கர்நாடகாவில் ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் அரசு, தன் ஐந்து இலவச வாக்குறுதிகளில், பெண் பயணியருக்கு இலவச பஸ் வசதியான 'சக்தி' திட்டம்; 200 யூனிட் இலவச மின்சாரமான கிரஹஜோதி; குடும்ப தலைவிக்கு மாதந்தோறும் 2,000 ரூபாய் வழங்கும் கிரஹலட்சுமி; 10 கிலோ இலவச அரிசி வழங்கும் அன்னபாக்யா திட்டங்களை அமல்படுத்தி உள்ளது.
பட்டதாரிகள், டிப்ளமோ முடித்தவர்களுக்கு பணி கிடைக்கும் வரை இரண்டு ஆண்டுகளுக்கு மாதந்தோறும் முறையே 3,000, 1,500 ரூபாய் வழங்கும் திட்டம் மட்டும் இன்னும் அமல்படுத்தவில்லை.
இந்த இலவச திட்டங்களை தொடர்ந்து வழங்கவும், வளர்ச்சி பணிகளை மேற்கொள்ளவும், கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக, பால், மின்சாரம் கட்டணங்களை ஏற்கனவே உயர்த்தி உள்ளது.
கலால் வரி
நடப்பாண்டு 2023 - 24ல், கலால் வரியாக 36 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட, முதல்வர் சித்தராமையா இலக்கு நிர்ணயித்துள்ளார். ஆனால், செப்டம்பர் 12ம் தேதி வரை 15,122 கோடி ரூபாய் மட்டுமே வருவாய் கிடைத்துள்ளது.
இது தொடர்பாக, சமீபத்தில், கலால் துறை அதிகாரிகளுடன் முதல்வர் சித்தராமையா ஆலோசனை நடத்தினார்.
அதில் முன்மொழியப்பட்ட விஷயங்கள்:
l உரிமம் புதுப்பிக்கப்படாமல் உள்ள 379 எம்.எஸ்.ஐ.எல்., மதுக்கடைகளை புதிதாக ஏலம் விடுவது
l உரிமம் புதுப்பிப்புக்கு நான்கு மடங்கு அதிகமாக கட்டணம் நிர்ணயிப்பது. அதற்காக கலால் சட்டத்தில் திருத்தம் செய்வது
l மக்கள் தொகை கணக்கெடுப்பு - 2011ன் படி, 5,000 மக்கள் தொகை கொண்ட கிராம பஞ்சாயத்தில் மதுபான கடை திறக்க கலால் உரிமம் வழங்க வேண்டும் என்ற விதியை தளர்த்த வேண்டும். இதை, 3,000 மக்கள் தொகை உள்ள கிராம பஞ்சாயத்துகளில் உரிமம் வழங்குவது என மாற்றுவது
l மால்களில் மதுபானம் விற்பனை செய்ய புதிய உரிமம் வழங்குதல்
l புதிதாக சில்லறை பீர் கடைகள் திறக்க அனுமதி; இதற்காக 2 லட்சம் ரூபாய் கட்டணம் விதித்தல்
l கலால் துறையிடம் தெரிவிக்காமல், பங்குதாரர்கள் மாறினால், 1 லட்சம் ரூபாய் அபராதம் விதிப்பது
l மைக்ரோ மதுபான ஆலைகளின் தற்போதுள்ள உரிமம் கட்டணம், கலால் வரி, கூடுதல் கலால் வரியை உயர்த்துதல்.
இவ்வாறு அதில் விவாதிக்கப்பட்டது.
நெடுஞ்சாலைகள்
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, 5,000 மக்கள் தொகை உள்ள கிராம பஞ்சாயத்துகளில் மதுபான கடைகள் திறக்கலாம் என உத்தரவு உள்ளது. இதை மனதில் வைத்து, 1,000 கடைகள் திறக்க அனுமதி அளித்துள்ளது. இனிமேல் 3,000 மக்கள் தொகை என கொண்டு வந்தால், பல கிராம பஞ்சாயத்துகளில் கூடுதலாக கடைகள் திறக்கப்படும்.
அதுமட்டுமின்றி, கிராமங்கள் வழியில் உள்ள தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில், சி.எல்., 6ஏ விதியின் கீழ், புதிதாக ஸ்டார் ஹோட்டல்களில் மதுபானம் விற்கவும்; சி.எல்., 7 ஏ விதியின் கீழ், 20 முதல் 30 அறைகள் கொண்ட ஹோட்டல்களுக்கு மதுக்கூட அனுமதி வழங்கவும் முன்வந்துள்ளது.
இடம் தேடும் அதிகாரிகள்
இத்துடன், மால்கள், சூப்பர் மார்க்கெட்களிலும் விற்பனை செய்ய அனுமதிக்க அளிக்கப்பட உள்ளது. இதனால், கலால் துறை அதிகாரிகள், பெங்களூரு நகர் மற்றும் மாவட்ட மத்திய பகுதிகளில், ஒவ்வொரு மால்கள், சூப்பர் மார்க்கெட்களை ஆராய்ந்து வருகின்றனர்.
இதில், 7,500 சதுர அடி கொண்ட மால்களில், குறைந்தபட்சம் 11 ஆண்டுகள் குத்தகையில், மதுபான கடைகள் திறக்க திட்டமிட்டுள்ளது.
குடிகாரர்களின் கூடாரம்
அரசின் முடிவுக்கு, முன்னாள் முதல்வர் குமாரசாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, 'எக்ஸ்' வலைளத்தில் நேற்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
சட்டசபை தேர்தலுக்கு முன், கர்நாடகாவை அமைதி பூங்காவாக்குவதாக, காங்கிரசார் வாக்குறுதி அளித்தனர். வெற்றி பெற்ற பின், 'கர்நாடகா குடிகாரர்களின் கூடாரமாக' மாற்ற எண்ணுகின்றனர்.
கர்நாடகா அறிவியல், தொழில்நுட்பம், ஐ.டி., - பி.டி.,க்கு பிரசித்தி பெற்றது. தற்போது குடிகாரர்களின் கூடாரமாக்க, காங்கிரஸ் அரசு மாற்றுகிறது. திட்டங்களின் பெயரில், கொள்ளையடிக்க முற்பட்டுள்ளது. 'கிரஹ ஜோதி' திட்டம் என கூறி, தற்போது வீடு வீடாக 'மதுபான பாக்யா' அளிக்கின்றனர்.
பண பிசாசு அவதாரத்தை எடுத்துள்ள, கர்நாடக கலால் துறை, தன் வருவாயை அதிகரிக்க, புதிய மதுபான கடைகளுக்கு அனுமதி அளிக்க முன் வந்துள்ளது. இது காங்கிரஸ் அரசின் 'ஆறாவது வாக்குறுதி' திட்டம் என்கின்றனர்.
வாக்குறுதி திட்டங்களால், மக்களை ஏமாற்றுகின்றனர். இது போதாது என்று, கிராம பஞ்சாயத்துக்கு ஒன்று வீதம் மதுபான கடை திறக்க ஏற்பாடு செய்வது வெட்கக்கேடு.
பால், பருப்பு, உணவு தானியங்கள், தயிர் கிடைக்கும் சூப்பர் மார்க்கெட்டுகளில், மதுபானம் எளிதாக கிடைக்க அனுமதி அளிப்பது அருவருப்பாக இருக்கிறது. இதுதான் சமுதாயத்துக்கு செய்யும் நன்மையா.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
வாசகர் கருத்து (8)
டாஸ்மாக்.மாதிரி அங்கே காஸ்மாக் நு ஆரம்பிச்சுரலாம். பணம் கொட்டும். ஏழுவது தலைமுறைக்கு சொத்து ஆட்டையப் போடலாம்.
கனிமொழி ஆலோசனை வழங்கியிருப்பார்........இ வெ ரா வின் கொள்கை முதன்முதலாக அடுத்த மாநிலத்திற்கு கொண்டுபோயுள்ளனர்.......
சக்தி திட்டம்...கிரஹஜோதி...கிரஹலட்சுமி...அன்னபாக்யா...ஆனால் சிவசக்தி பெயருக்கு மட்டும் எதிர்ப்பு....
நல்லா பாத்துக்கோங்க. இதுதான் அண்ணா, ராமாசாமி ஆகியோரின் திராவிட மாடல். இந்த மாடல் இந்தியா முழுக்க பரவினால், இந்தியாவின் நிலைமை என்ன ஆவது ?? பார்த்தீனிய செடியை விட மிக கொடிய விஷயம், இந்தியா முழுவதும் பரவுகிறது. எச்சரிக்கை.
வாக்குறுதியாக சொல்லி ஓட்டு கேட்டிருக்கலாமே