சிவகங்கை : சிவகங்கை அருகே சாலுாரில் நேற்று பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்ததால் 50 ஏக்கரில் பயிரிட்ட வாழை, கரும்பு, 30 மரங்கள், 25 மின்கம்பங்கள் சேதமானது.மேல, கீழசாலுார் மக்கள் மின்வெட்டில் தவிக்கின்றனர்.
சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, திருப்புவனம் தாலுகாவில் அதிகளவிலும், மானாமதுரை, இளையான்குடி, தேவகோட்டையில் ஆங்காங்கே வாழை சாகுபடி செய்துள்ளனர். மாவட்ட அளவில் 1,200 எக்டேரில் விவசாயிகள் கிணற்று பாசனம் மூலம் வாழை பயிரிட்டுள்ளனர். நேற்று முன்தினம் மாலை 4:00 மணிக்கு தொடர்ந்து பலத்த மழை பெய்தது.
அதிகபட்சமாக காளையார்கோவிலில் 50.20, சிவகங்கையில் 42.40 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
சாலுாரில் காற்றுடன் மழை
சிவகங்கை ஊராட்சி ஒன்றியம் சாலுார் ஊராட்சிக்கு உட்பட்ட கீழ, மேல சாலுார் மற்றும் கூட்டுறவுபட்டி, மேலப்பூங்குடி உள்ளிட்ட பகுதிகளில் சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இப்பகுதியில் விவசாயிகள் நடவு செய்திருந்த வாழைகள் முற்றிலும் சேதமானது. கரும்பு முற்றிலுமாக உடைந்துவிட்டது.
பலத்த காற்று வீசியதால் கீழ, மேல சாலுார் பகுதியில் 30க்கும் மேற்பட்ட மரங்களும், 25 மின்கம்பங்கள் உடைந்து சேதமானது. இதனால், சாலுாரில் நேற்று முன்தினம் இரவு முழுவதும் மின்வெட்டு நிலவியது.
மின்வாரியத்தினர் முதலில் சாலுார் குடியிருப்புகளில் உள்ள மின்கம்பங்களை சரிசெய்து, மின்சப்ளை செய்வதெனவும், அதற்கு பின் விவசாய நிலங்களில் சாய்ந்த மின்கம்பங்களை புதிதாக வைத்து மின்வினியோகம் செய்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
சூறாவளி காற்றுக்கு 15 க்கும் மேற்பட்ட விவசாயிகள் தாங்கள் நடவு செய்திருந்த வாழை மரங்கள் முற்றிலும் சாய்ந்துவிட்டதாக கலெக்டர் ஆஷா அஜித்திடம் புகார் அளித்தனர். குறிப்பாக தென்னை மரங்கள் பிற மரங்களும் சாய்ந்து விவசாயிகளுக்கு இழப்பை ஏற்படுத்தியுள்ளது.
எக்டேருக்கு ரூ.13,500 இழப்பீடு
சிவகங்கை தோட்டக்கலை துணை இயக்குனர் சக்திவேல் கூறியதாவது, காற்று, மழைக்கு 33 சதவீதத்திற்கு மேல் சேதமாகியுள்ள வாழைக்கு எக்டேருக்கு ரூ.13,500 இழப்பீடு வழங்கப்படும். இதற்கான ஆய்வு பணி நடைபெற்று வருகிறது, என்றார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!