Load Image
Advertisement

பா.ஜ., அ.தி.மு.க., கூட்டணி முறிவு

BJP, ADMK alliance breakup   பா.ஜ., அ.தி.மு.க., கூட்டணி முறிவு
ADVERTISEMENT
சென்னை : பா.ஜ.,வுடனான கூட்டணி முறிந்து விட்டதாக. அ.தி.மு.க., திட்டவட்டமாக அறிவித்துள்ளது. சென்னையில் நேற்று, மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலர்கள், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களுடன் நடத்திய ஆலோசனைக்குப்பின், இம்முடிவை அ.தி.மு.க., தலைமை எடுத்துள்ளது.

பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், அதற்கு அடுத்த பெரிய கட்சியாக, அ.தி.மு.க., இருந்தது. இரு கட்சிகளும், 2019 லோக்சபா தேர்தல், 2021 சட்டசபை தேர்தல் ஆகியவற்றை கூட்டாக சந்தித்தன.அதன்பின் நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பிரச்னை ஏற்பட்டது; பா.ஜ., தனித்து போட்டியிட்டது.

ஏமாற்றம்



அதை மறந்து, இரு கட்சிகளும் கூட்டணியில் தொடர்வதாக அறிவித்த போதிலும், உறவு சீராக இல்லை. ஈரோடு தொகுதி இடைத்தேர்தலின்போது, கசப்பு அதிகரித்தது. தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலைக்கும், அ.தி.மு.க., தலைமைக்கும் இடையே, கருத்து வேறுபாடு பெரிதானது.

அதைத் தொடர்ந்து, ஜெயலலிதா, அண்ணாதுரை குறித்து, அண்ணாமலை பேசியதற்கு கண்டனம் தெரிவித்து, பா.ஜ., கூட்டணியில் இருந்து விலகுவதாக, கடந்த 18ம் தேதி, அ.தி.மு.க., சார்பில், முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.

அதன் பின்னும், அ.தி.மு.க., தரப்பில், மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசி, உறவை புதுப்பிக்க முயற்சி எடுக்கப்பட்டது. முன்னாள் அமைச்சர்கள் முனுசாமி, விஸ்வநாதன், வேலுமணி, தங்கமணி ஆகியோர் புதுடில்லி சென்றனர்; ஆனால், அமித் ஷாவை சந்திக்க முடியாமல், ஏமாற்றத்துடன் திரும்பினர்.

அந்த கோபத்தோடு, சென்னையில் நேற்று, மாவட்ட செயலர்கள், மாநில நிர்வாகிகள் கூட்டத்தை, அக்கட்சி பொதுச்செயலர் பழனிசாமி கூட்டியிருந்தார்.

கூட்டம் துவங்கியதும், வரவேற்று பேசிய கே.பி.முனுசாமி, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானம், இன்று நிறைவேற்றப்பட உள்ளதாக தெரிவித்தார். வேலுமணி பேசுகையில், அமித்ஷாவை சந்திக்க முயன்றதையும், பியுஷ் கோயலை சந்தித்த விபரத்தையும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய தங்கமணி, செங்கோட்டையன், செம்மலை ஆகியோர், தலைமை எடுக்கும் முடிவை ஏற்பதாக தெரிவித்தனர். சி.வி.சண்முகம், 'கூட்டணியில் இருந்து விலகுவது நல்ல முடிவு' என்றார்.

இறுதியாக, பழனிசாமி பேசியதாவது:

உங்கள் முடிவை ஏற்கிறேன். கடந்த உள்ளாட்சி தேர்தலில், தகுதிக்கு மீறி இடம் கேட்டனர். நாம் முடியாது என்றோம். அடுத்து பேச்சுக்கு வந்தவர்கள், 'உங்களிடம் பேச வரவில்லை. நன்றி கூறவே வந்தோம்' என்றனர்.இப்படி தொடர்ந்து, மரியாதை குறைவாக நடந்து கொண்டனர். நமக்கு உரிய மரியாதையை, அவர்கள் அளிக்கவில்லை. நம்மை மதிக்காதவர்களின் கூட்டணியில் நாம் இருக்க வேண்டியதில்லை.

நாம் பா.ஜ., கூட்டணியில் இருப்பதால், நம்மை அடிமை என, ஸ்டாலின் கூறுகிறார். பா.ஜ.,விடம் இருந்து விலகிய பின், என்ன கூறுகிறார் என்று பார்ப்போம்.இவ்வாறு அவர் பேசினார்.

தீர்மானம்



அதையடுத்து, உங்கள் முடிவின்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளதாக கூறி, அ.தி.மு.க., கூட்டணியில் இருந்து பா.ஜ.,வை விலக்கும் தீர்மானத்தை படித்தார்.

தீர்மான விபரம்:

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள, பா.ஜ., மாநில தலைமை கடந்த ஓராண்டு காலமாக, திட்டமிட்டு வேண்டுமென்றே உள்நோக்கத்தோடு, அ.தி.மு.க., மீதும், அண்ணாதுரை, ஜெயலலிதா ஆகியோர் மீதும் அவதுாறாகப் பேசி, எங்கள் கொள்கையை விமர்சித்து வருகிறது.

மேலும், பா.ஜ., மாநில தலைமை, கடந்த ஆக., 20ல் மதுரையில் நடந்த, அ.தி.மு.க., பொன்விழா எழுச்சி மாநாடை சிறுமைப்படுத்தியும், 2 கோடிக்கும் மேற்பட்ட தொண்டர்களை வழிநடத்தி வரும், பொதுச்செயலர் பழனிசாமி குறித்து அவதுாறாக விமர்சித்தும் வருகிறது.

இச்செயல், கட்சித் தொண்டர்கள், நிர்வாகிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. தொண்டர்கள் எண்ணத்திற்கும், விருப்பத்திற்கும், உணர்வு களுக்கும் மதிப்பளித்து, பா.ஜ., கூட்டணியில் இருந்தும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்தும், அ.தி.மு.க., விலகிக் கொள்கிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


இத்தீர்மானத்தை, செய்தியாளர்கள் கூட்டத்தில் படித்த கே.பி.முனுசாமி, ''2024ல் நடக்க உள்ள லோக்சபா தேர்தலில், பழனிசாமி தலைமையில், மற்ற கூட்டணிக் கட்சிகளோடு சேர்ந்து, அ.தி.மு.க., தேர்தலை சந்திக்கும்,'' என்றார்.



மக்கள் அதிருப்தி: பழனிசாமி

'தி.மு.க., மீது மக்களுக்கு ஏற்பட்டுள்ள அதிருப்தி காரணமாக, நமக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது' என, அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி, மாவட்ட செயலர்களிடம் தெரிவித்துள்ளார்.அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், நேற்று மாலையில், மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலர்கள், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் கூட்டுக் கூட்டம் நடந்தது. அதில், பா.ஜ., கூட்டணியில் இருந்து விலக முடிவு செய்து, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்பின், மாவட்ட செயலர்கள் கூட்டம் தனியாக நடந்தது. மொபைல் போன் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டது. அதில், பழனிசாமி கூறியதாவது:தி.மு.க., ஆட்சி மீது, மக்களுக்கு கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. எனவே, நம் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. நமக்கு பலவீனமே பா.ஜ., தான்; தற்போது அதையும் நீக்கி விட்டோம். சிறுபான்மையினர் ஓட்டுகளும் நமக்கு வரும். எனவே, அனைவரும் உற்சாகத்துடன் தேர்தல் பணியை துவக்குங்கள்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.





முறிவுக்கு காரணம் என்ன?

அண்ணாதுரை பற்றி அண்ணாமலை கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியதும், 'அவர் தலைவர் பதவிக்கு தகுதியற்றவர். அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி தற்போது இல்லை' என்று, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் தெரிவித்தனர்.இதற்கு பதிலளித்த அண்ணாமலை, 'பிரதமர் மோடியை தலைவராக ஏற்போரை, நாங்கள் ஏற்போம். ஆனால், தமிழகத்தின் அடுத்த முதல்வர் பழனிசாமி என்பதை, என்னால் கூற முடியாது' என்றார்.இந்த கருத்தை, பழனிசாமியால் ஜீரணிக்க முடியவில்லை. அதன் விளைவுதான் கூட்டணி முறிவு என்கின்றனர், அ.தி.மு.க.,வினர்.



அ.தி.மு.க.,வினர் கொண்டாட்டம்!

பா.ஜ., கூட்டணியில் இருந்து விலகுவதாக, மாவட்ட செயலர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட தகவல் வெளியானதும், சென்னையில் கட்சி அலுவலகம் வெளியே கூடியிருந்த தொண்டர்கள், உற்சாக குரல் எழுப்பினர். பட்டாசுகள் வெடித்தனர். இனிப்புகள் வழங்கி, தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.



வாசகர் கருத்து (99)

  • Dharmavaan - Chennai,இந்தியா

    திமுக சீண்டலுக்கு அதிமுக அடிபணிந்துவிட்டது இப்போது திமுகவுக்கே சாதகம்

  • Dharmavaan - Chennai,இந்தியா

    thimuka

  • jagan - Chennai,இலங்கை

    கனிமொழி தான் நிஜ தீய முக எனவே அவர் தான் உண்மையான தீயமுக என்று கோர்ட் சென்று உதயா சூரியனை முடக்க வேண்டும்

  • mohan - Neyveli,இந்தியா

    இது நல்ல முடிவு அதிமுக சிறுபான்மையினரின் ஓட்டுக்களை பெறலாம். கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலை சிறுத்தைகளுடன் கூட்டணி அமைக்கலாம். காங்கிரஸ் வர வாய்ப்பில்லை. பாஜகவிற்கு தனியாய் நிற்பதால் கட்சி வலுவடையும். திராவிட கட்சிகளின் ஊழல்களை பற்றி பேசலாம். திமுக அதிக இடங்களில் நிற்கலாம். வெற்றி பெற்றால் மத்தியில் வலுவான நிலையில் இருக்கலாம். மக்களுக்கும் இது நல்லது. நீண்ட நாட்களுக்கு பிறகு திமுக அதிமுக தவிர மாற்று அணி உருவாகும்

  • Gokul Krishnan - Thiruvanthapuram,இந்தியா

    இன்னும் ஒரு சில மாதங்கள் தான் எட்டப்பன் எதிர் கட்சி தலைவா பதவி காலி 20 எம் எல் கள் கட்சி தாவி கரியை பூசுவார்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement