சென்னை, கிண்டி நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையத்தில், நேற்று நெடுஞ் சாலைத் துறை ஆய்வுக் கூட்டம் நடந்தது. அதில், அமைச்சர் வேலு பேசியதாவது:
சாலைகளை பராமரிப்பு பணிகளில், அனைத்து பொறியாளர்களும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். பள்ளம் இல்லா சாலைகளாக பராமரிக்க வேண்டும்.
சாலைகளில் உள்ள வேகத்தடைகளை, வர்ணம் பூசி, தேவையான அறிவிப்பு பலகைகள் வைத்து, விபத்துகள் ஏற்படாத வகையில் பராமரிக்க வேண்டும்.
சாலையில் உள்ள மரங்களுக்கு, கருப்பு, வெள்ளை வர்ணம் அடிக்க வேண்டும். ஆபத்தான, உடையும் நிலையில் உள்ள மரக்கிளைகள் அகற்றப்பட வேண்டும்.
தற்போது நடந்து வரும் அனைத்து பணிகளையும், மழைக் காலம் துவங்குவதற்கு முன்பாக, அதாவது அக்டோபர் மாதம் முன்பாக முடிக்க வேண்டும்.
குடிநீர் வாரியம், மின்சார வாரியம், மெட்ரோ, கழிவு நீரகற்று வாரியம் போன்றவற்றுடன் ஒருங்கிணைந்து, சாலைகளில் தோண்டப்பட்ட பள்ளங்களில், மறு சீரமைப்பு பணிகள் முடிக்கப்பட வேண்டும்.
மழைக் காலத்தில் சுரங்கப் பாதைகளில் நீர் தேங்குவதை தவிர்க்க, தேவையான நீரேற்று பம்புகளை தயாராக வைத்திருக்க வேண்டும். சென்னையில் நடக்கும் சாலைப் பணிகளை, போர்க்கால அடிப்படையில், அடுத்த 15 நாட்களுக்குள் முடிக்க வேண்டும்.
கருணாநிதி நுாற்றாண்டு விழாவை கொண்டாடும் வகையில், 100 இடங்களில் மரக்கன்றுகள் நடுதல்; 100 இடங்களில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டங்கள்; 100 சிறு பாலங்களை புனரமைத்தல் போன்ற பணிகளை, திட்டமிட்டவாறு செயல்படுத்த வேண்டும்.
சாலைகளில் ஏற்படும் பாதிப்புகளை, நெடுஞ்சாலைத் துறைக்கு தெரிவிக்க, மொபைல் ஆப் எனப்படும் மொபைல் போன் செயலி விரைவில் அறிமுகம் செய்யப்படும்.
இவ்வாறு அமைச்சர் பேசினார்.
கூட்டத்தில், நெடுஞ்சாலைத் துறை செயலர் பிரதீப் யாதவ், சாலை மேம்பாட்டுத் திட்ட இயக்குனர் பிரபாகர் பங்கேற்றனர்.
வாரிய கூட்டம்
சென்னையில் நேற்று, தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் 95வது கூட்டம் நடந்தது.
இதில் பேசிய அமைச்சர் வேலு, ''தமிழகத்தில் உள்ள சிறு துறைமுகங்களை மேம்படுத்தவும், கடல்சார் வாரியத்தின் வளர்ச்சிக்கும், அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்'' என, வேண்டுகோள் விடுத்தார்.
வாசகர் கருத்து (8)
கைப்புண்ணுக்கு கண்ணாடி எதற்கு? எல்லா சாலைகளும் மோசம்தான். இதற்கு ஆப் ஒரு கேடா? ஆப் உருவாக்கத்திலும் கொள்ளையா?
மக்கள் சொல்லித்தான் தெரிய வேண்டுமா? சீட்டை தேய்த்துக்கொண்டு இருக்கும் இடத்தில் ஒப்பந்ததாரர்களிடம் கையூட்டு பெற்று தொந்தியை வளர்க்கும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள விதிமுறைகள் படி சாலைகள் போடப்படுகின்றனவா என கண்காணிப்பதும், உத்தரவாத காலத்தினுள் பழுதாகும் சாலைகளை ஒப்பந்தம் பெட்ரா நிறுவனத்தை கொண்டே சரிசெய்வதும் அவர்கள் அலுவல் இல்லையா? எவ்வழி நல்லவர் ஆடவர் (ஆள்கின்றவர்)
கமிஷன் வேண்டாம் தரம் சிறந்ததாக இருந்தால் மட்டுமே பணம் செலுத்தப்படும் என்று அதிகாரிகள் எழுத்து மூலம் அறிக்கை தருவாரா? தர கட்டுப்பாடு எப்படி செய்யப்படும்? எத்தனை நாட்களுக்கு தரமாக இருக்க வேண்டும்?
மதுரை திருமங்கலம் நகராட்சியின் பல புதிய கோமாளித்தனமான வேலைகள் - இஸ்ரோ சந்திராயன் மூன்றை விண்ணுக்கு அனுப்பி வல்லரசு நாடுகள் சாதிக்காததை செய்துகாட்டிக்கொண்டுள்ளது , ஆனால் திருமங்கலம் நகராட்சியின் கண்ண்டுபிடிப்புகளெல்லாம் கோமாளித்தனமாகவுள்ளது , ஆறுமுகம் நடுத்தெரு 9 ல் பழைய சாக்கடை கால்வாய் நன்றாக செயல்பட்டுக்கொண்டிருந்தது , மலை நீர் தெருவிலிருந்து நன்றாக வடிந்தது . இப்பொழுது நகராட்சி புதிய சாக்கடையை the தெருவின் தளத்திற்கு மேல் கட்டி - இதனால் வரும் பாதிப்புகள் பின்வருவன - ஒவொரு வீட்டுமனை கேட்டுகளை கால்வாயின் உயரத்திற்கு தகுந்தாற்போல் மாற்றிசெய்யவேண்டும் , சில வீடுகளிருந்து மழைநீரை வெளியேறாமல் நீரை வாரி இறைக்கும் அவலம் , சிலவீட்களிருந்து கழிவுநீர் புதிய வாய்க்காலுக்கு வாட்டமில்லாததால் கழிவுநீரை வெளியேற்றுவதற்கு மிகவும் சிரமம் . ஒவொரு வீட்டிற்கும் சுமார் ரூபாய் முப்பதாயிரம் செலவு ஒரு சிலவீடுகளுக்கு ஒரு லட்சம் செலவு இந்த புதிய கழிவுநீர் கால்வாயால் . ஏதோ ஒரு எஸ்டிமேட் அமௌண்ட்டை லட்சக்கணனாகில் போட்டு அதில் கவுன்சிலர் சேர்மன் மற்றும் நகராட்சியின் விஞ்சானிகளுக்கு கமிஸ்ஸிவ்ந்தான் இந்த கழிவுநீர் கால்வாயின் திட்டம் - தமிழக அரசு கவனத்திற்கு - சரியான மேலதிகாரிகளை அனுப்பி ஆய்வு செய்தால் பலவித மறைக்கப்பட்ட உண்மைகள் வெளிவரும் -
பெருந்துறை ஈரோடு நெடுஞ்சாலையில் கடந்த ஒரு வாரமாக தண்ணீர் 2அடி தேங்கி உள்ளது. இதை கவனிக்க யாரும் இல்லை