அ.தி.மு.க.,வை முழுமையாக தன் கட்டுப்பாட்டில் கொண்டு வரவும், சீனியர்களின் அதிகாரத்தை குறைக்கவும், இரண்டு சட்டசபை தொகுதிகளுக்கு, ஒரு மாவட்ட செயலர் என்ற அஸ்திரத்தை, பொதுச் செயலர் பழனிசாமி கையில் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
அதிகார மையம்
ஜெயலலிதா மறைந்த போது, கட்சியில், 55 மாவட்ட செயலர்கள் இருந்தனர். அதன்பின், மாவட்ட செயலர்கள் எண்ணிக்கை, 75 ஆக உயர்ந்தது. மா.செ.,க்களில் பலர், பழனிசாமி மாவட்ட செயலராக இருந்த காலத்திலேயே, அந்த பதவியை வகித்தவர்கள். எனவே, தங்களின் பதவிக்கு ஆபத்து என்றால், பழனிசாமிக்கு எதிராக அவர்கள் திரும்பும் நிலை ஏற்படும். இதை தடுக்கவும், பல மாவட்ட செயலர்களை, தங்கள் கைப்பிடிக்குள் வைத்துக் கொண்டு, அதிகார மையமாக செயல்படும் சீனியர்களுக்கு, 'செக்' வைக்கவும், இரண்டு தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலர் என்ற அஸ்திரத்தை, பழனிசாமி கையில் எடுத்துள்ளார்.
இரு தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலர் நியமிக்கப்படும் போது, புதிதாக நியமிக்கப்படும் மாவட்ட செயலர்கள், தன் ஆதரவாளர்களாக இருப்பர்; தன் கை ஓங்கும்; சீனியர்களின் தலையீடு குறையும் என்பது, பழனிசாமியின் கணக்கு. அதை மறைத்து, தேர்தலில் வெற்றி பெற, இரண்டு சட்டசபை தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலரை நியமிப்பதாக கூறியுள்ளார். ஆனால், தங்களின் அதிகாரம் குறைக்கப்படும் என்பதை புரிந்து கொண்ட, முன்னாள் அமைச்சர்கள் சிலர், இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
நெருக்கடி
ஆனாலும், பழனிசாமி இரு தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலர் என்ற தன் முடிவை, செயல்படுத்த துவங்கி உள்ளார். முதல் கட்டமாக, மாவட்ட செயலர்கள் இல்லாமல் இருந்த, தேனி, தஞ்சாவூர் மாவட்டங்களிலும், தன் ஆதரவாளர்கள் வசம் உள்ள, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருநெல்வேலி மாவட்டங்களிலும், இரு தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலரை நியமித்துள்ளார்.இதேபோல், மற்ற மாவட்டங்களையும் பிரிக்க திட்டமிட்டுள்ளார். இதை அறிந்ததும், பிரிக்கப்படும் மாவட்டத்திற்கு புதிய மா.செ.,வாக தன் ஆதரவாளரை நியமிக்குமாறு, முன்னாள் அமைச்சர்கள் நெருக்கடி தரத் துவங்கி உள்ளனர்.அதற்கு பழனிசாமி சம்மதம் தெரிவித்துள்ளார். எனினும், மூத்த தலைவர்கள் வசம் உள்ள மாவட்டங்களை பிரிக்கும் போது சிக்கல் எழும். இவ்வாறு அவர்கள் கூறினர்.- நமது நிருபர் -
வாசகர் கருத்து (2)
குறுக்கு வழியில் பதவிக்கு வந்தபின்னர் செய்த துரோகமானது வரலாற்றில் எப்போதும் பேசப்படும். அப்படிப்பட்ட பழனிச்சாமி அவர்களின் பதவியானது நிரந்தரமாக இருக்க சந்தர்ப்பமே இருக்காது. தேர்தலுக்கு முன்னரே கட்சியில் ஏற்படபோகும் பிளவானது கட்சியை மீண்டும் பலவீனப்படுத்தும். இப்படிப்பட்ட நியமனங்களால் தனது பதவிக்கு ஆபத்து ஏற்படாது என்பதெல்லாம் கதைக்கு உதவாதது. கட்சியில் ஏற்படுத்தப்போகும் மாற்றமானது தனக்குத்தானே குழிதோண்டி கொள்வதை போலாகும். முற்பகல் செய்யின் பிற்பகல் தானே வரும். இது பழனிச்சாமி அவர்களுக்கு சாலப்பொருந்தும். அதனைக்கூட பாஜக வினால் நடந்தது என்று சொல்வார். ஆனால் அது நிஜமல்ல. இவரது இந்த குறுக்குவழி புத்தியால்தான் என்பதை நாடறியும். தேர்தலுக்கு முன்னர் இது நடந்தே தீரும்
நல்ல காமெடி... அந்த ஐவர் அணியையே இவரால் கட்டுப்படுத்த முடியவில்லை... இரட்டை தலைமை போய் இப்பொழுது அறுவர் தலைமை வந்திருக்கிறது. நல்ல முன்னேற்றம்...