ADVERTISEMENT
மதுரை : மதுரை தி.மு.க.,வில் பதவி கிடைக்காத அதிருப்தி நிர்வாகிகள் மகளிரணி, மகளிர் தொண்டரணி கூட்டங்களை புறக்கணித்து 'கெத்து' காட்டியதால் கூட்டம் பிசுபிசுத்தது.
சமீபத்தில் தி.மு.க.,வில் 20க்கும் மேற்பட்ட அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில் சீனியர்கள், கட்சிக்காக உழைத்தவர்களுக்கு பதவிகள் கிடைக்கவில்லை என, சர்ச்சை எழுந்தது. இந்நிலையில் சமீபத்தில் மகளிரணி, மகளிர் தொண்டரணியில் புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டனர்.
நகர் தி.மு.க.,வில் மகளிரணி அமைப்பாளராக தற்போதைய மாநகராட்சி மண்டல தலைவரான சரவண புவனேஸ்வரியும், மகளிர் தொண்டரணியில் கவுன்சிலராக உள்ள நுார்ஜஹான் பேகம் உட்பட துணை அமைப்பாளர்கள், துணைத் தலைவர்கள் அறிவிக்கப்பட்டனர்.
இதில் கடும் அதிருப்தி கிளம்பியது. குறிப்பாக சீனியர் நிர்வாகிகள் புறக்கணிக்கப்பட்டதாகவும், ஜூனியர் நிர்வாகிகள் நியமனத்தில் முறைகேடு நடந்துள்ளதாகவும் சர்ச்சை கிளம்பியது.
இந்நிலையில் புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ., தளபதி அலுவலகத்தில் மாநில மகளிரணி துணை செயலாளர் தமிழரசி எம்.எல்.ஏ., தலைமையில் நடந்தது. நகர் செயலாளர் தளபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் பெரும்பாலான மகளிர் நிர்வாகிகள் பங்கேற்கவில்லை.
மகளிரணி நிர்வாகிகள் கூறியதாவது: இரண்டு அணிகளிலும் கட்சிக்கு தொடர்பில்லாத பலருக்கு பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. நியமனத்தில் 'பணம்' விளையாடியுள்ளது. ஏற்கெனவே கவுன்சிலர், மண்டல தலைவர் என பதவிகளில் இருப்பவர்களுக்கு கட்சிப் பதவியும் வாரி வழங்கப்பட்டுள்ளது. இதனால் முக்கிய நிர்வாகிகள் மாநில தலைவர் கனிமொழியிடம் புகார் தெரிவிக்க சென்னை சென்றுவிட்டனர். மகளிரணியில் அதிருப்தி நிலவுவதால் தான் திருச்சியில் நடக்க இருந்த கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மதுரையில் கட்சித் தலைமையை ஏமாற்ற கண்துடைப்பாக கூட்டத்தை நடத்தியுள்ளனர் என்றனர்.
தமிழரசி எம்.எல்.ஏ., கூறுகையில், கூட்டத்தில் ஒருவர்தான் பங்கேற்கவில்லை. புதிய உறுப்பினர்கள் அதிகம் சேர்க்கவும், அரசு திட்டங்களை பெண்களிடம் கொண்டு சேர்க்கவும் வலியுறுத்தியுள்ளோம். மாநில அளவில் பயிலரங்கு மதுரையில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. திருச்சி கூட்டம் ரத்து செய்யப்படவில்லை. ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்றார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!