ADVERTISEMENT
ஸ்டாக்ஹோம், -மருத்துவத்துக்கான நோபல் பரிசு, ஹங்கேரி மற்றும் அமெரிக்காவை சேர்ந்த இரு பேராசிரியர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய நாடான ஸ்வீடனை சேர்ந்த ஆய்வாளர் ஆல்ப்ரெட் நோபல் நினைவாக, ஆண்டுதோறும் நோபல் பரிசு அளிக்கப்படுகிறது. மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் என ஆறு துறைகளில் சாதனை படைத்தோருக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது.
அந்த வகையில், 2023ம் ஆண்டின் மருத்துவத்திற்கான நோபல் பரிசு, ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள சாகன் பல்கலை பேராசிரியர் கேட்டலின் கரிக்கோ மற்றும் அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலையின் பேராசிரியர் ட்ரூ வீய்ஸ்மேன் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
'நியூக்ளியோசைடு' மூலக்கூறுகள் மாற்றம் தொடர்பான இவர்களின் கண்டுபிடிப்பு, கொரோனா பெருந்தொற்றின் போது, எம்.ஆர்.என்.ஏ., தடுப்பூசி தயாரிக்க காரணமாக அமைந்தது.
இந்த எம்.ஆர்.என்.ஏ., தடுப்பூசி வழக்கமான தடுப்பூசி போல் எதிர்ப்பு சக்தியை உருவாக்காமல், உடலில் வைரஸ் புரதத்தை உற்பத்தி செய்யும் மூலக்கூறுகளை கொண்டவை.
இதன் வாயிலாக நோய்க்கு எதிரான எதிர்ப்பு சக்தி உருவாக்கப்படும் என்பதை ஆய்வின் வாயிலாக இவர்கள் கண்டறிந்தனர். இதை கடந்த, 2005ம் ஆண்டு கரிக்கோ மற்றும் வீய்ஸ்மேன் கண்டுபிடித்து அறிவியல் கட்டுரை வெளியிட்டனர்.
இதற்காக இவர்களுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
நோபல் பரிசுடன், 8 கோடி ரூபாய்க்கான ரொக்கப் பரிசும் அளிக்கப்படும். ஆய்வாளர் ஆல்ப்ரெட் நோபலின் நினைவு தினமான டிச., 10ம் தேதி, ஆண்டுதோறும் இந்த பரிசுகள் அளிக்கப்படுவது வழக்கம்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!