ADVERTISEMENT
ராமநாதபுரம் : -டெல்லியில் நடந்த விஸ்வர்கமா திட்ட தொடக்க விழாவில் பங்கேற்ற ராமநாதபுரம் மாவட்ட மீனவர்களை பா.ஜ., சார்பில் வரவேற்று பாராட்டினர்.
இந்தியாவின் பாரம்பரிய தொழில்களான மண் பாண்டம் தயாரித்தல், மீன்பிடி தொழில், பனை ஓலை பொருட்கள் தயாரிப்பு, சலவைத் தொழிலாளர், பொற்கொல்லர், தையல்காரர், பூமாலை கட்டுவோர் போன்ற கைவினை கலைஞர்களை ஊக்குவிக்கும் பொருட்டு மத்திய அரசின் சிறு, குறு நடுத்தர தொழில் அமைச்சகம் விஸ்வகர்மா திட்டத்தை செயல்படுத்துகிறது.
இதன் துவக்க விழா புது டெல்லியில் செப்.17 ல் நடந்தது. இதில் ராமநாதபுரம் மாவட்டத்தில் திருவாடானை தாலுகா வட்டாணம் அருகே தாமோதரபட்டினம் பகுதியை சேர்ந்த மீன் வலை பின்னும் தொழிலாளர் பழனிவேல், ராமேஸ்வரம் நடராஜபுரத்தை சேர்ந்த மீனவர் சம்மேளன உறுப்பினர் கருப்பசாமி ஆகியோர் பங்கேற்றனர்.
இதில் கைவினைஞர்களுக்கான அடையாள அட்டை வழங்கப்பட்டது. இந்த அட்டை வைத்திருப்பவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும். தொழில் சார்ந்த கருவிகளை வாங்க 15 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும். தொழில் செய்ய ரூ.1 லட்சம் வட்டியில்லா கடன், 2 வது தவணையாக ரூ.2 லட்சம் 5 சதவீதம் வட்டியில் வங்கிக் கடன் வழங்கப்படும்.
இத்திட்டத்தில் பயன் பெற்று சொந்த ஊர் திரும்பிய பழனிவேல், கருப்பசாமி ஆகியோரை பா.ஜ.,மாவட்டத்தலைவர் தரணி முருகேசன் வரவேற்று பாராட்டினார்.
பழனிவேல் கூறுகையில், இந்தியாவில் பாரம்பரிய தொழில்கள்,
அது சார்ந்த துணைத் தொழில்கள் அழிவின் விளிம்பில் சென்றுவிடாமல் இருக்க பிரதமர் மோடி தலைமையில் மத்திய சிறு, குறு, நடுத்தர தொழில்கள் அமைச்சகம் செயல்பட்டு வருகிறது.
இத்திட்டத்தால் நாடு முழுவதும் பாரம்பரிய தொழில்கள் பாதுகாக்கப்பட்டுள்ளது, என்றார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!