுக் கொண்டிருக்கிறது ஓர் அமைப்பு; பூளைமேடு கன்ஸ்யூமர் வாய்ஸ் என்ற அந்த அமைப்புதான், அங்குள்ள திட்டச்சாலைகளை மீட்கவும், ரயில்வே பாலம் கட்டவும் நேரடியாகவும், சட்டரீதியாகவும் போராடி வருகிறது.
ஒண்டிப்புதூர் ரயில்வே மேம்பாலத்தில் சர்வீஸ் ரோடு அமைக்க தாமதமாகி வருவதைக் கண்டித்து நடந்த போராட்டம், வெற்றி கண்டதில் இந்த அமைப்பின் பங்களிப்பும் குறிப்பிடத்தக்கது. மாணவர், இளைஞர்களுக்கான மேம்பாட்டுப் பயிற்சிகள், சட்டவிழிப்புணர்வு கருத்தரங்குகளை இந்த அமைப்பு நடத்தி வருகிறது.
நுகர்வோர் உரிமைகள் தொடர்பான துண்டு அறிக்கை, புத்தகங்களை வெளியிட்டு மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது இந்த அமைப்பு. அரசுத்துறைகளில் மக்களுக்கு வழங்கப்படும் சலுகைகள், திட்டங்கள் மற்றும் இடர்பாடுகள் தொடர்பாக, தகவல் உரிமைச் சட்டத்தில் ஏராளமான தகவல்களை வாங்கி, மக்களுக்கும் உதவி வருகிறது.
இவ்வமைப்பின் தலைவராகவுள்ள பி.வி.கோபால், தகவல் உரிமைச் சட்ட இலவச உதவி மையம் ஒன்றையும் ஏற்படுத்தி, சேவையாற்றி வருகிறார். பூளைமேடு 136, எல்லைத்தோட்டம் என்ற முகவரியில் இந்த அமைப்பு செயல்படுகிறது. தொடர்பு எண்: 99440 01449.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement