ADVERTISEMENT
சிங்கம்புணரி,-சிங்கம்புணரி தாலுகாவில் வேலை உறுதித் திட்டத்தில் சீமைக்கருவேல மரங்களை அகற்றாமல் துார்வாரும் பணி நடப்பதால் எந்தப் பயனும் இல்லை என விவசாயிகள் குமுறுகின்றனர்.
மத்திய அரசின் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் கண்மாய்த் தூர்வாரும் பணி நடக்கிறது. திட்ட பணியாளர்களைக் கொண்டு தினமும் குறிப்பிட்ட அளவு மண் எடுக்கப்பட்டு கரைகளில் போடப்படுகிறது. ஆனால் பெரும்பாலான கண்மாய்களில் கரை, வரத்துக்கால்வாய், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்துள்ளன.
இவற்றை அகற்றாமல் துார் வாருவதால் எந்தப் பயனும் இல்லை.
துார்வாரிய மண்ணை மீண்டும் சீமைக்கருவேல மரங்கள் அருகிலேயே கொட்டுகின்றனர். இவை பெரிய மரங்களாக இருப்பதால் வேலை உறுதித் திட்ட பணியாளர்களால் அவற்றை வெட்டி அகற்ற முடியவில்லை. இயந்திரங்கள் மூலம் மட்டுமே அகற்ற முடியும். சில ஊராட்சிகளில் இம்மரங்களின் ஏல வருமானத்தை கணக்கில் கொண்டு அவற்றை விட்டுவிட்டு துார் வாரும் பணியை செய்கின்றனர்.
இதனால் தண்ணீர் தேங்கும் பரப்பு குறைவதுடன் அடுத்த சில வாரங்களில் மீண்டும் வெட்டிய மண் பள்ளத்தில் மூடி பயனில்லாமல் போகும் நிலை உள்ளது.
எனவே சீமைக்கருவேல மரங்களை முழு அளவில் அகற்றிவிட்டு தூர்வாரும் பணியை செய்தால் தான் பயனுள்ளதாக இருக்கும் என்கிறார்கள் விவசாயிகள்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!