மதுரையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு: சிகிச்சையில் 14 பேர்
மதுரை : மதுரையில் நேற்று புதிதாக 5 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். மொத்தம் 14 பேர் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.
மதுரையில் டெங்கு வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கிராமம், நகர்ப்புறம் வேறுபாடின்றி எல்லா பகுதிகளிலும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். மதுரை மக்கள் தொகையுடன் ஒப்பிடும் போது இந்த எண்ணிக்கை மிக மிக குறைவு தான். மக்கள் பயப்படாமல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என மதுரை மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் குமரகுரு தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது:
மாவட்டத்தில் உள்ள 88 ஆரம்ப சுகாதார மையங்களில் 31 நகர்ப்புறத்தில் உள்ளது. டெங்கு காய்ச்சல் ஆண்டு முழுவதும் பரவும் நிலையாக மாறி விட்டது. வீடுகளில் தண்ணீர் பற்றாக்குறையால் எல்லா பாத்திரங்களிலும் தண்ணீர் பிடித்து மூடாமல் இருப்பது கொசுக்களின் இனப்பெருக்கத்திற்கு முக்கிய காரணம். இரண்டாவதாக மழை தொடர்ந்து பெய்யாமல் விட்டு விட்டு பெய்யும் போது சுற்றுப்புறங்களில் கிடக்கும் டயர், சிரட்டை, பேப்பர் கப்களில் தேங்கியுள்ள தண்ணீர் மூலம் கொசுக்களின் உற்பத்தி அதிகரிக்கும். சுகாதாரப் பணியாளர்கள் மூலம் வீடுகளில் உள்ள பாத்திரம், தண்ணீர்த் தொட்டிகளில் கொசுப்புழு உள்ளதா என கண்டறிந்து மருந்து ஊற்றி அழிக்கிறோம். சுற்றுப்புறங்களில் நுாறு நாள் பணியாளர்கள் மூலம் குப்பை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளோம். அதுதவிர 14 மொபைல் யூனிட்கள் மூலம் காய்ச்சல் முகாம்களை நடத்தி வருகிறோம். ஒரே பகுதியில் 3 பேருக்கு மேல் காய்ச்சல் இருந்தால் அங்கு முகாம் அமைத்து சிகிச்சை அளிக்கிறோம். பொதுமக்கள் வீட்டையும், சுற்றுப்புறத்தையும் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். காய்ச்சலுக்கு கை வைத்தியம் பார்க்காமல் ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனையை அணுக வேண்டும் ,என்றார்.
கூடுதல் படுக்கைகள் தயார்
மதுரை அரசு மருத்துவமனை 223 பி சிறப்பு வார்டில் 30 நோயாளிகள் சிகிச்சை பெறும் வசதி உள்ளது. டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்ததால் அருகிலுள்ள 223 வது மருத்துவப் பிரிவு வார்டில் உள்ள 40 படுக்கைகள், பெண்கள் வார்டிலுள்ள 40 படுக்கைகள் தயார் நிலைக்கு மாற்றப்பட்டுள்ளன. குழந்தைகள் வார்டில் யாரும் சிகிச்சையில் இல்லை.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!