Load Image
Advertisement

மகளிர் இடஒதுக்கீடு மசோதா: சாதனை படைத்த மோடி அரசு

 Modi Govt made a record of womens reservation bill    மகளிர் இடஒதுக்கீடு மசோதா: சாதனை படைத்த மோடி அரசு
ADVERTISEMENT
லோக்சபா மற்றும் மாநில சட்டசபைகளில், பெண்களுக்கு, ௩௩ சதவீத இடஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் சட்ட மசோதா, பார்லிமென்டின் இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டு, நீண்ட விவாதத்திற்குப் பின் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அரசியல் சட்டத்தின் இந்த, ௧௨௮வது திருத்த மசோதாவுக்கு ஆதரவாக, ௪௫௪ எம்.பி.,க்களும், எதிராக, இரு எம்.பி.,க்களும் ஓட்டளித்தனர். இதிலிருந்து மசோதாவுக்கு எவ்வளவு ஆதரவு உள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்.

மகளிருக்கு இடஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் மசோதா, முதன் முதலாக, ௧௯௯௬ல் பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட்டது. அதன்பின், ௨௭ ஆண்டுகளாக, அவ்வப்போது தாக்கல் செய்யப்பட்டு விவாதிக்கப்பட்டாலும், அதை நிறைவேற்ற முடியவில்லை. தற்போது தான், எம்.பி.,க்களின் ஏகோபித்த ஆதரவுடன், சுமுகமாக நிறைவேற்றப்பட்டு உள்ளது. அதற்கு, பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணி, மத்தியில் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியில் இருப்பதும் முக்கிய காரணம்.

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில், பா.ஜ., தலைமையிலான அணியை எப்படியும் தோற்கடிக்க வேண்டும் என, காங்கிரஸ், தி.மு.க., உள்ளிட்ட, ௨௮ கட்சிகள் இணைந்து, 'இண்டியா' கூட்டணியை துவக்கியுள்ள நிலையில், முந்தைய ஆட்சியாளர்களால் முடியாததை நாங்கள் செய்து விட்டோம் என்பதை பறைசாற்றும் வகையில், மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றி, அந்தக் கட்சிகளுக்கு மோடி அரசு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளது.

அதே நேரத்தில், இந்த மசோதாவுக்குள் ஜாதி மற்றும் சமூக அடிப்படையிலான உள்ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். குறிப்பாக, ஜாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்தி, எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினருடன், இதர பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்த பெண்களுக்கும் உள்ஒதுக்கீடு அளிப்பது உறுதி செய்யப்பட வேண்டும் என, காங்கிரஸ் உள்ளிட்ட சில அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்திருக்கின்றன. ஆனாலும், மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுவரையறைகளுக்கு பிறகே, இந்தக் கோரிக்கைகள் பற்றி பரிசீலிக்கப்படும் என்பதை மறுப்பதற்கு இல்லை.

பெண்களுக்கான இந்த ௩௩ சதவீத இடஒதுக்கீடானது, பாலின சமத்துவத்திற்கு அப்பாற்பட்டது. கொள்கைகளை உருவாக்குதல் மற்றும் முடிவுகள் எடுப்பதில் பெண்களின் பங்களிப்பானது, அர்த்தமுள்ள தாக்கத்தை ஏற்படுத்துவதாக பல ஆய்வு அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

உள்ளாட்சி அமைப்புகளில், பெண்கள் பலர் போட்டியிட்டு வெற்றி பெற்றாலும், அவர்களின் அன்றாட நடவடிக்கைகளில், கணவர் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் ஆதிக்கமே மேலோங்கி இருப்பதாக புகார் கூறப்பட்டாலும், பெண்களை தேர்ந்தெடுப்பதில் பல சாதகமான அம்சங்களும் உள்ளன. அதாவது, குடும்ப பிரச்னைகளை தாண்டி, சிறிய அளவிலாவது அவர்கள் பொது விஷயங்களில், பிரச்னைகளில், மக்கள் நலனில் அக்கறை காட்டும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

இதற்கு முன், பார்லிமென்டில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா ஒவ்வொரு முறை விவாதத்திற்கு வந்த போதும், சில அரசியல் கட்சிகள் நடத்திய நாடகம் காரணமாக, அது நிறைவேறாமல் போனது. தற்போது அந்த நிலைமை மாறி விட்டது. லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல்களில் பெண்கள் போட்டியிடுவது என்பது, நாடு சுதந்திரம் அடைந்தது முதல் குறிப்பிட்ட ஆண்டுகள் வரை குறைவாகவே இருந்தது. தற்போது, அந்த நிலைமையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. ௨௦௧௯ லோக்சபா தேர்தலில், ௭௨௬ மகளிர் தேர்தல் களத்தில் இருந்தனர்.

தற்போது மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேறி உள்ளதால், வரும் காலங்களில் இந்த எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும். அத்துடன், மாறி வரும் காலச் சூழலில், பெண்கள் அதிக அளவில் அதிகாரத்திற்கு வருவதையும், முடிவுகள் எடுப்பதில் அவர்களின் பங்களிப்பையும், நீண்ட காலத்திற்கு தள்ளிப் போட முடியாது என்பதையும் அரசியல் கட்சிகள் உணர்ந்துள்ளன. அதுவே, மசோதா பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற காரணம். பெண்களுக்கு அதிகாரம் அளித்தலில், இது மிகப்பெரிய முன்னேற்றகரமான நடவடிக்கையே.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement