கல்வி அதிகாரி மீதான சிறை தண்டனைக்கு தடை உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரை : நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் திருச்செந்துார் கல்வி மாவட்ட முன்னாள் அலுவலர் லட்சுமணசாமிக்கு தனி நீதிபதி பிறப்பித்த சிறை தண்டனைக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இரு நீதிபதிகள் அமர்வு தடை விதித்தது.
துாத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் ஜான்சி ராணி. அதே பகுதியில் ஒரு அரசு உதவி பெறும் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக நியமிக்கப்பட்டார். இதை அங்கீகரித்து அதற்குரிய பணப்பலன்களை வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி ஜான்சிராணி உயர்நீதிமன்றக் கிளையில் மனு செய்தார். அங்கீகரிக்க தனிநீதிபதி 2019 ஜன.,28ல் உத்தரவிட்டார். இதை நிறைவேற்றாததால் திருச்செந்துார் கல்வி மாவட்ட அலுவலராக இருந்த லட்சுமணசாமி (தற்போது பணி ஓய்வு) மீது நீதிமன்ற அவமதிப்பின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என ஜான்சி ராணி மனு செய்தார்.
நீதிபதி பட்டு தேவானந்த் நேற்று காலை விசாரித்தார். லட்சுமணசாமி ஆஜரானார்.
நீதிபதி: அரசின் மேல்முறையீட்டு மனுவை இரு நீதிபதிகள் அமர்வு தள்ளுபடி செய்துள்ளது. 2019ல் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை இரண்டரை ஆண்டுகள் தாமதமாக அரசு தரப்பில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதனால் நீதிமன்ற அவமதிப்பின் கீழ் லட்சுமணசாமிக்கு 4 வாரங்கள் சிறை தண்டனை, ரூ.1000 அபராதம் விதிக்கப்படுகிறது என உத்தரவிட்டார். இதை எதிர்த்து உடனடியாக லட்சுமணசாமி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், டி.பரத சக்கரவர்த்தி அமர்வு தனி நீதிபதியின் உத்தரவை 8 வாரங்களுக்கு நிறுத்தி வைத்து இடைக்காலத் தடை விதித்தது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!