Load Image
Advertisement

தலைகீழாகுமா காங்கிரசின் கணக்கு?

சட்டசபை தேர்தலில் கிடைத்த வெற்றி, லோக்சபா தேர்தலிலும் தொடர வேண்டும் என்பது, காங்கிரசின் விருப்பம். ஆனால் இந்த விருப்பத்துக்கு, பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி முட்டுக்கட்டை போடும் என, அரசியல் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கர்நாடகாவுக்கு, நடப்பாண்டு மே மாதம் நடந்த சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் 135 தொகுதிகளை கைப்பற்றி, அமோக வெற்றி பெற்றது. பெரும்பான்மையுடன் ஆட்சி பீடத்தில் அமர்ந்தது. இரண்டாவது முறையாக, முதல்வர் பதவியில் அமர்ந்த சித்தராமையா, உற்சாகத்துடன் ஆட்சி நடத்தி வருகிறார். வாக்குறுதி திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

மற்றொரு பக்கம், துணை முதல்வர் சிவகுமார், பெங்களூரு மாநகராட்சி தேர்தல், லோக்சபா தேர்தலுக்கு கட்சியை தயாராக்கி வருகிறார். மாவட்ட சுற்றுப்பயணம் செய்து, கட்சியை பலப்படுத்துவதில் ஈடுபட்டுள்ளார். அந்தந்த மாவட்டங்களில், பா.ஜ., - ம.ஜ.த., அதிருப்தி தலைவர்களுக்கு வலை விரித்து, காங்கிரசில் சேர்க்கிறார்.

சட்டசபை தேர்தலில் கிடைத்த வெற்றி, லோக்சபா தேர்தலிலும் தொடர வேண்டும் என்பது, காங்கிரஸ் தலைவர்களின் எண்ணமாகும். 20 தொகுதிகளை குறி வைத்துள்ளது. தகுதியான வேட்பாளர்களை தேடுகின்றனர். பல்வேறு தொகுதிகளில் காங்கிரஸ் சீட்டுக்கு, பலத்த போட்டி ஏற்பட்டுள்ளது.

வாக்குறுதி திட்டங்களை செயல்படுத்துவதால், அரசு மற்றும் கட்சியின் இமேஜ் அதிகரித்துள்ளது. இதை சாதகமாக பயன்படுத்தி, லோக்சபா தேர்தலில் அதிக தொகுதிகளை கைப்பற்ற, காங்., தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் ராகுல் திட்டமிட்டுள்ளனர்.

வாக்குறுதி திட்டங்களால் மக்களுக்கு கிடைத்துள்ள பயன்கள் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தி கட்சியை பலப்படுத்தும்படி, மாநில தலைவர்களுக்கு உத்தரவிட்டுள்ளனர்.

இம்முறை லோக்சபா தேர்தலில், அதிக தொகுதிகளை கைப்பற்ற காங்கிரஸ் திட்டமிட்ட நிலையில், பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி பேச்சு நடப்பது, காங்கிரசுக்கு பேரிடியாக உள்ளது. தங்கள் கணக்கு தவறாகுமா என்ற பீதி, காங்கிரசை வாட்டி வதைக்கிறது. குறிப்பாக இந்த கூட்டணி, முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமாருக்கு, பிரச்னையாக இருக்கும்.

பழைய மைசூரு பகுதியில், ம.ஜ.த., ஆழமாக வேரூன்றியுள்ளது. பெரும் தொண்டர் படை வைத்துள்ளது. இந்த பகுதியில் காங்கிரசுக்கு, வலுவான தலைமை இல்லை. பா.ஜ.,வுடன் சேர்ந்தால், ம.ஜ.த.,வின் சக்தி அதிகரிக்கும். 2019ல் காங்கிரஸ் - ம.ஜ.த., கூட்டணியை விட, பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி வலுவாக இருக்கும் என, கூறப்படுகிறது.

இதற்கு முன், காங்கிரஸ் - ம.ஜ.த., கூட்டணி அமைந்த போது, மேலிட அளவில் முடிவு செய்யப்பட்டது. மாநில அளவில் முடிவானதல்ல. எனவே இரு கட்சிகளுக்கும் ஒத்து போகவில்லை. ஆனால் பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி அப்படி அல்ல. மாநில அளவில் ஆலோசிக்கப்பட்டு, மேலிட அளவில் முடிவாகிறது.

சட்டசபை தேர்தலில், காங்கிரசுக்கு கிடைத்த வெற்றியை, 2024ல் தொடர விடக்கூடாது என, பா.ஜ., - ம.ஜ.த., உறுதி பூண்டுள்ளன.

இவ்விரு கட்சிகளின் கூட்டணி, முக்கிய சமுதாயங்களான வீர சைவ லிங்காயத், ஒக்கலிகரை ஒருங்கிணைக்க உதவியாக இருக்கும். தங்களின் ஓட்டு வங்கியுடன், மோடி அலையும் வேலை செய்தால், ஓட்டுகளை அள்ளலாம் என, அரசியல் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி பேச்சு நடக்கும் என, எதிர்பார்க்காத காங்கிரஸ் தலைவர்கள், தற்போது அதிர்ச்சியில் உள்ளனர்.

எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்தாலும், நாங்களே வெற்றி பெறுவோம் என, வெளியே கூறினாலும், உள்ளுக்குள் இரு கட்சிகளின் கூட்டணியை நினைத்து, காங்கிரசார் நடுங்குகின்றனர். தங்களின் கணக்கு தலை கீழாகுமோ என்ற அச்சம், அவர்களை வாட்டி வதைக்கிறது.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement