ADVERTISEMENT
அமுதா, ஆடிட்டர், விருதுநகர்: இட ஒதுக்கீடு வரவேற்கதக்கது. பெண்கள் எடுக்கும் முடிவுகள் எப்போதும் எல்லா வகை மக்களுக்கும் நன்மை பயக்கும். தற்போது இந்த இட ஒதுக்கீடால் ஒவ்வொரு விஷயத்தை சாராமல் தனித்துவமான முடிவெடுக்கும் திறன் பெண்களுக்கு வரும். பெண்களின் சிந்தனைகள் எப்போதும் ஆக்கப்பூர்வமாக இருப்பதால் அவர்கள் எடுக்கும் ஒவ்வொரு முடிவுமே ஒரு சில நலன்களை நோக்கி செல்வதால் அதனால் கிடைக்கும் பலன்கள் நிறைய பேரை போய் சேரும். தலைமை பொறுப்பு, அதிகாரத்திற்கு உட்பட்ட பணிகள் என மக்கள் பணியில் பெண்கள் வரவுள்ளதால் சமூகத்திலும் மாற்றம் ஏற்படும். தமிழகத்தில் பதவியில் இருக்கும் நிறைய பெண்கள் நல்ல முடிவை எடுத்து பல செயல்பாடுகளில் தனித்துவமாக நின்றுள்ளனர். நாளை வரும் நாள் முன்னேற்றத்திற்கானது என பெண்கள் சபதமேற்க இந்த இட ஒதுக்கீடு வழி வகுக்கும் என நம்புகிறேன்.
கலைச்செல்வி, பேராசிரியை, தேவாங்கர் கலை கல்லூரி அருப்புக்கோட்டை: இது புதிய வரலாற்றின் துவக்கம். நாட்டில் உள்ள பெண்களுக்கு மகிழ்ச்சிகரமான செய்தி 1990 ல் இந்த மசோதா பல்வேறு காலகட்டங்களில் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட போதும், அது வெற்றியடையாமல் இன்று வரை கிடப்பிலேயே இருந்து தற்போது வரலாற்றின் சிறப்பு மிக்க மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 33 சதவீத இட ஒதுக்கீட்டை நிறைவேற்றுவதன் மூலம் இந்தியாவின் வளமான ஜனநாயகத்திற்கு வலுவான சக்தியை மேலும் வழங்குவதாக இது அமையும். பெண்களுக்கு அதிகாரம் அளித்தல் மூலம் அவர்களின் கால் நூற்றாண்டு கனவு நிறைவேற வாய்ப்பு உள்ளது.-
கார்த்திகை ராணி, ஆசிரியை, காரியாபட்டி: பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு நீண்ட நாள் கோரிக்கை. தற்போது பார்லியில் மசோதா தாக்கல் செய்திருப்பது வரவேற்கத்தக்கது. கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றில் பெண்கள் மேம்பாடு அடைய இட ஒதுக்கீடு பெரிய அளவில் உதவும். இட ஒதுக்கீடு அறிவுப்போடு மட்டும் இல்லாமல் அதனை தொடர்ந்து செயல்படுத்தக்கூடிய வகையில் இருக்க வேண்டும். அனைத்து செயல்பாடுகளிலும் பெண்களுடைய பங்கேற்பு மிக முக்கியமான ஒன்றாக இருந்து வருகிறது. பாராளுமன்றம், சட்டசபையில் பெண்களின் குரல் ஓங்கி ஒலிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
சூரிய பிரியதர்ஷினி, மாணவி, ராஜூக்கள் கல்லுாரி, ராஜபாளையம்: பெண்களின் நிலையை மேம்படுத்துவதற்கான மத்திய அரசின் நடவடிக்கையே இது. மக்களுக்கு சேவை செய்யவும் பெண்கள் தேர்தல் அரசியலுக்கு நுழையவும் கிடைத்துள்ள அங்கீகாரம். தயக்கமின்றி பொதுவெளியில் கல்வி, வேலை உள்ளிட்ட நடைமுறைகளுக்கு வெளிவந்த சூழல் தற்போது ஆட்சி புரிவதற்கான அங்கீகரமாக மாறி உள்ளது. இது மகளிரிடையே அதிக மன தைரியத்தை ஏற்படுத்தும்.
ஜி.சுந்தரி, டெய்லர், சாத்துார்: பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வரவேற்க கூடியது. பல வருடங்களாக பெண்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படாத நிலையில் இந்த மசோதா பெண்களுக்கு ஒரு உத்வேகத்தை தரும். பலமுறை இந்த மசோதா நிறைவேற்ற படும் என்று எதிர்பார்ப்பில் பெண்கள் அனைவரும் காத்திருந்தனர். ஏமாற்றமே மிஞ்சியது. புதிய பாராளுமன்றத்தில் முதல் மசோதாவாக இதை நிறைவேற்றுவது மேலும் சிறப்புக்குரியதாகும். 33 சதவீத இட ஒதுக்கீடு பெண்களின் உரிமைக்கான கனவாகும். இதை அனைத்து எதிர்கட்சிகளும் ஆதரித்து நிறைவேற்றி தர வேண்டும் என்றார்.
டாக்டர், ஜே. ஷோபனா, சிவகாசி: தற்போது எந்தத் துறையாக இருந்தாலும் அதில் பெண்கள் சாதனை புரிகின்றனர். அதே சமயத்தில் எந்தத் துறைகளாக இருந்தாலும் பெண்களுக்கு சம உரிமை என கூறுவர். ஆனால் செயல்படுத்துவதில்லை . இந்நிலையில் லோக்சபா, சட்டசபையில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்க பார்லியில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது வரவேற்கத்தக்கது. இதன் மூலம் மற்ற துறைகளைப் போலவே அரசியலிலும் அதிக அளவில் பெண்கள் சாதிக்க வாய்ப்பு ஏற்படும்.
தேவதர்ஷினி, கல்லூரி மாணவி, ஸ்ரீவில்லிபுத்துார்: புதிய பாராளுமன்ற கட்டடத்தில் முதல் மசோதாவாக பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதா கொண்டு வந்து நிறைவேற்றி இருப்பது வரவேற்கத்தக்கது. இதன் மூலம் பெண்களுக்கு மேலும் சமுதாயத்தில் அந்தஸ்து உயர்ந்து, தலை நிமிர்ந்து நடக்க வாய்ப்பு உள்ளது. இந்திய திருநாட்டில் பெண்கள் சமுதாயம் மேலும் உயர்வடைய இந்த இட ஒதுக்கீடு பேருதவியாக இருக்கும். எதிர்கால பெண் சமுதாயம் சிறப்பானதாக அமையும். இதனை வரவேற்கிறேன்.
பெண்கள் சமுதாயத்தை உயரச் செய்யும்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!