நான் ராஜா... நான் ராஜா.. எப்போதும் நான் ராஜா!
கடந்த 2019ல் காங்கிரஸ் - ம.ஜ.த., கூட்டணி கவிழ்ந்து பா.ஜ., ஆட்சிக்கு வந்தது. அப்போது கட்சியின் விதியை மீறி 77 வயதான எடியூரப்பா முதல்வர் ஆக்கப்பட்டார். இதனால் கட்சிக்குள் இருக்கும் அவரது எதிர்ப்பாளர்கள் எரிச்சல் அடைந்தனர். முதல்வர் பதவியில் இருந்து இறக்க, கங்கணம் கட்டி திரிந்தனர்.
மேலிடத்துக்கு அழுத்தம் கொடுத்து, ஒருவழியாக இரண்டு ஆண்டுகளுக்கு பின்பு, பதவியில் இருந்து இறக்கி விட்டனர். அவரும், கண்ணீருடன் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அதன்பின்னர் அவரது மவுசு மெல்ல குறைய ஆரம்பித்தது.
சட்டசபை தேர்தலிலும் பெரிய அளவில், அவரை மேலிடம் பயன்படுத்தவில்லை. அவரது ஆதரவாளர்கள் பெரும்பாலோனோருக்கு 'சீட்' கிடைக்கவில்லை. இதனால் கட்சி மீது அதிருப்தியில் இருந்தவர், தீவிர அரசியலில் இருந்து சற்றே ஒதுக்கி இருந்தார். இந்நிலையில் கர்நாடகா சட்டசபை தேர்தலில் பா.ஜ., தோற்று போனது. எடியூரப்பாவை புறக்கணித்ததே தோல்விக்கு காரணம் என்று, அவரது ஆதரவாளர்கள் சொல்ல ஆரம்பித்தனர்.
பீனிக்ஸ் பறவை
சட்டசபை தேர்தல் முடிந்து நான்கு மாதங்கள் ஆகியும், பா.ஜ., இன்னும் எதிர்க்கட்சி தலைவரை தேர்வு செய்ய முடியாமல் திணறுகிறது. எடியூரப்பாவை போல ஆளுங்கட்சியை விமர்சித்து பேச, சரியான தலைவரும் இல்லை. இந்நிலையில் அடுத்த ஆண்டு நடக்கவுள்ள, லோக்சபா தேர்தலில் வென்று, ஆளுங்கட்சியான காங்கிரசுக்கு அதிர்ச்சி கொடுக்க பா.ஜ., மேலிடம் நினைக்கிறது.
இப்போது இருக்கும் தலைவர்களை நம்பி, களத்தில் இறக்கினால் பயன் இல்லை என்பதை உணர்ந்த மேலிடம், எடியூரப்பா கையில் பொறுப்பை ஒப்படைத்துள்ளது. மேலிடம் உத்தரவின்படி, எடியூரப்பா மீண்டும், தீவிர அரசியலில் ஈடுபட ஆரம்பித்து விட்டார். அரசுக்கு எதிரான சுற்றுப்பயணத்தை எடியூரப்பா தலைமையில், பா.ஜ., தலைவர்கள் மேற்கொள்ள உள்ளனர். இது, அவரது எதிர்ப்பாளர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்து உள்ளது.
எவ்வளவு தான் அடித்தாலும், 'பீனிக்ஸ்' பறவை போல எழுந்து வந்து விடுகிறாரே என்று பேச, ஆரம்பித்து உள்ளனர். நான் ராஜா... நான் ராஜா... எப்போதும் நான் ராஜா... என்ற பாடல் வரிக்கு ஏற்றார்போல, அரசியலில் 2.0 வெர்ஷனாக எடியூரப்பா உருவெடுத்துள்ளார். 'இனி, அவரை கட்டுப்படுத்துவது கடினம்' என்றே, ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
- நமது நிருபர் -
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!