Load Image
Advertisement

ஊரை ஏமாத்த ஓட்டல்களில் ரெய்டு சின்னவரு பேருல அடிக்கறாங்க துட்டு

 Raid in the hotels that have cheated the town is being beaten in the name of small people    ஊரை ஏமாத்த ஓட்டல்களில் ரெய்டு சின்னவரு பேருல அடிக்கறாங்க துட்டு
ADVERTISEMENT
தீபாவளி 'ஷாப்பிங்' செய்ய, கிராஸ்கட் ரோட்டுக்கு ஸ்கூட்டரில் சித்ராவும், மித்ராவும் வந்தனர்.

வாகனங்கள் 'பார்க்கிங்' செய்ய போலீசார் தடை செய்திருந்ததால், குறுக்கு வீதியில் ஓரங்கட்டி நிறுத்தியபோது, அப்பகுதியில் ஒட்டியிருந்த ஆளுங்கட்சியினரின் போஸ்டரை கவனித்த சித்ரா, ''கோவையில் கோலோச்சிய ஆளுங்கட்சி வி.ஐ.பி., சிறையில் இருந்தாலும், அவரது செல்வாக்கு கொஞ்சம் கூட குறையலையாம். சுவர் விளம்பரமா இருந்தாலும், போஸ்டரா இருந்தாலும் அவரை மறக்காம குறிப்பிடுறாங்க,''

''ஆனா, சுல்தான்பேட்டை தெற்கு ஒன்றியத்தில் உள்ள 'மகா' கனம் பொருந்திய செயல் புயல் ஒருவர், எந்த பேனரிலும் ஜெயில் வி.ஐ.பி., படத்தைப் போடுறதில்லை; கட்சி நிர்வாகிகள் கேட்டால், 'அவர் இனி வெளியே வரப்போறதே இல்லை; எதுக்கு படம் போடணும்'னு சொல்றாராம்,''

''செலக்கரிச்சலில் நடந்த கட்சி விழாவுக்கு, அமைச்சர் முத்துசாமியை வரவேற்று, அவர் வைத்த பேனர் எதிலுமே ஜெயில் வி.ஐ.பி., படம் இல்லையாம். அமைச்சர் கிளம்பி போன கொஞ்ச நேரத்துல, அதே பகுதியில் ரோட்டில் காரை நிறுத்தி, சகாக்களுடன் 'சரக்கு' அடிச்சதா, உடன்பிறப்புகள் சொல்றாங்க,'' என்றாள்.

''அக்கா, என்கிட்ட ஒரு ஆளுங்கட்சி மேட்டர் இருக்கு, சொல்லட்டுமா,'' என்ற மித்ரா, ''சினிமாவில் நடிக்கறதுல இருந்து, 'விளையாட்டு' பிள்ளையான வி.ஐ.பி., விலகியதும், ரசிகர் மன்றங்களையும் கலைச்சாங்க.

நம்மூரில் மன்ற பொறுப்பாளராக இருந்த ஒருத்தர், 'எனக்கு சின்னவரும், அன்பில் ஊறிய அமைச்சரும் அவ்ளோ நெருக்கம்'னு சொல்லிக்கிட்டு, கார்ப்பரேஷன் சவுத் ஜோன் ஆபீசில் கோலோச்சுறாராம்,''

''அவரது கருப்பு நிற கார், காலை 9:00ல் இருந்து நைட் 10:00 மணி வரைக்கும், சவுத் ஜோன் ஆபீஸ் வளாகத்துல நிக்குது. துணைப் பொறுப்பில் இருப்பவருக்கும் நெருக்கமா இருக்கறதோட, மாசம் ரெண்டு தடவை சென்னைக்குப் போய், ரெண்டு இளம் வி.ஐ.பி.,க்களோட போட்டோ எடுத்து 'பேஸ்புக்', 'வாட்ஸ்ஆப்' களில் போடறதால ஆபீசர்கள் பயப்படுறாங்க,''

''கார்ப்பரேஷன் ஆபீசில் இவரே கோப்புகளை எடுத்துக் கொண்டு போய், இதில் கையெழுத்துப் போடுங்க, அதை அனுப்பி விடுங்கன்னு, ஆர்டர் போடுறாராம். அலுவலர்கள் பலரும், நம்மை எந்த சிக்கலில் மாட்டி விடப்போறாரோன்னு பயந்துக்கிட்டு இருக்காங்க,'' என்றபடி, ஜவுளிக்கடைக்குள் நுழைந்தாள்.

பின்தொடர்ந்து சென்ற சித்ரா, ''நம்மூரு விளையாட்டு அதிகாரியை திடுதிப்புன்னு மாத்திட்டாங்களே... ஏன்... என்னாச்சு,'' என நோண்டினாள்.

''அதுவா, பல கோடி ரூபாய் செலவுல, நேரு ஸ்டேடியத்துல 'சிந்தடிக் டிராக்' அமைச்சிருக்காங்க. சென்னையில் இருந்து சி.எம்., வீடியோ கான்பரன்ஸில் திறந்து வச்சாரு. கோவையில் பெருசா எந்த ஏற்பாடும் செய்யலை; அரசு உயரதிகாரிகள், கட்சி நிர்வாகிகளுக்கு கூட தகவல் சொல்லலை,''

''அதே மாதிரி, உறுப்பினர் செயலர் நம்மூருக்கு வந்தப்போ, ஸ்டேடியத்தின் கேலரி பெயின்ட் பண்ணாம இருந்ததை பார்த்து, 'டோஸ்' விட்டிருக்காரு.

ஆர்.எஸ்.புரத்துல சர்வதேச ஹாக்கி மைதானம் முழுமை அடையாம இருக்கறது சம்பந்தமா கலெக்டரே சொல்லி, உறுப்பினர் செயலரை நேரில் பார்க்கச் சொல்லி கூப்பிட்டாரு. இதைப்பற்றி, விளையாட்டு அலுவலர், அரசின் கவனத்துக்கு சரியான தகவலை சொல்லலையாம்,''

''தீபாவளி கொண்டாட்டத்துக்கு சொந்த ஊருக்கு போறதுக்கு, ஸ்பெஷல் பஸ் விடப் போறாங்களாமே...''

''அடப்போக்கா... அதையெல்லாம் உண்மைன்னு நம்புறீங்களா... பஸ் ஸ்டாண்டுக்கு போயி பார்த்தா உண்மை தெரியும். உத்தரவு போடுற கலெக்டரும், வட்டார போக்குவரத்து அதிகாரிகளும், அரசு போக்குவரத்து உயரதிகாரிகளும், ஒவ்வொரு பஸ் ஸ்டாண்டுக்கும் நேர்ல போயி பார்த்தா, ஜனங்க எவ்வளவு கஷ்டப்படுறாங்கன்னு தெரியும். ஒவ்வொரு பண்டிகைக்கும் 'கடமை'க்கு அறிக்கை மட்டும் வெளியிடுறாங்க,''

''உக்கடத்துல இருந்து ரயில்வே ஸ்டேஷன் வர்றதுக்கு, 15 ரூபாய் கட்டணம் வசூலிக்கிறாங்கன்னு ஒரு விவசாயி, ஒவ்வொரு கூட்டத்துலயும் சொல்லிட்டு வர்றாரு. ஆனா, ஆபீசர்ஸ் கண்டுக்கிறதே இல்லையாம்,''

லேடீஸ் செக்சனுக்குள் சென்றதும் அங்கிருந்த கூட்டத்தை பார்த்து மிரண்ட சித்ரா, ''என்னப்பா... இவ்ளோ பேரு இருக்காங்க... டிசைன் பார்த்து டிரஸ் எடுக்க முடியாது போலிருக்கே,'' என, புலம்பினாள்.

போன வேகத்துல கடையை விட்டு வெளியேறிய இருவரும், கிராஸ்கட் ரோட்டில் புதிதாக போடப்பட்ட 'மாதிரி சாலை'யில் நடந்து சென்றனர்.

''கார்ப்பரேஷன்ல டெண்டர் காலம் முடிஞ்சும் ஆள் வச்சு கலெக்சன் பார்க்குறாங்களாமே...''

''கிழக்கு மண்டலத்துல நடக்குற கூத்தை சொல்றீங்களா... அந்த ஏரியாவுல செயல்படுற ஆடு அறுவைமனை டெண்டர் காலம் முடிஞ்சு, ஒரு வருஷத்துக்கு மேலாகியிடுச்சாம். ஆனா, மூணு பேர், கடை கடையா போயி, கலெக்சன் பார்க்குறாங்க.

மாசம், 10 லட்சம் ரூபாய் வசூல் கெடைக்குதாம்; கார்ப்பரேஷன்ல சல்லிக்காசு கூட கட்டுறதில்லை. யாராவது கேட்டா, கிழக்கு மண்டல நிர்வாகிபேரை சொல்றாங்களாம். இதனால, கார்ப்பரேஷனுக்கு ஒரு கோடி ரூபாய் வருவாய் இழப்பாம்,''

''மதுக்கரை கவுன்சிலர்ஸ் சந்தோஷத்துல, தலை கால் புரியாம இருக்காங்களாமே... என்னவாம்?''

''அதுவா... மதுக்கரை ஏரியாவுல புதுசா ஒரு லே-அவுட் உருவாக்கி இருக்காங்க. அதுக்கு, எதிர்ப்பு தெரிவிக்காம இருக்க, கவுன்சிலர்களுக்கு தலா, 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுத்திருக்காங்களாம். தீபாவளி பண்டிகைக்கு முன்னால, இன்னொரு தொகை தர்றதா சொல்லி இருக்காங்களாம்; அதான் குஷி,''

''ஏன்க்கா... பண்டிகை கொண்டாட்டத்துக்கு ஊரே தயாராகிருச்சு. வீதிக்கு வீதி ஸ்வீட் ஸ்டால் வந்துருக்கு. உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வுக்கு போற மாதிரி தெரியலையே...''

''ஆமாப்பா, நீ சொல்றது உண்மைதான்! மேட்டுப்பாளையம் ஏரியாவுல உணவு பாதுகாப்பு சர்ட்டிபிகேட் இல்லாம, சுகாதாரமில்லாம, பலகாரம் செய்றாங்களாம். அங்க, உணவு பாதுகாப்பு அலுவலகம் பெயரளவுக்கே செயல்படுதுன்னு சொல்றாங்க. ஆய்வுக்கு போறதுக்கு முன்னாடி, முன்கூட்டியே தகவலை கசிய விட்டுட்டுதான் புறப்படுறாங்களாம். கணக்கு காட்டுறதுக்காக ஒன்றிரண்டு இடங்கள்ல ஆய்வு செய்றாங்களாம்,''

''அதிருக்கட்டும். இருகூர் பேரூராட்சியில் துாய்மை பணியாளர்களே மரங்களை வெட்டி வீழ்த்தி, எடைக்கு போட்டு துட்டு பார்க்குறதா கேள்விப்பட்டேன்...''

''நானும் கேள்விப்பட்டேன். இதுசம்பந்தமா, பேரூராட்சி ஆபீசில் ஆதாரத்தோடு புகார் சொன்னதுக்கு, 'எங்களுக்கு எதுவும் தெரியாது; நாங்க எதுவும் செய்ய முடியாது'ன்னு கை விரிச்சிட்டாங்களாம்,'' என்ற சித்ரா, ''ரேஸ்கோர்ஸ்ல எஸ்.பி., முகாம் அலுவலகம் இருக்கு. மழைக்கு ஒரு மரம் விழுந்திருக்கு. அதோடு சேர்த்து, மூணு மரங்களை சேர்த்து வெட்டியிருக்காங்க. இதுசம்பந்தமா, மாவட்ட பசுமை கமிட்டியில ஒப்புதல் வாங்கலையாம். வருவாய் கோட்டாட்சியர்கிட்ட மட்டும் அனுமதி வாங்கிட்டு, வெட்டி வீழ்த்திட்டாங்க,''

''பசுமை கமிட்டியில இருக்குற ஒருத்தரு, மாவட்ட நிர்வாகத்துக்கு குடைச்சல் கொடுத்திட்டே இருக்கறதுனால, அவரை நீக்கிட்டு, வேறொருத்தரை நியமிக்கறதுக்கு தனி ரூட்டுல பிளான் போட்டுட்டு இருக்காங்களாம்,''

''வனத்துறைக்கும், அறநிலையத்துறைக்கும் 'லடாய்' போயிட்டு இருக்காமே...'' என கேட்ட படி, அருகாமையில் இருந்த மற்றொரு ஜவுளிக்கடைக்குள் நுழைந்தாள் மித்ரா.

''ஆமாப்பா... மருதமலையில ரோடு போடுற வேலை நடக்குது. எல்லை தாண்டி, வனப்பகுதியில் கட்டுமான பொருட்கள் குவிச்சு வச்சிருந்ததா, ஒப்பந்ததாரரை, வனத்துறை அலுவலகத்துக்கு வரவழைச்சு, நைட் வரைக்கும் உட்கார வச்சதோட, அபராத தொகையை குடுத்த பிறகுதான் விடுவிச்சிருக்காங்க.

ஆனா, தொகைக்கு ரசீது கொடுக்கலையாம். அந்த தொகை அரசு கஜானாவுக்கு போச்சா... லவட்டிட்டாங்களான்னு வனத்துறை ஊழியர்கள் கிசுகிசுக்கிறாங்க.

''நம்மூர்ல விஜிலென்ஸ் ஆபீசர்ஸ் இருக்காங்களா... என்ன செய்றாங்கன்னே தெரியலை...'' என புலம்பினாள் சித்ரா.

''ஏன்க்கா... என்னாச்சு,''

''மித்து... அன்னுார் கணேசபுரம் உதவி மின் பொறியாளர் ஆபீசுல லஞ்சம் கொடுக்கலைன்னா எந்த வேலையும் நடக்கிறதில்லை. மின் கம்பத்தை மாத்தி நடுறது; புதுசா டிரான்ஸ்பார்மர் நிறுவுறது; மின் இணைப்புக்குன்னு ஒவ்வொன்னுக்கும் 'ரேட் பிக்ஸ்' பண்ணி வச்சிருக்காங்க. லஞ்ச தொகையை எண்ணி வச்சாதான் அடுத்த கட்ட வேலையே நடக்குதாம்...''

''இதே மாதிரி குடிநீர் வடிகால் வாரியத்திலும், ஒரு பிரச்னை ஓடிட்டு இருக்கு. விளாங்குறிச்சி ரோட்டுல இருக்குற கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்துல, பராமரிப்பு பிரிவுல வேலை பார்க்குற ஒருத்தரு, நைட் நேரத்துல ஆபீசுக்கு வர்றாராம். எந்த ஏரியாவுக்கு தண்ணீர் சப்ளையாகுதோ, அந்த வால்வுகளை அடைச்சு வைக்கிறாராம். தண்ணீர் சீரா வரலைன்னு ஆபீசுக்கு, 'வால்வு மேன்' வந்தா, ஆளுக்கு ரூ.5,000 தரணும்னு மிரட்டுறாராம்,''

''என்னக்கா... இது... வடிவேலு கதையா... புதுசு புதுசா மிரட்டுறாங்களே...'' என, நொந்து கொண்டாள் மித்ரா.

''வருமான வரித்துறை சோதனை நடந்துச்சே... அதைப் பத்தி எதுவுமே சொல்லலையே...''

''அழகு நிலையம் நடத்துற அந்த லேடி, திருவண்ணாமலை வி.ஐ.பி.,க்கு ரொம்பவும் நெருக்கம். அந்த செல்வாக்குல மேயராகணுங்கிற கனவுல மிதந்தாங்க. ஆனா, உடன்பிறப்புகளின் உள்குத்தால, நல்ல வேளை உள்ளாட்சி தேர்தல்ல போட்டி போடவே 'சீட்' கெடைக்கலை,''

''கொந்தளிப்புல இருந்த அந்த லேடி, கட்சி கூட்டத்துல, அமைச்சர் முன்னாடியே... தாறுமாறா பேசுனாங்க. இது, தலைமைக்கு நெருக்கடியை ஏற்படுத்துனால, அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தே, அந்த லேடியை துாக்குனதா அறிவிச்சாங்க...''

''ஆனா, கொஞ்ச நாள்லயே... 'மாநில பொறுப்பு' கெடைச்சது. அதுக்கப்புறம், மாவட்ட நிர்வாகிகளை அவுங்க மதிக்கிறதே இல்லை. ஹைவேஸ் டெண்டர், 'டிரான்ஸ்பர்' விஷயத்தில் தலையிட்டது, இவுங்க செயல்பாட்டை வெளியுலகத்துக்கு காட்டிருக்கு. இப்போ, வருமான வரித்துறை சோதனை செஞ்சு, வெட்ட வெளிச்சமாக்கி இருக்கு.

இதுல, 'மாவட்டத்தை' பகைச்சுக்கிட்ட 'மாஜி' கவுன்சிலர், அக்காவுக்கு உதவி செய்யப்போயி, வழக்குல சிக்கித் தவிக்கிறாராம்,'' என்றபடி, சேலைகளை பார்க்க ஆரம்பித்தாள் சித்ரா.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement