ADVERTISEMENT
சிவகாசி : சிவகாசி அருகே நாரணாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட இடத்தில் குடியிருப்புகளுக்கு மத்தியில் குப்பைகளை கொட்ட வந்த மாநகராட்சி வாகனத்தை நாரணாபுரம் ஊராட்சி தலைவர் சிறைபிடித்தார்.
சிவகாசி அருகே நாரணாபுரம் ஊராட்சி ரத்தினா நகரில் இருந்து பாறைப்பட்டி செல்லும் ரோட்டில் மாநகராட்சியில் சேகரிக்கப்பட்ட குப்பைகள், வாகனங்கள் மூலமாக கொண்டு வந்து இரு நாட்களாக இரவில் கொட்டப்பட்டது. இதனால் அப்பகுதியில் உள்ள ஆர்.சி.எஸ்., நகர், சரஸ்வதி நகர், ரத்தினா காலனி குடியிருப்புவாசிகள் துர்நாற்றத்தினால் பெரிதும் அவதிப்பட்டனர். இது குறித்து அவர்கள் ஊராட்சித் தலைவர் தேவராஜனிடம் புகார் தெரிவித்தனர். இந்நிலையில் நேற்று அதேபோல் குப்பை கொட்ட வந்த மாநகராட்சி வாகனத்தை நாரணாபுரம் ஊராட்சி தலைவர் சிறை பிடித்து, குப்பை கொட்ட விடாமல் தடுத்தார். மேலும் அங்கு வந்த மக்கள் இங்கு கொட்டப்பட்டுள்ள குப்பைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மாநகராட்சி சுகாதார அலுவலர் அபூபக்கர் சித்திக், ஏற்பாட்டில் குப்பைகள் இங்கு கொட்டப்பட்டது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய பின்பு குப்பைஅகற்றப்படும் என உறுதியளித்த பின்னர் வாகனம் விடுவிக்கப்பட்டது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!