மாநகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் மேயர் இந்திராணி பொன்வசந்த், கமிஷனர் பிரவீன்குமார் முன்னிலையில் நடந்தது. இதில் கவுன்சிலர்கள் பேசியதாவது:
வாசுகி, மண்டலம் 1 தலைவர்: புதுநத்தம் ரோட்டில் பல இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. ரோட்டோர பள்ளங்களை மூட வேண்டும். சேதமுற்று கிடக்கும் சமுதாயக் கூடங்களை பராமரிக்க வேண்டும். அய்யர்பங்களா, மூன்றுமாவடிகளில் மாடுகள் தொல்லை அதிகம் உள்ளது. மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட் குண்டும் குழியுமாக உள்ளது.
கமிஷனர்: உரிமையாளர்கள் மாடுகளை ரோட்டில் விட்டு செல்கின்றனர். ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. இரண்டாவது முறை ரோடுகளில் அதே மாடுகள் சுற்றித்திரிந்தால் மாடுகள் பறிமுதல் செய்யப்படும். அவற்றை பராமரிக்க மாநகராட்சி சார்பில் கோ சாலை அமைக்க பரிசீலிக்கப்படுகிறது.
சரவண புவனேஸ்வரி, மண்டலம் 2 தலைவர்: வார்டு அலுவலகங்களில் யார் யார் பணியில் உள்ளனர் எனத்தெரியவில்லை. அனைத்து அலுவலகங்களிலும் பயோமெட்ரிக் வருகை பதிவு கொண்டுவர வேண்டும். மண்டல அளவில் அலுவலர் கூட்டம் நடத்த வேண்டும்.
பாமா முருகன்: வார்டுக்குள் சாக்கடை தான் ஓடுகிறது. குடிநீர் வரவில்லை. அதிகாரிகளே இல்லாமல் ரோடு அமைக்கும் பணி நடக்கிறது. கவுன்சிலருக்கும் தகவல் தெரிவிப்பதில்லை.
நாகஜோதி: என் வார்டிலும் இப்பிரச்னை உள்ளது. அதிகாரிகள் இல்லாமல் சிலர் ரோடு அமைக்கின்றனர். அதில் தரமில்லை. மக்கள் கவுன்சிலர்களிடமே புகார் அளிக்கின்றனர்.
முகேஷ் சர்மா, மண்டலம் 4 தலைவர்: மாநகராட்சியில் குடிநீர் பிரச்னையும், பாதாள சாக்கடை பிரச்னையும் அதிகம் உள்ளது. இப்பிரச்னையை சமாளிப்பதற்குள் கவுன்சிலர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது. கல்யாணம் காதுகுத்து நிகழ்ச்சிக்கு கூட வார்டுகளுக்குள் செல்ல முடியவில்லை. மக்கள் கேள்வி கேட்டு துளைக்கின்றனர். இப்பிரச்னையை தீர்க்க சிறப்பு அதிகாரி நியமிக்க வேண்டும்.
சண்முகவள்ளி: பிரச்னையை கேட்கிறீங்க. ஆனால் நடவடிக்கை இல்லை. என் வார்டில் 13 தெருக்களில் பாதாளச்சாக்கடை உடைந்து ஓடுகிறது.
(இதேபோல் கவுன்சிலர்கள் ரூபிணி, சோலை செந்தில், நாகஜோதி உள்ளிட்டோரும் ஒரே நேரத்தில் பேசியதால் கூச்சல் ஏற்பட்டது. அப்போது 'சத்தம் போடாமல் பிரச்னைகளை மட்டும் பேசுங்கள்' என மேயர் ஆவேசமானார்)
கமிஷனர்: அடுக்குமாடி குடியிருப்புகள் நகருக்குள் அதிகரித்து வருவதால் அதற்கேற்ப பாதாளச்சாக்கடை கட்டமைப்பு போதுமானதாக இல்லை. இதை சரிசெய்ய வேண்டும் இரண்டு தனியார் நிறுவனங்கள் அனைத்து வார்டுகளிலும் ஆய்வு செய்ய உள்ளன. அப்போது ஒவ்வொரு வார்டிலும் உள்ள பிரச்னைகளை கவுன்சிலர் தெரிவிக்கலாம்.
சோலைராஜா: சாக்கடை கலந்த குடிநீர் வருகிறது. செல்லுார், நரிமேடு, கீரைத்துறை பகுதிகளில் மட்டும் 30 பேர் காய்ச்சல், 40 பேர் மஞ்சள் காமாலையால் பாதித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். டெங்கு பாதிப்பு அதிகரிக்கிறது. உரிய தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்த வேண்டும். மழைநீர் செல்லும் கால்வாய்களை துார்வார வேண்டும்.
கமிஷனர்: கொசு மருந்து அடிப்பது உட்பட உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. காய்ச்சல் முகாம் நடத்தப்படுகிறது. டெங்கு கொசு இருப்பது தெரியவந்தால் அபராதம் விதிக்கப்படுகிறது.
வினோத்குமார், நகர்நல அலுவலர்: நகரில் நாள் ஒன்றுக்கு இரண்டரை மெட்ரிக் டன் குப்பை உரிய முறையில் அகற்றப்படுகிறது.
சோலைராஜா: மாநகராட்சி புதிய குடிநீர் இணைப்பு பெறுவதற்கான டெபாசிட் மற்றும் கட்டணத்தை குறைக்க வேண்டும். இதுகுறித்து கவுன்சிலர்களிடம் ஆலோசிக்க வேண்டும்.
கமிஷனர்: கவுன்சிலர்கள் கூட்டத்தில் ஒப்புதல் பெற்ற பின்னரே நடைமுறைக்கு வரும்.
போஸ்: வார்டுக்குள் நாய்த் தொல்லை அதிகரித்து வருகிறது. விபத்து ஏற்படுகிறது.
கமிஷனர்: நாய்கள் அதிகரிப்பை தடுப்பூசி மூலம் மட்டுமே கட்டுப்படுத்த முடியும். வெறிநாய் தடுப்பூசி செலுத்தும் முகாமும் நடக்கிறது. 166 நாய்களுக்கு ஒரே நாளில் தடுப்பூசி செலுத்தப்பட்டதுள்ளது.
பாஸ்கரன்: துாய்மை பணியாளர் போதிய எண்ணிக்கையில் இல்லை. புதிய ரோடு அமைக்க பூஜை முடிந்து பல மாதங்கள் ஆகியும் பணி துவங்கவில்லை.
இதற்கு நகர்ப் பொறியாளர் அரசு, 'விரைவில் பணி துவங்கும்' என்றார். அப்போது 'இதை தான் பல கூட்டங்களிலும் கூறினீர்கள். இப்போதும் அதே பதில்தானா' எனக் கூறிய அந்த கவுன்சிலர், கமிஷனரிடம் முறையிட்டார்.
n பாதாள சாக்கடைக்குள் இறங்கி பிரச்னையை சரிசெய்ய குஜராத்தில் இருந்து 'ரோபோட்டிக்' வண்டி வாங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு வாரத்தில் நகரில் முக்கிய பகுதிகளில் பாதாள சாக்கடைக்குள் உள்ள பிரச்னை சரிசெய்யப்படும் என கமிஷனர் தெரிவித்தார்.n தி.மு.க., கவுன்சிலர் துரைபாண்டி பேசும்போது பேப்பரில் எழுதி வைத்திருந்த 'கர்ணணே...கார்மேகமே...' என அமைச்சர் மூர்த்தியை புகழ்ந்து கவிதை வாசிக்க ஆரம்பித்தார் (மக்கள் பிரச்னையை பேசாமல் இப்படி நேரம் கடத்தலாமா என அ.தி.மு.க., கவுன்சிலர்கள் முணு முணுத்தனர்).n 'ஆட்டோமேட்டிக் பார்க்கிங் ஆப்' சேவை விரைவில் அமலுக்கு வருகிறது. இதன்மூலம் நகரில் 'பார்க்கிங்' வசதி எங்கே உள்ளது என தெரிந்து கொள்ளலாம். கட்டணம் முறைகேடுக்கும் தீர்வு கிடைக்கும் என கமிஷனர் தெரிவித்தார்.n கூட்டம் நடந்துகொண்டிருந்தபோது ம.தி.மு.க., கவுன்சிலர்கள் அக்கட்சி பொதுச் செயலாளர் வைகோ பிறந்தநாளை முன்னிட்டு மேயர், கமிஷனர், கவுன்சிலர்களுக்கு இனிப்பு, பேனா வழங்கினர்.n பெரும்பாலான பெண் கவுன்சிலர்கள் தங்களது வார்டில் குறைகளே இல்லாதது போல் கூட்டம் முடியும் வரை மவுனமாக இருந்தனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!