ADVERTISEMENT
மதுரை : மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை பெற்ற 56 ஆயிரம் பேரில், இதுவரை தனித்துவ அடையாள அட்டை (யுனிக் ஐ.டி.,) பெற 26 ஆயிரம் பேர்தான் விண்ணப்பித்துள்ளனர். மூன்றாண்டுகளாகியும் பெறாதவர்கள் பழைய அடையாள அட்டையை கொடுத்து, புதிய அட்டையை பெற முன்வர வேண்டும்.
மாற்றுத்திறனாளிகளை அடையாளம் கண்டு, நலத்திட்ட உதவிகளை வழங்க அரசு அடையாள அட்டை வழங்குகிறது. இதற்கு விண்ணப்பிப்போரின் உடல் பாதிப்பின் தன்மையை குறிப்பிட்டு தேசிய அடையாள அட்டை வழங்கப்படுகிறது. இதற்கென அவ்வப்போது முகாம்கள் நடத்தப்படுகின்றன.
இவ்வகையில் மதுரை மாவட்டத்தில் 56 ஆயிரம் பேர் வரை உள்ளனர். இவர்களில் உடல் ஊனமுற்றோர் 28 ஆயிரம் பேர், மனவளர்ச்சி குன்றியோர் 11 ஆயிரம் பேர், பார்வை குறைபாடுள்ளோர் 4 ஆயிரம் பேர், வாய்பேசாத, காதுகேளாதோர் 7800 பேர், தொழுநோய் பாதித்து குணமானோர் 1400, மனநலன் பாதித்தோர் 1100, மூளை முடக்குவாதம் பாதித்தோர் 900 என உள்ளனர். இவர்கள் தவிர ஆட்டிசம், ரத்தசோகை பாதிப்பு, உயரம் குறைவானவர்கள், ஆசிட்வீச்சு, தீக்காயம் பாதித்தோர், நீண்டநாள் நரம்பியல் பாதிப்பு உட்பட மொத்தம் 21 வகை குறைபாடுடையோர் உள்ளனர்.
இவர்களில் பலர் முகாம் நடக்கும்போதெல்லாம் சென்று அடையாள அட்டையை வாங்கி வைத்துள்ளனர். அறியாமை, தொலைந்து போனால், பழைய எண்ணில் வாங்காமல் புதிதாக வாங்குவது போன்றவற்றால் ஒன்றுக்கு 2 ஆக பெற்றுள்ளனர். இதனால் மாவட்ட அளவில் 56 ஆயிரம் பேர் அடையாள அட்டை பெற்றுள்ளனர்.
இதேநிலைதான் அனைத்து மாவட்டங்களிலும் உள்ளது. இதனால் அரசுக்கு திட்டமிடும்போதும், நிதி ஒதுக்கீடு செய்யும்போதும் தவறான மதிப்பீடு செய்ய வாய்ப்புள்ளது. எனவே, உண்மையான எண்ணிக்கையை அறியவும், வசதிக்காகவும் 3 ஆண்டுகளாக 'ஸ்மார்ட் கார்டு' போல தனித்துவ அடையாள அட்டை வழங்க அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இதில் மாற்றுத்திறனாளிகள் முழுவிவரமும் கம்ப்யூட்டரில் பதிவாவதால் இரட்டைப் பதிவு குறைகிறது. இவ்வகையில் 3 ஆண்டுகளில் 27 ஆயிரம் பேர்தான் அடையாள அட்டை பெற்றுள்ளனர். இந்த எண்ணிக்கை அதிகபட்சம் 40 ஆயிரம் பேர் வரை வரவாய்ப்புள்ளது. இதற்காக முகாம்கள் நடத்தி தனித்துவ அடையாள அட்டை வழங்குகின்னறர்.
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சுவாமிநாதன் கூறுகையில், ''பல்வேறு காரணங்களால் அடையாள அட்டை பெறுவதில் இரட்டைப் பதிவு உள்ளது. இதனை சரியாக கணக்கிட தற்போது முகாம் நடத்தி தனித்துவ அட்டை வழங்குகிறோம். விரைவில் 'பிர்க்கா' அளவில் முகாம் நடத்த உள்ளோம். இதில் பங்கேற்க வருவோர் தேசிய அடையாள அட்டை, ஆதார் அட்டை, சமீபத்தில் எடுத்த போட்டோ, அலைபேசி எண் ஆகியவற்றுடன் வந்தால் ஒரு வாரத்தில் தனித்துவ அட்டை வழங்க நடவடிக்கை எடுப்போம்'' என்றார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!