தமிழகத்தில் முன்னாள், இன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் மீது சொத்து குவிப்பு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில், வருமானத்துக்கு அதிகமாக, அரசியல் பிரபலங்கள் சொத்து குவித்தது குறித்து, லஞ்ச ஒழிப்புத் துறையில், முதல் தகவல் அறிக்கைகள் தனித்தனியாக பதிவு செய்யப்பட்டு உள்ளன.
இதில், பெரும்பாலான முதல் தகவல் அறிக்கைகள், பொது மக்கள் பார்வைக்கு வந்துள்ளன. இந்த அறிக்கைகளை ஆய்வு செய்ததில், பெரும்பாலானோர் தங்கள் குடும்பத்துக்கு சம்பந்தம் இல்லாத, அதே நேரம் பெரிய வருமான ஆதாரம் இல்லாத வெளிநபர்கள் பெயரில், உயர் மதிப்பு சொத்துக்களை வாங்கியது தெரியவந்துள்ளது.
இந்தச் சொத்துக்களை, அவர்களிடம் இருந்து குறைந்த விலைக்கு, தங்கள் மாமனார், மாமியார் அல்லது அவர்களின் சகோரர்கள் பெயருக்கு பதிவு செய்கின்றனர். அவர்களிடம் இருந்து, தங்கள் வாரிசுகள் பெயருக்கு, அந்த சொத்துக்கள், 'செட்டில்மென்ட்' பத்திரம் வாயிலாக மாற்றப்படுகின்றன.
குடும்ப உறுப்பினர்களுக்கு இடையிலான சொத்து பரிமாற்றம் என்ற அடிப்படையில், இதற்கு ஒரு சதவீதம் முத்திரைத் தீர்வையும், ஒரு சதவீதம் பதிவு கட்டணம் மட்டுமே விதிக்கப்படுகிறது. சொத்தின் மதிப்பு, எப்படி வாங்கப்பட்டது என்பது போன்ற விஷயங்களை, பதிவுத்துறை ஆராய்வதில்லை. அரசியல் பிரபலங்கள் முறைகேடாக சொத்து குவிக்கும் இந்த வழிமுறையை, எப்படி தடுப்பது என்ற கேள்வி எழுந்துள்ளது.
பதிவுத் துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: செட்டில்மென்ட் பத்திரங்களை பதிவு செய்யும் தற்போதைய நடைமுறைகளின்படி, அதன் பின்னணி குறித்து, எங்களால் விசாரிக்க முடியாது.அதில், விற்பனைக்கான முகாந்திரம் எதுவும் உள்ளதா என்று தான் பார்க்கிறோம். தற்போது இருக்கும் சட்ட விதிகளின்படி, செட்டில்மென்ட் பத்திரங்களை கட்டுப்படுத்த வழி தெரியவில்லை. மோசடி பத்திரங்கள் ரத்து சட்டத் திருத்தம் போன்று, செட்டில்மென்ட் பத்திரங்கள் தொடர்பான, பல்வேறு குழப்பங்களுக்கு தீர்வு காண, அரசு சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர் வி.கோபாலகிருஷ்ணன் கூறியதாவது:அரசியல் பிரபலங்கள் மட்டுமல்லாது, உயர் அதிகாரிகளும் தற்போது, இந்த வழிமுறையை கடைபிடிக்கத் துவங்கியுள்ளனர். இதில் பெரும்பாலான இடங்களில், வழிகாட்டி மதிப்பை விட,குறைந்த மதிப்பில் தான் சொத்துக்களை பதிவு செய்கின்றனர். இந்த பத்திரங்களை மேல்முறையீட்டுக்கு அனுப்பும் போது, வேறுபாடு தொகையை, இவர்கள் செலுத்தி விடுகின்றனர். முத்திரை தீர்வை வசூலானால் போதும் என்ற எண்ணத்தில், பதிவுத் துறை அதிகாரிகளும் மவுனமாகி விடுகின்றனர்.
வழிகாட்டி மதிப்பை விட குறைவான மதிப்புக்கு தாக்கலாகும் பத்திரங்கள் குறித்தும், அதை விற்பவர், வாங்குபவரின் வருவாய் நிலவரம் குறித்தும், வருமான வரித்துறை விசாரித்தால், பல மோசடிகள் அம்பலமாகும். அரசியல் பிரபலங்களின் உறவினர்கள், பெரிய வருமான ஆதாரம் இன்றி, புதிய சொத்துக்களை வாங்குவது எப்படி; அந்த சொத்து, ஏன் குறிப்பிட்ட சில வாரிசுகள் பெயருக்கு மட்டும் மாற்றப்படுகிறது என்பது விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை, பெரம்பூரை சேர்ந்த தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர், பி.கல்யாண சுந்தரம் கூறியதாவது:முன்னாள், இன்னாள் அமைச்சர்கள் பலரும், ஊழல் வாயிலாக வெளியாட்கள் பெயரில் வாங்கிய சொத்துக்களை, 'செட்டில்மென்ட்' பத்திரம் வாயிலாக, தங்கள் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வருகின்றனர். இதில், லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை, ஒரு கட்டத்துக்கு மேல் நகர்வதில்லை.'செட்டில்மென்ட்' பத்திரம் வாயிலாக, அரசியல் பிரபலங்களின் வாரிசுகள் பெயருக்கு கைமாறும் சொத்துக்கள் தொடர்பாக, முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -
வாசகர் கருத்து (6)
வருமான வரி துறை அனுமதி பெற வேண்டும் என்று விதி இருக்க வேண்டும்
சொத்துக்கள் வாங்குவதில் கணக்கில் காட்டாத பணம் கைமாறுகின்றது.விற்பவர்களுக்கு கொடுக்கும் தொகைக்கு பாத்திரங்கள் எழுதுவது இல்லை.எனவே சொத்து கைமாறியதும் விற்றவர் எவ்வளவு தொகையை பெற்றார் என்பதை புலனாய்வு செய்து நடவடிக்கை எடுத்தால் கருப்பு பணம் ஒழிக்கப்படலாம்.
Guide line value
இது ஒரு நாடகம்
செட்டில்மென்ட் என்றாலும் ஆதார் இணைத்து தானே செய்யப்படுகிறது? ஆதாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட சொத்துக்களை கணக்கெடுத்தால் ஒரே பெயரில் எவ்வளவு சொத்துக்குக்கள் வாங்கப்பட்டன்ன என்று தெரிந்துவிடும்? இது அதிகாரிகளுக்கு தெரியாத விஷயமா? கமிஷன் / உயிர் பயம் தான் கண்களை மூடுகிறது.
ஓரு சொத்து வாங்கும்பொழுது வருமான வரி துறையிடம் நோ அப்ஜெக்சன் வாங்கிய பிறகுதான் ரிஜிஸ்டர் பண்ணவேண்டும் என்ற முறை வந்தால்தான் லஞ்சம் ஒழியும். செட்டில்மெண்ட் பத்திரம் அண்மையில் வாங்கி ய சொத்தாக வருமான துறையிடம் அனுமதி வாங்கிய பிறகுதான் மாற்றும் வழிவகை செய்யவேண்டும்.