வாழ்க்கை வரலாறு
பள்ளிப்படிப்பு முடித்த பின்னர், திருவாங்கூர் பல்கலைக்கழகத்தில் இளநிலை அறிவியல் பட்டத்தையும், கோவை வேளாண் பல்கலை.,யில் இளநிலை பட்டத்தையும் பெற்றார்.
பல்வேறு ஆய்வு நிறுவனங்களில் பணியாற்றிய பிறகு, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.
பசுமைப் புரட்சியின் தந்தை
இவர் இந்தியாவின் பசுமைப் புரட்சியை முன்னின்று நடத்தியவர் ஆவார். வேளாண்மைத்துறை செயலாளர், மத்திய திட்டக்குழுவின் உறுப்பினர் மற்றும் துணைத்தலைவர் உள்ளிட்ட பதவிகளில் பணியாற்றியவர்.
விருதுகள்:
இந்தியாவிலும், உலகின் பல்வேறு நாடுகளிலும் உள்ள 38 பல்கலைக்கழகங்கள் இவருக்கு கவுரவ முனைவர் பட்டங்கள் வழங்கியுள்ளன.
தேசிய, சர்வதேச அளவில் 41 விருதுகள், மகசேசே விருது, கிராமப்புற மக்களின் மேம்பாடு, வேளாண் ஆராய்ச்சிக்காக கொலம்பியா பல்கலைக்கழகத்தின் 'வால்வோ' விருதுகளை எம்.எஸ்.சுவாமிநாதன் பெற்றுள்ளார்.
இவரது இறப்பிற்கு பல்வேறு தரப்பினர் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் தலைவராக, 1972-79 வரை இருந்த போது, அரிசி, கோதுமை விளைச்சலை அதிகரிக்க பசுமை புரட்சி திட்டங்களை செயல்படுத்தியவர். அதிக விளைச்சல் தரும் புதிய நெல் ரகங்களை அறிமுகப்படுத்தினார்.
மகள் சிறப்பு பேட்டி
எம்.எஸ்.சுவாமிநாதனின் மகளும் உலக சுகாதார அமைப்பின் திட்டங்களுக்கான துணை இயக்குனர் சவுமியா நிருபர்களுக்கு அளித்த பேட்டி: சில நாட்களாக தந்தைக்கு உடல்நிலை சரியில்லை. இன்று காலை அவர் இயற்கை எய்தினார். கடைசி வரை விவசாயிகளின் நலனுக்காகவும், சமுதாயத்தில் உள்ள ஏழை எளிய மக்களின் முன்னேற்றத்திற்காகவும் அர்ப்பணிப்புடன் செயல்பட்டார்.
என் அப்பாவும், அம்மாவும் எங்களுக்குக் காட்டிய பாரம்பரியத்தை தொடர்வேன். அவரது கருத்துக்கள் பெண் விவசாயிகளை ஆதரிப்பதற்காக பல்வேறு திட்டங்களுக்கு வழிவகுத்தன. அவர் ஆறாவது திட்டக் கமிஷனில் உறுப்பினராக இருந்தபோது, முதல் முறையாக, பாலினம் மற்றும் சுற்றுச்சூழல் பற்றிய பகுதிகள் பாடப்பகுதியில் கொண்டு வரப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.
தலைவர்கள் இரங்கல்
பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கை: நெருக்கடியான காலத்தில் வேளாண்மையில் அவரது பணி பல லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையை மாற்றியது. கோடிக்கணக்கான மக்களின் உணவுப்பாதுகாப்பை உறுதிப்படுத்தியவர்.
புதுமையின் ஆற்றல் காரணமாக, பலருக்கு வழிகாட்டியாக இருந்துள்ளார். ஆராய்ச்சி மற்றும் வழிகாட்டுதலில் அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு அழியா முத்திரையை பதித்துள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்.
கவர்னர் ஆர்.என்.ரவி
பசுமைப் புரட்சியின் தந்தையும், நவீன பாரதத்தை கட்டமைத்தவருமான எம்.எஸ்.சுவாமிநாதனின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல். அவர் எப்போதும் நம் இதயங்களிலும் மனதிலும் வாழ்வார். துயர்மிகு இந்நேரத்தில் எனது எண்ணங்கள் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் உள்ளன. ஓம் சாந்தி.
முதல்வர் ஸ்டாலின்
சுற்றுச்சூழல் வேளாண்மைத் துறையில் அளப்பரிய பங்காற்றியவர் எம்.எஸ்.சுவாமி நாதன். பசிப்பிணி ஒழிப்பு, உணவுப் பாதுகாப்பு ஆகிய குறிக்கோளுக்கு முக்கால் நூற்றாண்டு காலம் அரும்பணி ஆற்றியவர். கருணாநிதி முதல்வராக இருந்த போது மாநிலத் திட்டக் குழுவில் இடம் பெற்று ஆலோசனைகளை வழங்கினார். நீடித்த உணவுப்பாதுகாப்புக்கு ஆற்றிய பங்களிப்பால் பசுமைப் புரட்சியின் தந்தை என போற்றப்பட்டவர்.
சுவாமிநாதனின் இழப்பு அறிவியல் துறைக்கும் தமிழகத்துக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். மிகப் பெரும் ஆளுமையை இழந்து தவிக்கும் அறிவியல் உலகினர் அவரது குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவிக்கிறேன். இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.
பழனிசாமி
பசுமைப் புரட்சியின் தந்தை எம்.எஸ்.சுவாமிநாதன் மறைந்த செய்தி கேட்டு மிகவும் வருத்தமுற்றேன். இந்திய விவசாயத்தை மேம்படுத்த புதிய வகை உணவு தானிய விதைகள் உள்ளிட்டவற்றை உருவாக்கியவர் என அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி கூறியுள்ளார்.
போலீஸ் மரியாதை
வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு போலீஸ் மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடத்த முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
வாசகர் கருத்து (34)
இந்திய தேசிய வேளாண் விஞ்ஞானி .......இழப்பு ஈடு செய்ய முடியாதது. ..ஐயா அவர்களின் ஆன்மா இறைவனடி சேர வேண்டுவோம்
தமிழகத்துக்கும் இந்தியாவுக்கும் பெருமை சேர்த்த ஒரு மாமனிதரின் ஆத்மா சாந்தி அடையட்டும்.ஆழ்ந்த இரங்கல்கள்!
இந்தியப் பசுமைப் புரட்சியில் பெரும்பணி ஆற்றிய ஒரு தலை சிறந்த வேளாண் அறிவியலறிஞரும் உழவர் வருமானம் வளரக் குரல் கொடுத்து வந்த உயர் பண்பாளர் மறைவு ஒரு பேரிழப்பாகும்
வருந்துகிறோம். RIP
Very orator, attended his lectures, commanding English knowledge, very few Indians only have this subject knowledge. Former professor Anna University