ADVERTISEMENT
நியூயார்க், ''இந்தியாவின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிப்பதால், சீன ஆய்வு கப்பலை எங்கள் நாட்டு துறைமுகத்தில் நிறுத்துவதற்கு இதுவரை அனுமதி அளிக்கப்படவில்லை,'' என, இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் அலி சப்ரி தெரிவித்து உள்ளார்.
நம் அண்டை நாடான இலங்கையின் தென் பகுதியில் உள்ள அம்பந்தோட்டை துறைமுகத்தில், ஏவுகணைகள் மற்றும் செயற்கைக்கோள்களை கண்காணிக்கும், 'யுவான் வாங் 5' என்ற உளவு கப்பலை, கடந்த ஆண்டு ஆகஸ்டில் சீனா நிறுத்தியது; இதற்கு இந்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்தது.
இந்த உளவு கப்பல், இந்திய ராணுவ தளங்களை கண்காணிக்க வாய்ப்புள்ளதால், நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு கவலை தெரிவித்தது.
இதன் காரணமாக, உளவு கப்பல் வருகைக்கு முதலில் ஆட்சேபம் தெரிவித்த இலங்கை அரசு, பின், சீனாவின் நிர்ப்பந்தத்தால் அனுமதி அளித்தது. கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை அரசுக்கு, இந்தியா மற்றும் சீனா பெருமளவில் பொருளாதார உதவிகள் செய்துள்ளன.
இரு நாடுகளும் சேர்ந்து 58,000 கோடி ரூபாய் அளவுக்கு இலங்கைக்கு கடன் உதவிகள் அளித்துள்ளன. சீனா மட்டும், 25,000 கோடி ரூபாய் கடன் அளித்துள்ளது. எனவே, இருநாடுகளின் தயவும் இலங்கைக்கு தற்போது தேவையாக உள்ளது.
இந்நிலையில், சீனாவுக்கு சொந்தமான, 'ஷி யான் 6' என்ற ஆய்வு கப்பல், அந்நாட்டு தேசிய நீர்வள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்துடன் இணைந்து, இலங்கை கடல் பகுதிக்கு அடுத்த மாதம் வர உள்ளதாகவும், அங்கு பல்வேறு ஆய்வுப் பணிகளில் ஈடுபட உள்ளதாகவும் தகவல் வெளியானது.
இதற்கு மத்திய அரசு ஆட்சேபம் தெரிவித்தது; அமெரிக்காவும் கவலை தெரிவித்தது.
இது குறித்து அமெரிக்காவின் நியூயார்க்கில் நடந்த ஐ.நா., கூட்டத்தில் பங்கேற்க வந்திருந்த இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் அலி சப்ரி கூறியதாவது:
சீன ஆய்வு கப்பலை இலங்கையில் நிறுத்துவது தொடர்பாக பேச்சு நடந்து வருகிறது. இது தொடர்பாக இந்திய அரசு கவலையை வெளிப்படுத்தியது. இந்த விவகாரத்தில் இந்தியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் கலந்து ஆலோசித்து நிலையான செயல்பாட்டு வழிமுறைகளை நாங்கள் வகுத்துள்ளோம்.
அந்த வழிமுறைகளை சீனா பின்பற்றினால் எங்களுக்கு பிரச்னை இல்லை. இணங்க மறுத்தால் அதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. இந்தியாவின் பாதுகாப்புக்கு நாங்கள் முக்கியத்துவம் அளிப்பதால், சீனாவின் ஷி யான் 6 கப்பலை இலங்கையில் நிறுத்துவதற்கு இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!