இந்தியாவுக்கு புதிய சக்தி
எஸ்.ராதா, தொழில் அதிபர், ராமநாதபுரம்: லோக்சபாவில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதா கொண்டு வரப்பட்டது பெண்களுக்கு கிடைத்த மகத்தான வெற்றி. பெண்களுக்கான அங்கீகாரம் தற்போது தான் கிடைத்துள்ளது. சந்திராயன் நிலவில் தரையிறங்கியதை கொண்டாடிய போது என்ன மகிழ்ச்சி அடைந்தோமோ அதே மகிழ்ச்சியை தற்போது அனுபவிக்கிறேன்.
எல்லா துறைகளிலும் பெண்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். தற்போதைய மசோதாவால் அரசியல் உரிமையும் கிடைக்கப்பெற்றுள்ளது மகிழ்ச்சியை அளிக்கிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைய வாய்ப்பு உள்ளது.
மென்மை கலாசாரம் விட்டு வெளி வருவார்கள்
டாக்டர் எம்.எஸ்.சுஜாதா, சித்த மருத்துவர், அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை, ராமநாதபுரம்: பெண்களுக்கு கிடைத்த பெருமையாக இதை நினைக்கிறேன். இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள மசோதா நாரி சக்தி வந்தன் விதேயக்' பெண்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம். பாரதியின் சொல்லுக்கேற்ப
மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையை கொளுத்துவோம்' பாரதியின் கனவு நனவாகியுள்ளது.
பாரதிதாசனும் பெண்கள் முன்னேற்றம் குறித்து தெரிவித்துள்ளார். இந்த மசோதா மூலம் பெண்கள் தலை நிமிர்ந்து நிற்கின்றோம்.
பெண்களை மதிப்புடன் நடத்துவதற்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழி வகுத்துள்ளது. பெண்கள் தாங்கள் மென்மையானவர்கள் என்ற கலாசாரத்தை விட்டு வெளியே வருவார்கள்.
'நிமிர்ந்த நன்னடையும் நேர் கொண்ட பார்வையும், நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும், திமிர்ந்த ஞான செருக்கும் இருப்பதால் செம்மை மாதர் திறம்புவதில்லையாம்,' என்ற வரிகளுக்கு ஏற்ப பெண்களுக்கான இட ஒதுக்கீடு கிடைத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.
பெண்களின் குரல் ஓங்கி ஒலிக்கும்
ஆர்.வெண்சிலா, உதவிப் பேராசிரியர், சி.எஸ்.ஐ., கல்வியியல் கல்லுாரி, ராமநாதபுரம்: இன்றைய காலக்கட்டத்தில் பெண்கள் அனைத்து துறைகளிலும் சாதித்து வருகின்றனர். பெண்கள் மீதான தாக்குதல், பாலியல் தொந்தரவுகள் குறைந்தபாடில்லை. ஆண்களுக்கு சமமாக உரிமை வழங்க வேண்டும் என பல்வேறு பெண்கள் அமைப்புகள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றன.இந்நிலையில், லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தலில் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை பார்லிமென்டில் சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் தாக்கல் செய்துள்ளதை வரவேற்கிறோம்.
இதன் மூலம் சட்டசபை, பார்லிமென்டில் பெண்களின் குரல் ஓங்கி ஒலிக்கும். தற்போதைய 33 சதவீதம் இட ஒதுக்கீடு சட்ட மாசோதாவிற்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு தர வேண்டும். இச்சட்டத்தை அனைத்து மாநிலங்களிலும் முழுமையாக அமல்படுத்துவதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்.
சட்டம் குறித்து கிராமப்புற பெண்கள் உட்பட அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் மத்திய, மாநில அரசுகள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். எதிர்காலத்தில் 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
ஆண்களுக்கு நிகர் பெண்கள்
ஆர்.பிரபாவதி, வக்கீல், பரமக்குடி: நேற்று புதிய பாராளுமன்றத்தில் லோக்சபா, சட்டசபை தேர்தலில் 33 சதவீதம் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது என்னைப் போன்றவர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி அளித்துள்ளது. நாட்டின் வளர்ச்சியில் பெண்கள் பங்களிப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்து இந்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இது குறித்து பல ஆண்டுகளாக விவாதம் நடக்கும் நிலையில் தற்போது மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் மூலம் அனைத்து நிலைகளிலும் பெண்கள், ஆண்களுக்கு நிகராக முன்னேற்றம் அடைய முடியும். மேலும் பெண்கள் தங்களுடைய உரிமைகளைப் பெற உதவியாக இருக்கும்.
சாதனை புரிய ஊக்கம்
அ.பாலகோமதி, ஐ.டி.,கம்பெனி ஊழியர், முதுகுளத்தூர் : அறிவியல் ஆராய்ச்சி, விமானப்படை, போலீஸ், தனியார் நிறுவனங்களில் ஆண்களுக்கு நிகராக அனைத்து துறைகளிலும் பெண்கள் சாதித்து வருகின்றனர். தற்போது லோக்சபா, சட்டசபையில் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்து நிறைவேற்றப்பட்டு இருப்பது வரவேற்கத்தக்கது.
இந்த மசோதா பெண்களை அனைத்து துறைகளிலும் சாதனை புரிய ஊக்கப்படுத்தும்.
2010ம் ஆண்டில் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டு தற்போது சட்டமாக இயற்றப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. மசோதாவை விரைவில் நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும்.
50 சதவீதம் வேண்டும்:
எஸ்.புவனேஸ்வரி, தனியார் நிறுவன பணியாளர், திருவாடானை:பெண்களுக்கு 33 சதவீதம் இட ஓதுக்கீடு அளித்து மசோதா தாக்கல் செய்யப்பட்டது மிகவும் வரவேற்கத்தக்கது. பெண்கள் முன்னேற்றத்திற்கு நிறைய தடைகள் இருக்கிறது. அந்த தடைகளை தாண்டி செயல்பட இந்த இட ஒதுக்கீடு பெண்களுக்கு நல்ல வாய்ப்பாகும்.
என்னைப் பொறுத்தவரை பெண்களுக்கான இட ஒதுக்கீடு 33 சதவீதம் என்பதை விட 50 சதவீதமாக இருக்க வேண்டும் என்பதே எனது கருத்து. எல்லாத் துறைகளிலும் பெண்கள் தங்கள் திறமையை நிரூபிக்கிறார்கள். இட ஒதுக்கீடு என்பது பெண்களுக்கான சலுகை இல்லை. இது பெண்களுக்கான சம உரிமை. பெண்களை அதிகாரப்படுத்தினால் தான் சமூகம் வளரும். நாடு வளர்ச்சி பெறும்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!