ADVERTISEMENT
திருவொற்றியூர், சென்னை, திருவொற்றியூர் - மணலியை இணைக்கும் வகையில், 52 கோடி ரூபாய் செலவில், பகிங்ஹாம் கால்வாய் மீது, மேம்பாலம் கட்டும் பணி, 2017ல் துவங்கி நடந்தது.
இதற்காக, திருவொற்றியூர் கான்கார்ட் சந்திப்பில் இருந்து, குப்பை மேடு, வெற்றி விநாயகர் நகர், கார்கில் நகர், ராஜாஜி நகர் வழியாக, மணலிக்கு பேருந்துகள் இயக்கப்பட்டன.
இதனால், மணலி, மீஞ்சூர், மாதவரம் மற்றும் வள்ளலார் நகர், பிராட்வே உள்ளிட்ட பகுதிகளுக்கு, மேற்கு பகுதியைச் சேர்ந்த மக்கள் எளிதில் சென்று வர முடிந்தது.
பணிகள் முடிந்து மேம்பாலம் சமீபத்தில் திறக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, மேம்பாலத்தின் வழியாக மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இதனால், திருவொற்றியூர் மேற்கு பகுதியைச் சேர்ந்த, கார்கில் நகர், ராஜாஜி நகர் மக்கள், பேருந்து சேவைக்காக மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று காலை, கார்கில் நகர், ராஜாஜி நகர் உள்ளிட்ட மேற்கு பகுதி மக்கள் பயன்பெறும் வகையில், பேருந்து சேவை கோரி, 50க்கும் மேற்பட்டோர், மேம்பால இறக்கம் - திருவொற்றியூர் கான்கார்ட் சந்திப்பில், திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அதிகாரிகளிடம் கூறி, உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!