ஹெல்மெட் அணிந்து டூவீலர் ஓட்டுங்கள் போலீசாருக்கு எஸ்.பி. அறிவுரை
ஸ்ரீவில்லிபுத்தூர், : மாவட்டத்தில் போலீஸ் துறையில் பணியாற்றும் போலீசார் முதல் அதிகாரிகள் வரை அனைவரும் ஹெல்மெட் அணிந்து டூ வீலர் ஓட்டுவது அவசியம் என விருதுநகர் எஸ்.பி. சீனிவாச பெருமாள் அறிவுறுத்தி உள்ளார்.
மாவட்டத்தில் போக்குவரத்து விதிமீறல்களை கட்டுப்படுத்த தினமும் போலீசார் ஒவ்வொரு ஊரிலும் வாகன சோதனை செய்து வருகின்றனர். தினமும் நகரின் முக்கிய பகுதிகளிலும், சிக்னல்களில் நின்று கொண்டும் ஹெல்மெட் அணியாதவர்கள், அதிவேகத்திலும், குடிபோதையிலும் டூவீலர்களை ஓட்டுபவர்கள், லைசன்ஸ் இல்லாமல் டூவீலர் ஓட்டும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆகியோர்களுக்கு போக்குவரத்து போலீசார் மட்டுமின்றி சட்டம் ஒழுங்கு போலீசாரும் அபராதம் விதித்து வருகின்றனர்.
இருந்தபோதிலும் மாவட்டத்தில் தொடர்ந்து டூ வீலர் விபத்துக்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறைந்த பட்சம் தினமும் ஒரு உயிர் பலி என்ற நிலை மாவட்டத்தில் பரவலாக காணப்படுகிறது.
இந்நிலையில் போலீஸ் துறையில் பணியாற்றும் போலீசார் முதல் உயர் அதிகாரிகள் வரை பல்வேறு அதிகாரிகள் ஹெல்மெட் அணியாமல் டூவீலர் ஓட்டுவதாக பொதுமக்கள் தரப்பில் புகார் எழுந்து வருகிறது.
இதனையடுத்து போலீஸ் துறையில் பணியாற்றும் அனைவரும் ஹெல்மெட் அணிந்து டூவீலர் ஓட்டுவது அவசியம், இதனை டி.எஸ்.பி.க்கள் கண்காணிக்கவும், ஹெல்மெட் அணிந்து டூ வீலர் ஓட்டுவேன் என போலீசார் உறுதிமொழி எடுக்கவும் எஸ்.பி., சீனிவாச பெருமாள் அறிவுறுத்தியுள்ளார். அதன்படி கடந்த இரண்டு நாட்களாக மாவட்டத்தின் பல்வேறு ஸ்டேஷனில் போலீசார் உறுதிமொழி எடுத்து வருகின்றனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!