Load Image
Advertisement

குறைந்தபட்ச ஆதரவு விலை வரம்பு அதிகரிப்பது அவசியம்

Thalayangam குறைந்தபட்ச ஆதரவு விலை வரம்பு அதிகரிப்பது அவசியம்
ADVERTISEMENT
வரும் 2023 - 24ம் ஆண்டு, ராபி பருவத்தில் கொள்முதல் செய்யப்படும் கோதுமைக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை, குவிண்டாலுக்கு, 150 ரூபாய் அதிகரித்து, 2,275 ரூபாயாக உயர்த்தியுள்ளது, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு. 10 ஆண்டு கால பா.ஜ., ஆட்சியில், கோதுமைக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை, இந்தளவுக்கு உயர்த்தி இருப்பது இதுவே முதல் முறை.

அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக அடுத்த மாதம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, சத்தீஸ்கர், மிசோரம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதில், ம.பி.,யிலும், ராஜஸ்தானிலும், ராபி பருவத்தில் அதிகம் பயிரிடப்படும் கோதுமைக்கான குறைந்த பட்ச ஆதரவு விலையை மத்திய அரசு உயர்த்தியுள்ளது, அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

இதற்கு முன், காங்., தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், 2006 - 2007 மற்றும் 2007 - 2008 ம் ஆண்டுகளில், தொடர்ச்சியாக இரு முறை கோதுமைக்கான ஆதரவு விலை அதிக அளவில் உயர்த்தப்பட்டது. அதன்பின், தற்போது தான் அதிக அளவாக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது, மோடியின், 10 ஆண்டு ஆட்சி காலத்தில், கோதுமைக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு, 875 ரூபாய் வரை உயர்த்தப்பட்டது. இது, காங்கிரசின், 10 ஆண்டு ஆட்சியில்,770 ரூபாய் அளவுக்கு உயர்த்தப்பட்டதை விட அதிகமாகும்.

கோதுமைக்கான ஆதரவு விலை மட்டுமின்றி, கொண்டைக்கடலை, பார்லி, மசூர் பருப்பு, கடுகு மற்றும் குங்கும பூ உள்ளிட்ட வேறு ஐந்து வகை விளை பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையையும் மத்திய அரசு உயர்த்தியுள்ளது.

கடந்த 2020 ஆண்டில், வேளாண்மை துறை தொடர்பாக, வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்த மசோதா என்ற மூன்று மசோதாக்களை, பார்லிமென்டில் தாக்கல் செய்து மத்திய அரசு நிறைவேற்றியது.

ஆனால், இந்த மசோதாக்கள் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும்; குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்கும் நடைமுறையை மத்திய அரசு படிப்படியாக ஒழித்து விடும் என, விவசாய சங்கங்கள் குற்றம் சாட்டின. அதனால், மூன்று சட்ட மசோதாக்களையும் எதிர்த்து கடுமையாக போராடின. இதனால், அந்த சட்ட மசோதாக்களை மத்திய அரசு ரத்து செய்தது.

அப்போது முதல், ராபி மற்றும் காரீப் பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை மத்திய அரசு தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. குறைந்தபட்ச ஆதரவு விலை படிப்படியாக ஒழிக்கப்பட்டு விடும் என்ற, எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு மற்றும் விவசாயிகளின் அச்சத்தை போக்கவே இந்த விலை உயர்வு அறிவிக்கப்பட்டு வருவதாக தெரிகிறது.

அதேநேரத்தில், வேளாண் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்குவதை சட்டப்பூர்வமாக்க வேண்டும் என்ற கோரிக்கை, இன்னும் மத்திய அரசால் நிறைவேற்றப்படவில்லை. இந்த குறைந்தபட்ச ஆதரவு விலையானது, அரசு நிறுவனங்கள் விவசாயிகளிடம் இருந்து கோதுமையை நேரடியாக கொள்முதல் செய்யும் போது வழங்கப்படுவதாகும். ஆனால், தனியார் நிறுவனங்களும், வர்த்தகர்களும் இந்த விலை கொடுத்து தான், கோதுமையை கொள்முதல் செய்வர் என்று சொல்ல முடியாது.

பொருட்களின் உற்பத்தி அளவு, சந்தையில் கோதுமைக்கு உள்ள தேவை போன்றவற்றை பொறுத்தே, அவர்கள் விலையை நிர்ணயிப்பர். மேலும், மத்திய அரசால் அதிக அளவில் கொள்முதல் செய்யப்படுவடுவது, நெல் மற்றும் கோதுமை தான். அதனால், கோதுமைக்கான ஆதரவு விலையை உயர்த்தியது போல, நெல்லுக்கான ஆதரவு விலையையும், கணிசமாக உயர்த்த முன்வர வேண்டும்.

அத்துடன், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள் உள்ளிட்ட வேறு பல பொருட்களையும், குறைந்தபட்ச ஆதரவு விலை வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும். அப்போது தான், நாடு முழுதும் உள்ள விவசாயிகள் பலனடைய முடியும். மத்திய அரசு இந்த விஷயத்தில் அக்கறை காட்ட வேண்டும் என்பதே பலரின் எதிர்பார்ப்பு.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement