சிவகாசி : ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் விலை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தும் யானையால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை என குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.
சிவகாசி ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஆர்.டி.ஓ., விஸ்வநாதன் தலைமையில் நடந்தது. நேர்முக உதவியாளர் ஆனந்தராஜ், தலைமை உதவியாளர் அகஸ்தீஸ்வரன் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் நடந்த விவாதம்
ரமேஷ், ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் பெரியகுளம் கண்மாயில் சீமை கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆர்.டி.ஓ.,: மாவட்டம் முழுவதும் நீர்நிலைகளில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். விரைவில் சீமை கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். பாரம்பரிய முறையில் பயிர், காய்கறி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு பரிசு வழங்கப்படுகிறது. அதில் முதல் பரிசாக ரூ.15 ஆயிரம், இரண்டாவது பரிசாக ரூ.10 ஆயிரம் வழங்கப்படும்.
விஜயகுமார், திருத்தங்கல்: திருத்தங்கல் பெரியகுளம் கண்மாயில் இருந்து உறிஞ்சி குளம் கண்மாய் செல்லும் நீர்வரத்து ஓடையில் கழிவுகள் கலப்பதால் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. நீர் வரத்து கால்வாயை சிமென்ட் கால்வாயாக மாற்ற வேண்டும்.
கால்நடை துறை உதவி இயக்குனர் ராஜேஸ்வரி: கால்நடைத்துறை சார்பில் செப். இறுதி வரை கால்நடைகளுக்கு இலவசமாக செயற்கை கருவூட்டல் சிகிச்சை அளிக்கப்படுகிறது. தேசிய கால்நடை திட்டத்தில் ஆடுகள் வளர்க்கும் விவசாயிகளுக்கு 59 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. மாவட்டத்தில் 34 பயனாளிகள் இத்திட்டத்தில் விண்ணப்பித்து உள்ளனர். அனைவரும் இத்திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.
வேளாண் விற்பனை குழு அலுவலர் திருப்பதி: வேளாண் விற்பனை ஒழுங்குமுறை கூடங்கள் வாயிலாக பாசிப்பயறு ரூ.85.50க்கு கொள்முதல் செய்யப்படுகிறது.
அம்மையப்பன், சேத்துார்: நாட்டு மாடுகளுக்கு கால்நடை துறையினர் காப்பீடு செய்ய மறுப்பதால் நாட்டு மாட்டு இனங்கள் கருவூட்டலுக்கு மருந்துகள் கிடைப்பதில்லை. இதனால் நாட்டு மாடுகள் இனம் அழியும் நிலையில் உள்ளது.
முத்துகுமார், ஆணையூர்: சிவகாசி அருகே ஆணையூரில் பல ஆண்டுகளாக விவசாயிகள் பயன்படுத்தி வந்த தானிய உலர் களம் உள்ள பகுதியை சுற்றி தனியார் சார்பில் கம்பி வேலி அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் உலர் களத்தை பயன்படுத்த முடியாமல் விவசாயிகள் பாதுகாக்கப்பட்டு உள்ளனர்.
வடிவேல், தாசில்தார்: அப்பகுதியில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
அம்மையப்பன், தேவதானம்: ராஜபாளையம் அருகே சேத்துார், தேவதானம் மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதிகளில் ஒற்றை யானை விளை நிலத்திற்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருவதால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் யானையை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கார்த்திக் ராஜா, ரேஞ்சர்: காட்டு யானைகளின் நடமாட்டம் குறித்து வனத்துறை சார்பில் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
அம்மையப்பன், ஸ்ரீவில்லிபுத்துார்: குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் அளிக்கும் புகார் மனுக்களுக்கு உரிய தீர்வு கிடைப்பதில்லை. குறைதீர் முகாம் என்பதற்கு பதில் குறை கேட்கும் கூட்டம் என மாற்றி விடலாம்.
ஆர்.டி.ஓ: உங்களின் கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். சட்டத்திற்கு உட்பட்டு மட்டுமே நடவடிக்கைகள் எடுக்க முடியும். பதிலில் திருப்தி இல்லை என்றால் புகார் அளிக்கலாம். விதிகளில், திட்டங்களில் இல்லாத ஒன்றை அதிகாரிகளால் செயல்படுத்த முடியாது, என்றார்.
இவ்வாறு விவாதம் நடந்தது. தாசில்தார்கள் செந்தில்குமார், முத்துமாரி, வடிவேல் வேளாண், தோட்டக்கலை, மின்வாரியம் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!