ADVERTISEMENT
பெங்களூரு : 'யுனெஸ்கோ'வின் உலக பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில், கர்நாடகாவின் ஹொய்சாளா கோவில்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
முன்னர், கர்நாடகாவை பல மன்னர் வம்சத்தினர் ஆண்டனர். அவர்களில் ஹொய்சாளா வம்சத்தினர் சிற்ப கலைக்கு முன்னுரிமை வழங்கி, கோவில்கள் கட்டி வணங்கினர். அந்த வகையில், ஹாசனின் பேலுார், ஹலேபீடு மற்றும் மைசூரின் சோமநாதபுராவில் புகழ்பெற்ற கோவில்கள் உள்ளன.
பேலுாரில் உள்ள சென்னகேசவா கோவிலும்; ஹலேபீடுவில் உள்ள ஹொய்சாளேஸ்வரா கோவிலும், 12ம் நுாற்றாண்டில் விஷணுவர்த்தனா என்ற மன்னர் காலத்தில் கட்டப்பட்டுள்ளது. இதுபோன்று, மைசூரின் சோமநாத்பூரில் காவிரி ஆற்றங்கரையில், 13ம் நுாற்றாண்டில் மூன்றாவது நரசிம்மா காலத்தில் சென்னகேசவா கோவில் கட்டப்பட்டது.
இந்த மூன்று கோவில்களும் மிகவும் கலை நயமிக்க சிற்பங்கள் கொண்டுள்ளதால், கண்களுக்கு விருந்தளிக்கின்றன. இவற்றை யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் சேர்ப்பதற்கு இந்திய அரசு சிபாரிசு செய்திருந்தது.
ஆய்வு செய்த யுனெஸ்கோ, நேற்று முன்தினம் பாரம்பரிய பட்டியலில் சேர்ப்பதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தது. ஹொய்சாளா கோவில்கள் ஏப்ரல் 2014 முதல் யுனெஸ்கோவின் தற்காலிக பட்டியலில் இருந்தன. தற்போது யுனெஸ்கோ நிரந்தர பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.
இது குறித்து, 'எக்ஸ்' சமூக வலைதளத்தில், பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிடுகையில், 'ஹொய்சாளா கோவில்கள் காலத்தால் அழியாத அழகும், இந்தியாவின் வளமான கலாசார பாரம்பரியத்திற்கும், நம் முன்னோர்களின் அசாதாரண கைவினைத் திறனுக்கும் சான்றாகும். யுனெஸ்கோ பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் சேர்த்திருப்பது நாட்டிற்கு மேலும் பெருமை சேர்த்துள்ளது' என தெரிவித்துள்ளார்.
இந்த மூன்று ஹொய்சாளா கோவில்களும் ஏற்கனவே இந்திய தொல்லியல் துறையின் பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்களாகும்.
''உலக பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் கர்நாடகாவின் ஹொய்சாளா கோவில்கள் இடம் பெற்றுள்ளது மகிழ்ச்சியும், பெருமையும் அளிக்கிறது,'' என, முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
இதன் வாயிலாக, இந்த கோவில்களை பார்க்க வரும் சுற்றுலா பயணியரின் எண்ணிக்கை அதிகமாகும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!