8 ஷவர்மா கடைகளில் 47 கிலோ கெட்டுப்போன சிக்கன் அழிப்பு
விருதுநகர், : விருதுநகர் மாவட்டத்தில் ஷவர்மா, சிக்கன் கடைகளில் நடந்த சோதனையில் 8 கடைகளில் கெட்டுப்போன 47 கிலோ சிக்கன் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. கடை உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கி எச்சரிக்கை விடப்பட்டது.
நாமக்கல்லில் ஷவர்மா சாப்பிட்ட பள்ளி மாணவி பலியானார். இதன் காரணமாக விருதுநகர் மாவட்ட ஷவர்மா, சிக்கன் உணவு வினியோக கடைகளில் உணவு பாதுகாப்புத்துறையினர் சோதனை செய்தனர்.
விருதுநகர், சாத்துார், ஸ்ரீவில்லிபுத்துார், அருப்புக்கோட்டை பகுதிகளில் உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் செல்வராஜ் தலைமையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஷவர்மா, சிக்கன் கடைகளில் ஆய்வு செய்தனர்.
இதில் 34 கடைகளில் ஆய்வு செய்ததில் 8 கடைகளில் 47 கிலோ கெட்டுப்போன சிக்கன் இருப்பது கண்டறியப்பட்டது. அதை பறிமுதல் செய்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பினாயில் ஊற்றி அழித்தனர். விருதுநகர் பழைய பஸ் ஸ்டாண்டை சுற்றி உள்ள 15 கடைகளில் மட்டும் 9 கிலோ அழிக்கப்பட்டுள்ளது.
அருப்புக்கோட்டை கடைகளில் 23 கிலோ வரை அழிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு அபராதமும், நோட்டீஸூம் வழங்கப்பட்டுள்ளது. இன்றும்(செப்.20) ஆய்வுகள் தொடரும் என உணவுப்பாதுகாப்புத்துறையினர் தெரிவித்தனர்.
கலெக்டர் ஜெயசீலன் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: ஷவர்மா, துரித உணவு கடைகளில் கெட்டுப்போன சிக்கன் இருப்பது உணவு பாதுகாப்புத்துறை சோதனையில் கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!