நியோமேக்ஸ் நிறுவன மோசடி சி.பி.ஐ.,விசாரணை கோரி வழக்கு
மதுரை : நியோமேக்ஸ் நிறுவன மோசடி வழக்கை சி.பி.ஐ.,விசாரணைக்கு மாற்றக் கோரிய மனு மீதான விசாரணையை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஒத்திவைத்தது.தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் கவுதமி தாக்கல் செய்த மனு:எனது கணவர் சிங்கப்பூரில் வேலை செய்கிறார். மதுரை எஸ்.எஸ்.காலனியை தலைமையிடமாகக் கொண்ட நியோமேக்ஸ் நிறுவனத்தில் நானும், உறவினர்களும் ரூ.1 கோடியே 5 லட்சம் முதலீடு செய்தோம். நிறுவனம் தரப்பில்,'பெரிய கம்பெனியில் முதலீடு செய்வோம்.
அதில் வரும் லாபத்தை உங்களுக்கு இரட்டிப்பாக வழங்குவோம். மதுரை, சிவகங்கை, துாத்துக்குடி மாவட்டங்களில் குறைந்த விலைக்கு நிலம் வாங்கி, மத்திய அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்வோம். அதில் தொழிற்சாலைகள் அமைத்து லாபத்தை உங்களுக்கு வழங்குவோம்,' என உறுதியளித்து பத்திரம் வழங்கினர். அதன்படி தொகையை வழங்கவில்லை. பலரை ஏமாற்றியுள்ளனர். பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். அரசின் உயர் பொறுப்பிலுள்ள சில அதிகாரிகளின் துணையுடன் நிறுவன நிர்வாகிகள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்க வாய்ப்புள்ளது. வழக்கு விசாரணையை சி.பி.ஐ.,க்கு மாற்றி உத்தரவிட வேண்டும். இவ்வாறு கவுதமி குறிப்பிட்டார்.
நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன் விசாரணையை செப்.,27க்கு ஒத்தி வைத்தார்.
கடந்த 30-35 வருடங்களில் பற்பல நிதி நிறுவன மோசடி வழக்குகளில் முதலீட்டாளர்களுக்கு எந்த நிவாரணமும் கிடைத்ததாக தகவல் இல்லை. இதிலிருந்து தற்போதைய சட்டங்கள் "உதவாக்கரை" சட்டங்களாக உள்ளதை நீதிமன்றங்களே வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. இது நிதி மோசடி குற்றவாளிகளை ஊக்குவித்து, நாளுக்கு நாள் எண்ணிக்கையை அதிகரிக்கிறது.