ஆபத்தை ஏற்படுத்தும் அரைவேக்காட்டு சிக்கன்; மதுரையில் 70 கிலோ அழிப்பு; 2 கடைகளுக்கு சீல்
மதுரை : மதுரையில் உள்ள ரோட்டோர கடைகள், உணவகங்களில் உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு செய்து 70 கிலோ சிக்கனை பறிமுதல் செய்து அழித்தனர். இரண்டு கடைகளுக்கு சீல் வைத்தனர்.
முழுமையாக வேகவைக்காத சிக்கன் மற்றும் இறைச்சி உணவுகளை சாப்பிடக்கூடாது என விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் நாகரிகம் என்ற பெயரில் இளையோர், மேற்கத்திய உணவு பழக்கத்தை கடைப்பிடிக்கின்றனர். ஷவர்மா என்ற பெயரில் சப்பாத்தியின் மேல் சரியாக வேகவைக்காத கோழி இறைச்சி வைத்து சுற்றித்தரப்படும் உணவுக்கு இளைஞர்கள் அதிகம் அடிமையாகி விட்டனர். இதனால் தமிழகத்தில் குறுகிய காலத்தில் ஷவர்மா கடைகள் பெருகியுள்ளன.
கேரளாவில் சில மாதங்களுக்கு முன் ஷவர்மா சாப்பிட்ட ஒரு மாணவி இறந்தார். தமிழகத்தில் நாமக்கல்லில் நேற்று முன்தினம் ஒரு பள்ளி மாணவி இறந்தார்.
வெந்தும் வேகாத அரைவேக்காட்டு இறைச்சி உணவை சாப்பிடுவதால் 'சிகெல்லா, இ கோலே' போன்ற நுண்கிருமிகள் வயிற்றுக்குள் சென்று பாதிப்பை ஏற்படுத்தும். ஒரு சிலருக்கு மரணத்தை ஏற்படுத்தி விடும் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர்.
நாமக்கல் மாணவி இறப்பைத் தொடர்ந்து மதுரையில் உணவு பாதுகாப்பு துறையினர் ரோட்டோர கடைகள், உணவகங்களில் ஆய்வு நடத்தினர். 98 கடைகளை ஆய்வு செய்தனர். சமைத்து 'பிரீசரில்' வைத்த சிக்கன், தடை செய்யப்பட்ட சிவப்பு நிறத்தை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட சிக்கன் இறைச்சி 70 கிலோவை பறிமுதல் செய்து அழித்தனர்.
மதுரை டவுன்ஹால் ரோட்டில் உள்ள இரண்டு கடைகளில் அதிகாரிகள் ஆய்வுக்கு சென்ற போது எலிகள் விளையாடிக் கொண்டிருந்தன. 'பிரீசரில்' ரைஸ் சிக்கன், நுாடுல்ஸ், ஷவர்மா சமைத்த உணவுகள் பாதுகாக்கப்பட்டிருந்ததை கைப்பற்றி அழித்தனர். சுகாதாரமில்லாத வகையில் செயல்பட்ட 2 கடைகளுக்கும் அதிகாரிகள் சீல் வைத்தனர். தொடர்ந்து பிற கடைகளிலும் அடுத்தடுத்து ஆய்வு செய்ய உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!