Load Image
Advertisement

டவுட் தனபாலு

 Dout Dhanapalu    டவுட் தனபாலு
ADVERTISEMENT
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை: வரும், 2024 லோக்சபா தேர்தல், அடுத்த தலைமுறைக்கானது. மோடி தலைமையில், மீண்டும் ஊழலற்ற, நேர்மையான ஆட்சி அமைய மக்கள் ஆதரவு அளிக்க தயாராகி விட்டனர். வரும் தேர்தலில் தமிழகத்தில், 39 தொகுதிகளிலும், பா.ஜ., வெற்றி பெறும்.


டவுட் தனபாலு: பக்கத்துல இருக்கிற பாண்டிச்சேரியை ஏன் விட்டுட்டீங்க... 39 தொகுதிகள்லயும், பா.ஜ., ஜெயிக்கும் என்றால், லோக்சபா தேர்தலில், தமிழகத்தில் பா.ஜ., தனித்தே களம் காணும் என்ற முடிவை எடுத்துட்டீங்களா... இதற்கு, உங்க தலைமை சம்மதம் தந்துடுச்சா என்ற, 'டவுட்'கள் எழுதே!
தமிழக பா.ஜ., செயலர் அஸ்வத்தாமன்: தமிழகத்தில் எந்த ஒரு அரசு திட்டம் தொடங்குவது என்றாலும், முதலில் கோவில், ஹிந்து அறக்கட்டளைகளுக்கு சொந்தமான சொத்துக்களை குறிவைக்கும் பழக்கத்தை, தி.மு.க., அரசு நிறுத்த வேண்டும். தேவாலயங்களுக்கும், மசூதிகளுக்கும் சலுகைகளை வழங்கும் தி.மு.க., அரசு, ஹிந்துக்கள் என்று வந்து விட்டால், அவர்களது சொத்துக்களை தின்று தீர்ப்பதிலேயே குறியாக இருப்பது ஏன்?

டவுட் தனபாலு:
மற்ற மதங்களின் சொத்துக்களை நிர்வகிக்க, தனித்தனி அமைப்புகள் இருக்கின்றன... கோவில் சொத்துக்கள் மட்டும் தானே, அரசு வசம் உள்ளது... இப்பிரச்னைக்கு தீர்வு வேண்டும் என்றால், கோவில் சொத்துக்களையும், ஆன்மிக அமைப்புகளிடம் ஒப்படைக்க வேண்டும்... ஆனா, அதற்கு அரசு முன்வராது என்பதில், 'டவுட்'டே இல்லை!

தெலுங்கானாவில் செயல்படும், பாரத் ராஷ்டிர சமிதி கட்சியின் எம்.எல்.சி., கவிதா: லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில், மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேறியது வரலாற்று சிறப்புமிக்கது. இது, ஜனநாயகம், சமத்துவம் மற்றும் ஒவ்வொரு இந்தியப் பெண்ணின் அதிகாரத்திற்கும் கிடைத்த வெற்றி.

டவுட் தனபாலு:
உங்க தந்தை சந்திரசேகர ராவ், தெலுங்கானா முதல்வராகவும்; உங்க சகோதரர் ராமாராவ் அமைச்சராகவும் இருக்காங்க... ஆனா, உங்களுக்கு வெறும் எம்.எல்.சி., பதவி மட்டும் தானே தந்திருக்காங்க... அந்த விரக்தியில தான், உங்க தந்தையின் பரம வைரியான பா.ஜ., அரசின் மகளிர் மசோதாவுக்கு ஆதரவு தெரிவிக்கிறீங்களோ என்ற, 'டவுட்'தான் வருது!


வீட்டு வசதித் துறை அமைச்சர் முத்துசாமி: வீட்டு வசதித் துறை சார்பில் தமிழகத்தில் கட்டப்பட்ட வீடுகள், விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளன. இவற்றை பெற விரும்புவோர், உரிய முறையில் அணுகி பயன் பெறலாம். உரிய காலத்துக்குள் இந்த வீடுகள் விற்கப்படாமல் போனால், வாடகைக்கு விட நடவடிக்கை எடுக்கப்படும்.


டவுட் தனபாலு: முன்பெல்லாம், வீட்டு வசதி வாரியம் ஏழை, எளியவர்கள் வீடு வாங்குவதற்காக திட்டங்களை வகுத்து செயல்பட்டது... தற்போது, தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் பாணியில, லாபத்தை மட்டும் குறிக்கோளாக கொண்டதால் தான், நிறைய வீடுகள் விற்பனை ஆகாமல் தேங்கிஉள்ளன என்பதில், 'டவுட்'டே இல்லை!

உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள்: தமிழகத்தில், 60 சதவீதத்திற்கும் மேற்பட்ட அசைவ மற்றும் இறைச்சி கடைகளில், பதப்படுத்தி வைப்பதற்கான வசதி இல்லை. காலையில் வாங்கப்படும் இறைச்சி, இரவு வரை விற்பனைக்கு பயன்படுத்தப்படுகிறது. இவற்றை சாப்பிடுவதால் தான், பலருக்கு உடல் உபாதைகள் ஏற்படுகின்றன.



டவுட் தனபாலு: வாஸ்தவம் தான்... இரண்டு தலைமுறைக்கு முன்னாடி, ஹோட்டல்கள்ல சாப்பிடுவதை, மக்கள் கவுரவ குறைச்சலாகவே கருதினாங்க... தற்போது நடக்கிற சம்பவங்களை பார்த்தால், ஹோட்டல்களில் சாப்பிடுவதை, அதுவும் அசைவம் சாப்பிடுவதை அறவே தவிர்ப்பதே, நம் ஆரோக்கியத்துக்கு பாதுகாப்பு என்பதில், 'டவுட்'டே இல்லை!

தமிழக முதல்வர் ஸ்டாலின்: மகளிருக்கு இலவச பஸ் பயண திட்டத்தை நிறைவேற்றினோம். இதனால், பெண்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட சமூக, பொருளாதார மற்றங்கள் குறித்து, திட்டக் குழு அறிக்கை அளித்தது. அதன்பின்தான் அந்த திட்டத்தின் விரிந்த பொருள், அனைவரையும் சென்றடைந்தது. தற்போது, மகளிருக்கு 1,000 ரூபாய்
உரிமைத் தொகை வழங்கி வருகிறோம். இது, சமூகத்தில் ஏற்படுத்தும் மாற்றங்கள் குறித்தும் அறிக்கை கொடுக்கலாம்.


டவுட் தனபாலு: மகளிர் உரிமைத் தொகை திட்டம், பெண்கள் வாழ்க்கையில ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தி இருப்பதை, 'டவுட்'டே இல்லாம வரவேற்கலாம்... அதே நேரம், விண்ணப்பித்த பல லட்சம் பேருக்கு கிடைக்காத விரக்தி குறித்தும், அறிக்கை கேட்டு பெற்று, அதை சரி
செய்யவும் நடவடிக்கை எடுத்தால், தங்களை பாராட்டலாம்!


வாசகர் கருத்து (1)

  • Anantharaman Srinivasan - chennai,இந்தியா

    மகளிர் உரிமைத் தொகை மாதாமாதம் கிடைப்பதால் நகையை அடகு வைப்பது குறையும். அதனால் மார்வாடி வியாபாரம் பாதிக்கக்கூடும். Indirect டா குஜராத்திகள் மார்வாடிகள் மேல் தாக்குதலா.?

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement